வரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வராஹி
நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய
அம்பிகையின் வடிவம் வாராஹி.
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என்று நான்மறைகள் செப்பி உயர்த்தியது அன்னையின் திருநாமமே.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி வழிபாடு சிறப்பாக நடக்கிறது.
ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராஹியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் வராஹி அம்மனை"ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம்' என்று வர்ணிப்பர்.
தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராஹி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர்.
மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோயிலில் உண்டு.
எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில்
விநாயகரை வணங்குவதே மரபு.
இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராஹியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள்.
சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை.
இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது.
கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது.
சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி.
ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பார்..
இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.
தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ வாராஹியின் அருள் பெற்றே
ராஜ ராஜ சோழன் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் என்கிறது வரலாறு.
ஸ்ரீ வாராஹிக்கு உகந்ததாக இரவு நேர வழிபாட்டைச் சொல்வர்.
எனவே, இருள் கவ்விய மாலை வேளையில், இங்குள்ள வாராஹியை தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்தத் தலம் தவிர, தமிழகத்தில் வேறெங்கும்
வாராஹியின் சந்நிதியைக் காண்பதுஅரிது!
வாராஹியின் சந்நிதியில் கண்ட அரிய காட்சி அன்னைக்கு பூமின் கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழகு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை அன்னைக்குப் படைத்துப் பிரசாதமாக வாங்கிச் செல்வது விசேஷம் என்றுதெரிவித்தார்கள்.
திருவாணைக்கா: ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயிலை சக்தி பீடங்களுள் ஒன்றாக ஸ்ரீ வாராஹி பீடமாகப் போற்றப்படுகிறது.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
வராக (பன்றி) முகம், மூன்று கண்கள் மற்றும் எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள் ஸ்ரீ வாராஹி. தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கட்கம் (கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை மற்றும் அபய – வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள். நீல நிற மேனியளான இந்த தேவி சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்த நவரத்தினக் கிரீடம் அணிந்தவளாக சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள் என்கின்றன புராணங்கள்.
இன்னும் சில நூல்கள், “நான்கு திருக்கரங்கள் மற்றும் இரண்டு கண்கள் கொண்டவளாக, கருப்பு நிற ஆடை உடுத்தி வராக சக்கரத்தில் வீற்றிருப்பாள். இவளின் திருக்கரங்களில் கலப்பை, உலக்கை ஆகிய ஆயுதங்கள் மற்றும் அபய – வரத முத்திரையுடன் திகழ்பவள்!’’என்று வர்ணிக்கின்றன.
காசி: நகரில் ஸ்ரீ வாராஹிக்கு மிகப் பெரிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாகவே (5.30 மணிக்குள்) ஸ்ரீ வாராஹிக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரங்களும் சிறப்புற நடைபெறுகின்றன.
அப்போது, ஸ்ரீ வாராஹிக்கு மூன்று வித ஆரத்திகள் எடுத்து பூஜிக்கின்றனர்.
இதை தரிசித்தால் பெரும்பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.
தவிர, இங்குள்ள ஸ்ரீ வாராஹி தேவியை துவாரங்களின் வழியாகத்தான் தரிசிக்க இயலும்.
சந்நிதிக்கு மேற்புறம் உள்ள துவாரத்தை (பாதாள அறையைத் திறப்பது போல்) திறந்து காண்பிக்கிறார்கள்.
இந்த இடத்தில் இருந்து அம்பாளின் பாதங்களை மட்டுமே தரிசிக்க முடியும். இதையடுத்து, மற்றொரு துவாரத்தின் வழியாகப் பார்த்தால்,
வாராஹியின் நின்ற திருக்கோலத்தை முழுவதுமாகத் தரிசிக்கலாம். இங்கு, ஸ்ரீ வாராஹி உக்கிரமாகத் திகழ்வதால்தான் இப்படியொரு விசேஷ ஏற்பாடு என்கின்றனர்.
“வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.
நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும்.
நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும்,
கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும்,
குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்த்லுள்ள இலுப்பைக்குடியில் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில்
சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹிசிற்பம் இருக்கிறது.
பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள்.
இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு.
இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.
அமிர்தக் கடலின் மத்தியில் கற்பகவிருஷங்கள் நிறைந்த தோப்பில் உள்ள ரத்னத் தீவில் கடம்பமரங்கள் நிறைந்த உத்தியானவனம் (நந்தவனம்) உள்ள சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவில் அமைந்த சிம்மாஸனத்தில் அம்பிகை காமேசருடன் கூடி வீற்றிருக்கிறாள்.
இது தேவியின் வாசஸ்தலம் என்பார்கள். சிந்தாமணி கிருஹம் என்பார்கள் இதை. இந்தச் சிந்தாமணி கிருஹத்தைத் தான் விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தார்
சிந்தாமணி ரத்தினத்தால்
ஈச்வரி லலிதா தேவியின் கிருஹம்
நாலுபுறம் வாசல் உண்டதற்குச்சியில்
ஞானரத்னத்தாலே மகுடம்
வலப்புறத்திலே மந்திரிணியின் கிருஹம்
வாராஹிக்கிடப்புறம் பதினாறாம் பிராஹாரத்தில்
சேநாநாயகியான தண்டினியான வாராஹியும்,வசிப்பார்கள். –
சோபனம் சோபனம்
ஆஷாட நவராத்திரியின் பிரதான தெய்வம் ஸ்ரீ வாராஹி தேவி.
ஆஷாட நவராத்திரி (ஆனி மாதம்)
ஆஷாட நவராத்திரி உலக வளமைக்காகவும், தானியங்கள் செழிக்கவும், செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டு நடத்தப்படுவது.
ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள்
மிகவும் மேன்மையானவர்.
அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவர்.
வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அருளுபவள்.
தமது கரங்களில் விவசாயம் சம்பந்தமான தொழில்கள்
மேம்பாடு அடைய ஏர்கலப்பையும், உலக்கையையும் ஏந்தியவள்.
கால கணிதப்படி - வெள்ளைப் பன்றி உருக்கொண்டு இந்த பூவுலகை அரக்கர்களிடமிருந்து மீட்ட - ஸ்வேத வராஹ கல்பத்தில், வராஹி தேவி வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
சாந்திரமான கால கணித முறைப்படி ஆஷாட மாதத்தில் வரும் பஞ்சமி திதி ஸ்ரீ வாராஹி தேவியை வழிபட உகந்தது.
ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களின் மத்தியில் அமையும் ஒரு நாள் - நடு நாள் - ஐந்தாம் நாள் - பஞ்சமி திதி - ஸ்ரீ வாராஹி தேவியை வழிபாடு செய்வது வளங்கள் அனைத்தையும் தந்திடும். (ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாய நம:)
நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி.
மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹி தேவி.
ஸ்ரீ வாராஹியின் பனிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை
ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள்.
- பஞ்சமீ
- தண்டநாதா
- ஸங்கேதா
- ஸமயேஸ்வரி
- ஸமயஸங்கேதா
- வாராஹி
- போத்ரிணி
- சிவா
- வார்த்தாளி
- மஹாசேனா
- ஆக்ஞா சக்ரேஸ்வரி
- அரிக்னி
ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்து முடித்தபின் தான் ஆவரண பூஜை பூர்த்தியாகும்.
பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போற்றுகின்றது.
சாரதா (புரட்டாசி) நவராத்திரி என்றால் கொலு எனும் சிறப்பு அமைப்பு கொண்டு அம்பிகையை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் (ரங்கோலி) இட்டு வழிபடுவது சிறப்பு அம்சமாகும்
ஓம் நமசிவாய
Tags :
Varagi , Sri Varagi Devi , devi , varagi