திருக்கோயில் வழிபாடு,திருமுறை, திவ்வியப் பிரபந்தம்,திருப்புகழ்,
அபிராமி அந்தாதி பாராயணம் ,அன்னதானம், நற்செயல்
இவற்றைச் செய்து வினை நீக்கம் பெற்று உய்யலாம்.இப்படிப்பட்ட
வினைப்பயன்களில் இருந்து விடுபட்டு மறுபடியும் நாம் ஒரு தாயின்
கருவறையில் பிறக்காமல் இருக்க,'கர்ம வினை'களில் இருந்து விடுபட நாம் ஈசனின் திருவடியை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
கர்மவினை அகன்றால் மறுபிறவி இல்லை என்பர்.அதாவது மறுபிறவி இல்லை என்பதனை நமக்கு சூசகமாக உணர்த்தி நம்மை அரவணைக்கும் பரம பவித்திரமான பெரும் புண்ணியத் திருத்தலம் தமிழகத்தின் தெற்கில் உள்ள குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள
உவரி சுயம்புலிங்க சுவாமி திருத்தலமாகும்.
இத்தலம் ஆதிகாலத்தில் 'உவரி பெரியசுவாமி கோயில்' என்று அழைக்கப்பட்டதாம்.
உலகில் உள்ள அனைத்து சிவலிங்கம்களும் ஆவுடையுடன் கூடியே இருக்கும்.அதுவே "அம்மைஅப்பன்" தத்துவம்.
ஆம்!
சிவலிங்கத்தின் மேற்புறமுள்ள லிங்க பாகம் நம் சிவபெருமான்;அந்த லிங்கம் பொருந்தி இருக்கும் ஆவுடை பாகம் நம் அம்பிகை.ஆனால் திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் அருகில் அருளும் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு ஆவுடைபாகம்
இல்லை.
பூமியில் பல யுகங்களுக்கு முன்னால் தோன்றி புதையுண்டு ,பின்பு
வெளிபட்டு,சுயம்பு லிங்கமாய்,சுயம்புலிங்க சுவாமி அருள்
பாலிக்கிறார். அடியவர்கள் லிங்கத்தின் ஆவுடைபகுதியை காண ,லிங்கத்தின் அடியில் தோண்டிய போது,பூமிக்குள் லிங்கத்தின் அடிப்பகுதி நீண்டு கொண்டே சென்றதாம்;ஆவுடை பகுதியாகிய சக்தி பாகத்தை காண முடியவில்லை .இதனால் இந்த
சுயம்பு லிங்கத்தை அடியவர்கள் 'பெரிய சுவாமி'[இவரே ஆதி பரம்பொருள் என்ற பொருளில்'பெரிய சுவாமி']என்று அக்காலத்தில் அழைத்தனர்.
இதனால் இத்திருக்கோயில் 'உவரி பெரியசுவாமி திருக்கோயில்' என்று அழைக்க படலாயிற்று.அக்காலத்து அடியவர்கள் உவரி சுயம்பு லிங்கசுவாமியை 'பெரிய சுவாமி 'என்றே அழைத்து வழிபட்டு உள்ளார்கள்.பின்பு தற்போது இத்திருக்கோயில் 'உவரி சுயம்பு லிங்கசுவாமி திருக்கோயில்' என்றே அழைக்கபடுகின்றது.
அதற்கேற்ப இத்திருத்தலத்தில் மூலவர் கருவறை கோஷ்டத்தில்
தக்ஷிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,துர்கை,பிரம்மன்,சண்டிகேஸ்வரர் முதலிய கோஷ்ட மூர்த்திகள் இல்லை.
இங்கு அனைத்துமாய் ஆதி பரம்பொருளாய் சுயம்புலிங்க சுவாமியே அருள்பாலிக்கிறார்.இங்கு கருவறை கோஷ்ட
தெய்வங்களும் ,பிற சன்னதிகளும் ஆலயத்தில் இல்லாமல் அனைத்துமாய் ஆதிபரம்பொருளாய் சுயம்புலிங்க சுவாமி அருள்வதாலும்,ஆவுடை பாகம் காணப்படாததாலும் இத்தல ஈசனை முறைப்படி வழிபட்டால் நம்மை வருத்தும் கர்ம வினைகள் அகன்று நம் வாழ்விலும்,நம் சந்ததிகள் வாழ்விலும் வசந்தம் மலர்ந்து,நாம் வாழும் போது நம் வாழ்க்கைக்கு வழி காட்டி,நம் வாழ்க்கைக்குப் பிறகு நற்பதம் என்னும் ஒளி காட்டி நம் மாயப் பிறப்பறுக்கும் பிஞ்சகனாய் இத்தல ஈசன் அருள்கிறார் என்கிறார்கள்.
