பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.
பெரும்பாலான கோவில்கள் மற்றும் திவ்யதேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில் தான் பெருமாள் காட்சியளிப்பார். ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை ‘திருவாழிஆழ்வான்’ என்னும் ‘சக்கரத்தாழ்வான்’ என்றும் வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கின்றன.
சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் எட்டு (ஸ்ரீசுதர்சனர்), பதினாறு (ஸ்ரீசுதர்சன மூர்த்தி) மற்றும் முப்பத்திரண்டு (ஸ்ரீமகாசுதர்சன மூர்த்தி) கரங்களைக் கொண்டவராகவும் காட்சி தருகிறார்.
திருமாலின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்ரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி போன்ற அசுரர்களை தண்டிக்க கருட வாகனத்தில் இலங்கை சென்ற திருமால், சுதர்சன சக்கரத்தை ஏவியே அவர்களை அழித்தார்.
காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, ‘நானே உண்மையான வாசுதேவன்' என்று பவுண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன் மேல் ஏறிச்சென்ற கண்ணன் சக்கரத்தால் அவனைக் கொன்றார்.
சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை கண்ணன் நூறு முறை மன்னித்தார். தொடர்ந்து அவன் தவறு செய்ய அது கண்டு கொதித்த சுதர்சன சக்கரம், சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.
இப்படி பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம், அது பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.
பெருமாளின் பஞ்சாயுதங்களில் ஸ்ரீசக்கரம் எப்போதும், தீயவற்றை அழிக்க, பெருமாளோடு கூடவே தயாராக இருப்பதாக ஐதீகம். பகவான் நினைக்கும் பணியை உடனே முடிப்பவர் அவர். அதனால் சக்கரத்தாழ்வாரை விஷ்ணுவின் அம்சம் என விவரிக்கிறது சில்பசாஸ்திரம் என்னும் நூல். வேதாந்த தேசிகரும் ‘சக்கரத்தாழ்வாராக விளங்கும் ஸ்ரீசக்கரம் திருமாலுக்கு இணையானது’ என்கிறார்.
அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவை தான். அவற்றை அழித்து மனஅமைதியை தருபவர் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்தபிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது.
எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை தரும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு பலமும் வளமும் பெறுவோமாக!