நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது தர்மம் செய்யலாமா அல்லது கூடாதா என்பதை பற்றிய சிறு பதிவுகள் :
தர்மம் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த ஒரு பொருள் அல்லது பணத்தை பிறருக்கு அளிப்பது ஆகும்.
நமக்கு புண்ணியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தர்மம் செய்யக் கூடாது. தர்மம் என்பது பிறரின் நன்மைக்காக என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் நாம் ஒரு தர்ம காரியத்தில் ஈடுபடும் போது, அதன்மூலம் நமக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கும், என்று கணக்கு வழக்கு வைத்துக்கொண்டு தர்ம காரியத்தில் ஈடுபடுவது சரியான முறை அல்ல. தர்மம் பெற்றவர்கள் பலன் அடைந்தார்களா? என்பதை சிந்திக்க வேண்டும். அதாவது செய்யப்படும் தர்ம காரியமானது, முதலில் முழுமனதோடு இருக்க வேண்டும்.
அவரவர் கர்ம வினையை வைத்து அவரவர் பிறப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் நம் வாழ்க்கையை வாழும் போது ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் அந்த இறைவனால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
இறைவன் நிச்சயமாக பாரபட்சம் பார்க்காமல் தான் உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்களுடைய கர்மவினையை பொறுத்து நன்மை அளிக்கப் போகிறார். இதில் கோவிலுக்கு உள்ளே செல்லும் மனிதர்களை படைத்ததும் அந்த இறைவன் தான். கோயிலுக்கு வெளியில் இருக்கும் ஏழ்மையானவர்களை படைத்ததும் அந்த இறைவன் தான்.
கோவிலுக்கு உள்ளே சென்று இறைவனிடம் வரத்தினை தன் கைகளால் பெற்று, அதே கைகளால் கோவிலுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு தர்மம் அளிப்பதன் மூலம், அந்த இறைவனிடம் வாங்கிய வரங்கள் எல்லாம் நம்மை விட்டு சென்று விடும் என்று நினைத்தால் அது நிச்சயம் தவறானது.
இப்படிப்பட்ட எண்ணத்தை நம் மனதில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு உள்ளே செல்லும்போதே தர்மத்தை செலுத்திவிட்டு சென்றாலும் அதில் எந்த பயனும் இல்லை.
நாம் எத்தனை லட்சத்தை தர்மமாக கொடுத்திருக்கின்றோம் என்பது அவசியமில்லை. எப்படிப்பட்ட மனதோடு அதை கொடுத்தோம் என்பதில் தான் புண்ணியமே அடங்கியுள்ளது.
மனதார செய்யப்படும் தர்மமானது எந்த சூழ்நிலையில் எப்படி செய்தாலும் அது தர்மம்தான்.
மனத்திருப்த்தி இல்லாமல் அளிக்கப்படும் தர்மமானது எந்தவகையிலும் தர்மமே இல்லை.
காலதாமதமாக செய்யும் உதவி எப்படி பலன் அளிக்காதோ, அதேபோல் சகுனங்கள் பார்த்து செய்யும் தர்மத்திற்கும் எந்த பயனும் இல்லை.
சாஸ்திரத்தை முழுமையாக படித்தவர்கள், கோவிலுக்குள் சென்று அந்த இறைவனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது தர்மம் செய்யப்படக்கூடாது என்று கூறமாட்டார்கள். இறைவனை முழுமனதோடு உண்மையாக வணங்குபவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தர்மம் செய்வார்கள்.
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை ஆனந்த படுத்தி பார்ப்பதுதான். எனவே தங்களால் இயன்ற அளவு பணமாகவோ, பொருளாகவோ அல்லது உணவாகவோ பிறருக்கு தானம் அளித்து வாழ்வில் ஒரு உயர்ந்த நிலையை அடைவோம்.
நன்றி
ஓம் நமசிவாய.