அருகில் உள்ள கூட்டப்பனை என்னும் ஊரில் இருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம்பீறிட,அங்கிருந்தஅனைவரும் பயந்து
போயினர்.அப்போது ஈசன் அசரீரியாக தான் இந்த இடத்தில்
குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல ,தோண்டிய பக்தர்கள் அலறினர்.காரணம் அங்கே சிவலிங்கம் ஒன்று இருந்தது.அதன்தலையில் தான் வெட்டுப்பட்டு ரத்தம் வந்து கொண்டு இருந்தது.
அப்போது மீண்டும் ஒரு அசரீரி,' அன்பர்களே,ரத்தம் வடியும்
இடத்தில் சந்தனக் கட்டையால் சந்தனம் அரைத்து அந்த சந்தனத்தை வெட்டுப்பட்ட இடத்தில் பூசுங்கள்.அப்போது ரத்தம் வடிவது நிற்கும்.உங்கள் பல தலைமுறைகளும்,நம்மை அண்டியவர்களும் நோய் நொடி அண்டாது வாழ்வர்'என்று கூறியது அந்த அசரீரி.
பின்னர் அடியவர்கள் அதே இடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் எழுப்பினர்.முதலில் பனை ஓலையில் கோயில் எழுப்பினர்.நாளடைவில் ஈசனின் அருள் வீச்சால் மிகப் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது.ஆலயத்தின் வெளியில் தென்மேற்கில் கன்னி விநாயகர் ஆலயம் உள்ளது.இங்கு வரும்
பக்தர்கள் முதலில் கடலில் நீராடி,பின்பு ஆலய எதிரில் உள்ள தெப்ப
குளத்தில் நீராடி அதன் பின்பு கன்னி விநாயகரை வழிபட்டு ,பின்பு மூலவர் சுயம்புலிங்க சுவாமி கருவறைக்குள் நுழைய வேண்டும்.இங்கு தரிசிக்க வரும் ஆண் பக்தர்கள் மேல் சட்டை அணிய அனுமதி இல்லை. கன்னி விநாயகருக்கு
கண்டிப்பாக சிதறுகாய் உடைக்க வேண்டும் என்கிறார்கள்.இங்கு ஈசனின் சன்னதியில் சந்தனமே பிரசாதமாக தருகிறார்கள்.
அதுவும் சுயம்புலிங்க சுவாமியின் சிரசில் சாற்றிய சந்தனமே பிரசாதம்.இந்த சந்தனப் பிரசாதத்தை தொடர்ந்து இங்கு ஆலயத்தில் தங்கி இருந்து 48 நாட்கள் கடலில் நீராடி,முறைப்படி ஈசனை வழிபட்டு ,கருவறை தீபத்தில் நெய் சேர்த்து ,அங்கு
பிரசாதமாக தரப்படும் சந்தனத்தை வாங்கி உண்டு வந்தால் தீராத நாட்பட்ட நோய்களும் குணமாவதாக கூறுகிறார்கள்.இங்கு தங்கி வழிபட உவரியில் மூன்று பெரிய மடங்கள் உள்ளன.இந்த மடங்கள் இலவசமாகவே செயல்படுவது சிறப்பு.
இங்கு சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் முதலிய நோய்களும் ,புற்றுநோய்,சர்க்கரைநோய், பிற ஆட் கொல்லி நோய்களும்,ஆட்டிசம் மற்றும் மன நோய்களும் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.
