ஹயக்ரீவர் வழிபாடு

0

ஹயக்ரீவர் வழிபாடு....





கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும்.

அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும்.

பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர்.

மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள்.

அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும்.
இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்::

வசையில் நான்மறை கெடுத்த
அம்மல ரயற்கருளி முன்பரி முகமாய்
இசைகொள் வேதநூ லென்றிலை
பயந்தவனே எனக்கருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில்சூழ்
திருவெள்ளறை நின்றானே!
எனக் கூறப்பட்டுள்ளது. பரிமுகன், அஸ்வ சிரவா என்றும் ஹயக்ரீவரை அழைப்பதுண்டு.

முதன்முதலில் உலகம் தோன்றிய காலத்தில், அதில் மனிதர்கள், மற்ற ஜீவராசிகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி திருமால் யோசித்தார். தனது யோக சக்தியால் பிரம்மதேவனை முதலில் உருவாக்கி, அவரிடம் படைக்கும் தொழிலை ஒப்படைத்தார்.

அதற்கு உதவ வேதங்கள், தேவ ரகசியம் ஆகியவை அடங்கிய பிரம்மச் சுவடிகளைக் கொடுத்தார். இந்தச் சுவடிகளைக்கொண்டு தனது பணிகளை பிரம்மதேவன் செய்துகொண்டிருக்கும் வேளையில், ஒருநாள் தன்னையறியாமல் சற்று கண்ணயர்ந்தார்.

அப்போது மது, கைடபர் என்கிற அரக்கர்கள் பிரம்ம தேவனிடமிருந்து பிரம்மச் சுவடிகளைத் திருடி, அதை கடல் நீருக்கடியில் மறைத்து வைத்துவிட்டனர். சுவடிகளைக் காணாமல் கலங்கிய பிரம்மதேவன், அதை மீட்க்க திருமாலிடம் வேண்டினார்.

மிக முக்கியச் சுவடிகள் காணாமல் போனதால், திருமால் வெண்குதிரை முகத்துடனும், மனித உடலுடனும் ஹயக்ரீவர் என்கிற அவதாரத்தை எடுத்து, வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார்.

பின்னர் சுவடிகளைத் திருடிய அரக்கர்களைக் கொன்றார். வேதங்களைக் காப்பாற்றவே ஹயக்ரீவ அவதாரம் நிகழ்ந்ததால் இவரே கல்விக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.

மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைப் படித்த பின்னர், வைணவக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஹயக்ரீவரை கீழுள்ள சுலோகத்தைச் சொல்லி, அவருக்குப் பிடித்த ஏலக்காய் மாலையை அணிவித்து வணங்கி வரவேண்டும்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே.

பொருள் : தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய வெண்நிறமும், அறிவுச் செல்வத்திற்கு உலகில் ஆதாரமாக விளங்கி வருபவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.

இப்படி வழிபாடு செய்தால் படித்த பாடங்கள் நன்கு மனதில் தங்கும். தேர்வு நேரத்தில் சட்டென நினைவுக்கு வரும். தேவையில்லாத பயம், கவலை போன்றவை அகலும்.

கல்வி, கலை, ஞானம் போன்றவற்றுக்கு குருவான ஹயக்ரீவர் சில இடங்களில் தாயார் லட்சுமிதேவியைத் தன் மடியில் வைத்து லட்சுமி ஹயக்ரீவராக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் சேர்ந்து கிட்டும்..





Tags :

Hayakreever , hayakrever , hayakrever valipadu

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top