சிவபுராணம் பாடல் 9
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
பொருள்:
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,
உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !
குறிப்பு:
1. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு, அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.
2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.
3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப் பரவுகின்றது.
இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.
4. சேய்மை - தொலைவு; நணியது - அருகில் இருப்பது; மாற்றம் - சொல்.
திருச்சிற்றம்பலம் !!!