இங்கு அடியவர்கள் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து, தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து,11 முறை அல்லது 41முறை சுமந்து வந்து சுயம்பு லிங்கசுவாமி ஆலயத்தின் முன் குவித்து வழிபடுவர்.வீடு வாங்க,உடல்
நோய் குணமாக,மன நோய் சரியாக,வேலை வாய்ப்பு,திருமணம்,குழந்தை பாக்கியம் ,கல்வி,செல்வம்,பொன்,பொருள் சேர்ந்திட என அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு சிறு பெட்டியில் 11 முறை அல்லது 41 முறை கடல் மண் எடுத்து தலையில்
சுமந்துவந்து சுயம்புலிங்க சுவாமி சன்னதி எதிரில் வெளியே குவித்து வழிபடுகிறார்கள்.இதன் மூலம் அடியவர்களின் தடங்கல்கள்,தீவினைகள்,கிரக தோஷங்கள் அகன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற பெறுகிறார்களாம்.
அடுத்து ஆலயத்தின் வெளிப்புறத்தில் தனி சந்நதியில் முன்னோடி சுவாமி அருள்பாலிக்கிறார்.முன்னோடி சுவாமி பைரவரின் சொரூபமே. முற்காலத்தில் இங்கு விழாக் காலங்களில் நடக்கும் வாகன பவனியின் போது,வாகனத்தில் இரவில் சுவாமி
புறப்பாடாகியதும்,ஒரு நாய் வந்து வாகனத்தின் முன் நிற்குமாம்..பின்பு அந்த நாய் மெதுவாக நகர ரம்பிக்குமாம்.உடனே வாகனம் புறப்படும்.அதன்பின்னர் மீண்டும் அந்த நாய் நிற்கும்.உடனே வாகனமும் நிற்கும்.மீண்டும் நாய் முன் செல்ல ,வாகனமும் புறப்படும்.நாய் நிற்கும் வாகனப்பாதையில் மீண்டும் வாகனம் நிற்கும் என்கிறார்கள்.
பைரவரே இந்த நாய்.இங்கு முன்னோடி சுவாமி வாகனத்தின் முன்பே நாய் வடிவில் பவனி வருகிறார் என்கிறார்கள்.முன்னோடி சுவாமி சன்னதியை அடுத்து தனி கோயிலில் பிரம்ம சக்தி அம்மன் அருள்பாலிக்கிறார்.இங்கு பழைய பிரம்ம சக்தி அம்மன்
என்ற பெயரிலும் தனி சன்னதி உள்ளது.அதாவது இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை சிறிது பின்னமானதால் புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற எத்தனிக்க ,அப்போது அம்மன் அசரீரீயாக 'உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது
பின்னமாகி விட்டால்,அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி
விடுவீர்களா?'எனக் கேட்க,உடனே ஆலயத்தினர் பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.
இங்கு பிரம்ம சக்தி அம்மனுக்கு வேண்டுதல் புடவை சாற்றினால்,பழைய அம்மனுக்கும் புடவை சாற்ற
வேண்டுமாம்.பிரம்ம சக்தி அம்மனை பஞ்சமி,புதன் கிழமை ,தமிழ் மாத கடைசி வெள்ளி,விசாகம்,புனர்பூச நட்சத்திர நாட்களில் கருவறை தீபத்தில் நல்எண்ணெய் சேர்த்து,வெண்தாமரை மலர் சூட்டி வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள்.இங்கு சுயம்பு லிங்க சுவாமியை வழிபட்டு,ப்ரம்மசக்தி அம்மன் சந்நதியில் குழந்தைகளுக்கு அட்சரப்பியாசம் (குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்வு)செய்து வழிபட்டால் குழந்தைகள்
மேதைகளாய் இருப்பர் என்கிறார்கள்.இதற்கு நாம் விஜயதசமி வரை காத்திருக்க வேண்டியதில்லை,இத்திருக்கோயிலில் பஞ்சமி,புதன் கிழமை,புனர்பூச நாட்களில் அட்சரப்பியாசம் செய்து வழிபடல் சிறப்பு.பிரம்ம சக்தி அம்மன் அருகில் சிவனணைந்த பெருமாள் சன்னதி உள்ளது.சிவபெருமானுடன் திருமால் பெண்வடிவம் கொண்டு அணைந்ததால் சிவனணைந்த பெருமாள் என்று பெயர்.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிவனணைந்த பெருமாள் சந்நதியில் மரத்தொட்டில் கட்டி வழிபட குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிட்டும் என்கிறார்கள்.
