நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகா சிவராத்திரி நாளில் வீட்டில் அமைதியாக துதிக்கக்கூடிய சிவ மந்திரம் பற்றிய பதிவுகள் :
சிவனுக்கு உகந்த மிகச்சிறப்பான பண்டிகையாக மகா சிவராத்திரி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவனை நினைத்து விரதம் இருப்பவர்கள் கோவிலுக்கு சென்று சிவபுராணம், சிவ தாண்டவம், தேவாரம், திருவாசகம் படித்து சிவன் அருள் பெறலாம்.
சிவபெருமான் பார்வதி சமேதராக விநாயகர், முருகப்பெருமான் என குடும்பத்துடன் இருந்தாலும் அநேக நேரங்களில் தியானத்தில் ஏகாந்தமாக லயித்திருப்பார். யோகம், தியானத்தில் மூழ்கி இறைவனை வழிபடுபவர்களுக்கு சிவன் சிறந்த கடவுள், அவரே ஆதி குரு. சிவனை ஆதி சித்தனாகவும் வழிபடுகின்றனர்.
சிவபெருமானை தினசரியும் நாம் எந்த நேரத்திலும் வணங்கலாம். அவருக்கு உகந்த மந்திரங்களை கூறி வணங்கினால் சிவனருள் எளிதில் கிடைக்கும்.
ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து சிவ மந்திரம் அனைவராலும் எளிதில் உச்சரிக்க முடியும். நான் சிவபெருமானை போற்றி வழிபடுகிறேன் என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் நமது உடலும் உள்ளமும் புனிதமடைகிறது. இதன் மூலம் சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
பாவம் நீக்கும் சிவ மந்திரம்
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
சிவனருள் தரும் காயத்ரி மந்திரம்
காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"
என்ற இந்த சிவ காயத்ரி மந்திரத்தை மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் உச்சரிக்க வேண்டும்.
ருத்ரனை போற்றும் மந்திரம்
'ஓம் நமோ பகவதே ருத்ராய' எனப்படும் இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். எண்ணியவை ஈடேற இந்த மந்திரங்கள் உதவும். மகாசிவராத்திரி, பிரதோஷம் நாட்களில் சிவ ஆலயங்களிலும் நமது வீட்டில் உள்ள பூஜை அறையிலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
மரண பயம் போக்கும் மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
தீயவைகளை அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் படிப்பதால் மரண பயம் நீங்கும்.
பாவம் நீக்கும் தியான மந்திரம்
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
தீயவை அழிக்கும் சிவ தாண்டவம்
மகாசிவராத்திரி நாளில் சிவ தாண்டவ ஸ்லோகம் கேட்கலாம். சிவ தாண்டவம் படிக்கலாம். உடல் மற்றும் மன சுத்தியுடன், சிவபெருமானை தியானித்து இந்த தாண்டவ ஸ்தோத்திர பாடலை படித்து வந்தால் நமது சித்தத்தில் தெளிவு ஏற்படும். நாம் நம்மை அறியாமல் உடல், மனம், வாக்கு ஆகியவற்றால் பிறருக்கு செய்த பாவங்களை சிவபெருமான் போக்கி அருள்வார்.
மேலும் எல்லாவற்றிலும் இறைவனை காணும் மனநிலை சிறிது சிறிதாக வளரும். நம்முள் இருக்கும் தீயவைகள் எல்லாம் அழியும். சிவ தாண்டவ நடனத்தை போற்றும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதால் சிவபெருமானின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.
நன்றி.
ஓம் நமசிவாய