நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவாலய ஓட்டம் பற்றிய வரலாற்று பதிவுகள்:
மஹா சிவராத்திரி என்றாலே பிரசித்தி பெற்றது சிவாலய ஓட்டம் தான். இந்த மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டத்திற்கு பெயர் போன இடமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ்கிறது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகின்றது.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் குமரியில் பக்தர்கள் பன்னிரண்டு சிவ ஆலயங்களுக்கு நடந்து சென்று வருவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா பகுதியை ஒட்டியிருக்கும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது திருமலை அருள்மிகு மகாதேவர் கோவில். சிவராத்திரி நாளில் பக்தர்கள் தங்கள் ஓட்டத்தை இந்த ஆலயத்தில் இருந்துதான் தொடங்குவார்கள்.
திருமலையில் ஆரம்பித்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலான்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருபன்னிகோடு, திரு நட்டாலம் என பன்னிரண்டு ஆலயங்களிக்கு பக்தர்கள் நடந்து செல்வார்கள். இது சுமார் 90 கிலோமீட்டர் தூரம் கொண்ட பக்தி பயணம் ஆகும்.
இதில் பங்குகொள்ளும் பக்தர்கள் மூன்று நாள் கடுமையான விரதங்கள் மேற்கொண்டு சிவராத்திரி அன்று ஓட்டத்தை ஆரம்பிப்பார்கள். காலில் செருப்பு அணிய மாட்டார்கள். ஒவ்வொரு கோவில் குளத்திலும் குளித்து ஈர துணியுடன் ஆலயம் சென்று தரிசனம் செய்து பின் அடுத்த ஆலயம் நோக்கி பயணம் செய்வார்கள். கையில் ஒரு விசிறியும் வைத்திருப்பார்கள்.
சிவாலய ஓட்டத்தின் வரலாறு
முன்பு ஒரு காலத்தில் சுண்டோதரன் என்னும் அசுரகுல தலைவன் ஒருவன் இருந்தான். அசுரகுல தலைவனாக இருந்தாலும் மிக சிறந்த சிவ பக்தன் விளங்கினான்.
மரணமில்லா பெருவாழ்வு வேண்டி சிவபெருமானை நோக்கி நீண்ட வருடங்களாக தவம் இருந்தான். அவனது தவத்தில் மனம் மகிழ்ந்த சிவ பெருமான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, அவனோ “ மரணமில்லா பெருவாழ்வு வேண்டும் என்றான்”.
மரணமில்லா பெருவாழ்வு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்று கூறி வேறு வரம் வேண்டும் படி உத்தரவிட்டார். நன்கு ஆலோசனை செய்த சுண்டோதரன் " என் கை பெருவிரலால் எவர் தலை உச்சியில் வைத்தாலும் அவர் சாம்பலாக வேண்டும் என்றான்". இந்த வரத்தை சிவபெருமானும் கொடுத்து விட்டார்.
வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைத்து விட்டதா என்று சந்தேகம் எழுந்தது. உடனே சிவபெருமானிடம், “நான் இதனை சோத்தித்து பார்க்க வெளியில் போகவேண்டும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்க போகிறேன்” என அரக்கன் சொல்ல சிவபெருமான் அதிர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓட தொடங்கினார்.
இப்படி ஓடி இளைப்பாற அமர்ந்த 11 இடங்களும் தான் தற்சமயம் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இறுதியில் திருநட்டாலம் என்று அழைக்கப்படும் இடத்தில் ஓடும் போது சிவபெருமான் காக்கும் கடவுளான விஷ்ணுவை உதவிக்கு கோவிந்தா.... கோபாலா.... என அழைத்தபடி ஓடினார். அதன் அடையாளமாகாத்தான் தற்போதும் பக்தர்கள் ஓடும் பொது கோவிந்தா... கோபாலா என்று கூவிய படி செல்வார்கள்.
சிவபெருமான் அழைப்பிற்கு செவிசாய்த்த விஷ்ணு பரமாத்மா அவர் நிலை அறிந்து மோகினி அவதாரம் எடுத்து சுண்டோதரன் முன் வந்து நின்றார்.
மோகினியின் அழகை கண்டு மயங்கிய சுண்டோதரன் நடந்தவற்றை அனைத்தையும் மறந்தான். மோகினியின் மேல் காதல் கொண்டு அவளை அடைய விரும்பினான். மோகினியோ தான் ஒரு ஆடல் இளவரசி என்றும், என்னை அடைய வேண்டும் என்றால் ஆடலில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினாள்.
காதல் மயக்கத்தில் போட்டிக்கு ஒப்புக்கொண்டான் சுண்டோதரன். இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. போட்டியின் இறுதியில் மோகினி தனது வலது கை பெருவிரலால் தன் தலை உச்சியில் தொட்டாள், சுண்டோதரனும் அவ்வாறு ஆடி , பெற்ற வரத்தினை மறந்து தலைமீது கை வைத்தான். இதனால் அவன் உடல் சாம்பலானது.
எனவே பன்னிரெண்டாவது ஆலயத்தில் மட்டும் விஷ்ணு சன்னதியும் இருக்கும். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் தங்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். எல்லா ஆலயம் செல்லும்போது பக்தர்கள் லிங்கத்திற்கும் விசிறி விடுவார்கள்.
அதாவது தங்களுடன் சிவபெருமானும் ஓடுவதாக ஐதீகம். அவ்வாறு ஓடும் சிவபெருமானுக்கு இளைப்பாற விசிறி விடுவது வழக்கம்.
அனைத்து சிவ ஆலயங்களிலும் பிரசாதமாக திருநீறு வழங்கப்படுகிறது, இறுதியில் சங்கரநாராயணன் கோயிலில் மட்டுமே பிரசாதமாக சந்தணம் வழங்கப்படுகிறது.
இந்த சிவாலய ஓட்டம் கதையானது சைவ வைணவ சமயத்திற்கு இடையே உள்ள ஒற்றுமையை விவரிக்கப்படுகிறது.
நன்றி
ஓம் நமசிவாய