பேச்சியம்மன்,இசக்கியம்மன்,மாட சுவாமி சன்னதிகளும்
உள்ளன.இங்கு இசக்கியம்மனுக்கு 'எண்ணெய் மஞ்சனம்' என்னும் கலவை சாற்றி
வேண்டுதல் வழிபாடு செய்கிறார்கள்.'எண்ணெய் மஞ்சனம்' என்பது
இசக்கியமனுக்கு நல்எண்ணெய் ,மஞ்சள் பொடி சாற்றி வழிபடுவது ஆகும்.இங்கு இசக்கியம்னுக்கு 'எண்ணெய் மஞ்சனம்' சாற்றித் தொடர்ந்து 8 தமிழ் மாத கடை வெள்ளி நாட்களில் வழிபட குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.கர்ப்பிணிகள் அல்லது கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் இங்கு வந்து 'எண்ணெய் மஞ்சனம்' சாற்றி, வழிபட்டால் சுகப்பிரசவம் நிச்சயமாம்.சுயம்புலிங்க சுவாமி,முன்னோடி சுவாமி ,பிரம்ம சக்தி
,இசக்கியம்மன் வழிபாடு செய்த பிறகு ஆலயத்தின் மேற்கில் உள்ள வன்னியடி சாஸ்தா ஆலயத்தில் கண்டிப்பாக வழிபட வேண்டுமாம்.
இங்கு வன்னி மரத்தின் அடியில் பூரணை,புஷ்கலா உடன் சாஸ்தா அருள்பாலிக்கிறார்.வன்னியடி சாஸ்தாவுக்கு பொங்கலிட்டு பலர் வழிபடுகின்றனர். சைவப்பட வன்னியடி சாஸ்தா சந்நதியில் சித்ரா பௌர்ணமி,பங்குனி உத்திரம்,வைகாசி விசாகம்,ஆடி அமாவாசை,சிவராத்திரி,தமிழ் மாத கடை வெள்ளி நாட்களில் பக்தர்கள் பொங்கலிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.தீராத நோய் உள்ளவர்கள் சுயம்புலிங்க சுவாமி ஆலய உண்டியலில் உடலின் எந்தப் பகுதி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அப்பகுதியை தகுதிக்கு ஏற்ப வெள்ளியில்
செய்து காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.இதுவே இத்தலத்தின் மிகச் சிறப்பான பிரார்த்தனை என்கிறார்கள்.[நோய் குணமாகிய பிறகு செய்தாலே போதுமானது
மேலும் மன நோய்,ஆட்டிசம்,தோல் நோய்,கூன்,கண் நோய்,பிற உடல் நோய் உள்ளவர்கள் இங்கு தொடர்ந்து 48 நாட்கள் ஆலயத்தில் தங்கி,கடலில் நீராடி சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு வந்தால் சகல நோய்களும் பலருக்கும் அகன்று பலனடைந்து உள்ளதாக ஆலயத்தில் கூறுகிறார்கள்.ஆலயத்தில் 48 நாட்கள் தங்கி வழிபடும் காலங்களில் அன்பர்கள் திருமுறை,திருப்புகழ்,அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபடுகிறார்கள் என்பது தெரிகிறது.
இங்கு மாதந்தோறும் தமிழ் மாதக் கடைசி வெள்ளி நாட்களில் 'மாதாந்தம் விழா' என்னும் பெயரில் சிறப்பு விழா கொண்டாடுகிறார்கள்.அன்று இரவில் வாகன பவனி நடக்கிறது.தைப் பூச நாளில் இங்கு சிறப்பாக தேரோட்டம் நடக்கிறது.தைப் பூச தேரோட்டத்தின் மறுநாள் காலையில் பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவு 10 மணிக்கு மேல் தெப்ப திருவிழாவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள்
முன்னிலையில் நடைபெறுவது கண்கொள்ளா திருகாட்சியாகும்.பிரதோஷம்,பௌர்ணமி,அமாவாசை நாட்களிலும்,கார்த்திகை மாத திங்கள் கிழமைகளிலும்,வாராந்திர திங்கள் கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் உண்டாம்.மார்கழி மாதம் முழுவதும் இங்கு சூரிய பூஜை சுயம்புலிங்க சுவாமிக்கு நடக்கிறது.பொதுவாக சிவாலயங்களில் சூரிய பூஜை ஓரிரு நாட்கள்
மட்டுமே வருடத்தில் நடக்கும்.ஆனால்,சுயம்புலிங்க சுவாமி ஆலயத்தில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரிய பூஜை நடைபெறுவது சிறப்பாகும்.
அதாவது,இங்கு மார்கழி மாதம் தினமும் இத்தல சுயம்புலிங்க
சுவாமியை சூரியன் வழிபடுகிறார்.சூரிய தசை,சூரிய புத்தி நடக்கிறவர்கள் இத்தலம் வந்து மார்கழி மாத காலை நேரங்களிலோ அல்லது ஞாயிற்றுக் கிழமைகளிலோ வந்து ஈசனை வழிபடுதல் சிறப்பு.மார்கழி மாத காலை நேரங்களில் இங்கு வந்து
முறைப்படி வழிபடுவதால் நவகிரக தோஷங்களும் அகலும்
என்கிறார்கள்.ஆண்டுதோறும் பெருவிழாவாக வைகாசி விசாகம் மூன்று நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.வைகாசி விசாகத் திருவிழா நாளில் உவரியில் லெட்சக்கணக்கான பக்தர்கள் கூடி,கடலில் நீராடி சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு இன்னல்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீச வளமும்,நலமும் பெறுகிறார்கள்.வைகாசி விசாகத்தன்று நள்ளிரவில் இங்கு சுயம்புலிங்க சுவாமி சார்பில் சுப்பிரமணிய சுவாமி பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளம் வாண வேடிக்கை முழங்க திருவீதியுலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கும்.ஆண்டுதோறும் வைகாசி விசாகநாளின் நள்ளிரவில் இங்கு மகரமீனுக்கு அருளும் வைபவம் நிஜ மீன்களைவைத்து இனிதே நடைபெறும்.அப்போது மண் அகல் விளக்குகளில் நல்எண்ணெய்
விட்டு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுவர்.இப்படி செய்வதன்மூலம் நமது மூதாதையர்களுக்கு நற்பதம் கிடைக்குமாம்.
அமாவாசை நாட்களில் கடலில் நீராடி,சுயம்புலிங்க சுவாமி சன்னதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள்,குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும்
என்கிறார்கள்.பலருக்கு இக்காலத்தில் தங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லை.இப்படிப்பட்டவர்கள் சுயம்புலிங்க சுவாமிக்கு மாவிளக்கு ஏற்றி சுயம்புலிங்க சுவாமியை தங்கள் குலதெய்வமாக ஏற்று கொள்ளலாம் என்கிறார்கள்.அதுமுதல் அக்குடும்பத்திற்கு குலதெய்வமாக சுயம்புலிங்க
சுவாமி அருள்பாலிப்பதுடன் குடும்பத்தினரின் நல்வாழ்விற்கு துணை நிற்பார் என்கிறார்கள்.இன்றும் தங்கள் குடும்ப திருமண நிகழ்வில் முதல் பத்திரிகை சுயம்புலிங்க சுவாமிக்கு தான் வைத்து அன்பர்கள் வழிபடுகிறார்கள்.தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு முடி காணிக்கை,காது குத்தலும்,வித்யாரம்பமும்,முதல் அன்னம் குழந்தைகளுக்கு ஊட்டும் நிகழ்வையும் சுயம்புலிங்க சுவாமி சன்னதியிலேயே பல லெட்சக்கணக்கான அன்பர்கள் நிகழ்த்தி வருகிறார்கள்.சிவராத்திரி நாளில் இத்தலம் சென்று
கடலில் நீராடி,மண் சுமந்து பின்பு இத்தல சுயம்புலிங்க சுவாமியை வழிபாடு செய்தால் கர்மவினைகள் கழன்று,வாழ்வில் வசந்தத்தின் விடியல் நமக்காக காத்திருக்கும் என்றால் ஐயமில்லை.
உவரி சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 38 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவிலும்.,கன்னியாகுமரியிலிருந்து சுமார் 48 கி.மீ
தொலைவிலும்,திருநெல்வேலியிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
திருசிற்றம்பலம்