நவகைலாயம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவகைலாயம் பற்றிய பதிவுகள் :

திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையில் நவகைலாயம் என்னும் ஒன்பது சிவாலயங்கள் அமைந்துள்ளது. அவை,

1. பாபநாசம் – சூரியன்
2. சேரன் மகாதேவி – சந்திரன்
3. கோடக நல்லூர் – செவ்வாய்
4. குன்னத்தூர் – ராகு
5. முறப்ப நாடு – குரு
6. ஸ்ரீவைகுண்டம் – சனி
7. தென்திருப்பேரை – புதன் 
8. ராஜாபதி – கேது
9. சேர்ந்தபூமங்கலம் –சுக்கிரன் 

நவகைலாயங்கள் உருவான வரலாறு :

பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார். 

அவருக்கு சிவபெருமானைக் கண்டு அருள்பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம். 

அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைந்து வழிபட்டு வருபவர்.

சிவபெருமான் இவர் எண்ணத்தை கண்டு முனிவரது பெருமையை உலகிற்கு வெளிக்கொண்டுவர அகத்தியர் மூலம் திருவுளம் கொள்கிறார். 

அதன்படி தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் நீ விரும்பியது கிடைக்கும் என்றும், நீ தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் ,உன்னுடன் ஒன்பது மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு ஒதுங்கி நிற்கிறதோ அங்கு சங்கு மூலம் நீராடி சிவனை வழிபட வேண்டும். நீவிர் வழிபடுகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். பின்னர் தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் உமது எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறி உரோமேசரை அனுப்புகிறார். 

அகத்தியர் கூறியவாறு அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும்  மலர்கள் ஒதுங்கிய இடங்களில் தனது குரு கூறியபடி சங்கு மூலம் நீராடி சிவபெருமானை நவ கிரகங்களாக நினைந்து வழிபட்டு கடைசியாக தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி முக்தி அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

அப்படி அகத்தியரால் தாமிரபரணி ஆற்றில் விடப்பட்ட ஒன்பது மலர்களும் ஒதுங்கிய அந்த ஒன்பது இடங்களிலும் உரோமச மகரிஷி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஒன்பது கோயில்களை கட்டி நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார். 

அந்த ஒன்பது கோயில்களே தற்சமயம் நவகைலாசங்கள் என அழைக்கப்படுகின்றன. 

அகத்தியர் தாமிரபரணியில் விட்ட ஒன்பது மலர்களில் கடைசி மலர் சேர்ந்த இடமே சேர்ந்த பூமங்கலம் என அழைக்கப்படுகிறது. 

தாமிர பரணி நதி கடலில் கலக்குமிடத்திற்கு அருகே சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.

நவ கைலாயங்களைப் பற்றிய ஜோதிட ரகசியம்

ஜாதகத்தில் சர்ப்ப தோச நிவாரணத்திற்கு இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் பலன் கிடைக்கும்.

மேலும் இந்த கோயில்கள் அமைந்துள்ள வரிசை முறையை கவனித்து பார்த்தால் ஒரு சூட்சும ரகசியம் புலப்படுகிறது. 

அதாவது கிரகங்களின் விம்சோத்தரி தசா வரிசை முறை எப்படி அமைந்துள்ளதோ, அதே வரிசைமுறையில் இந்த கோயில்கள் அமைந்துள்ளன. 

விம்சோத்தரி தசா வரிசை முறையில் கிரக வரிசை கேதுவில் தொடங்கி சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என அமையும். 

ஆனால் இந்த நவ கைலாயகோயில்கள் சூரியனில் தொடங்கி சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் என வரிசையாக அமைந்துள்ளன. 

கோட்சார கிரகங்களால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ள 9 நவகிரக ஆலையங்களிலும்  தனித்தனியாக பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

தசா – புக்திகளால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாசங்களிலேயே பரிகாரம் செய்ய வேண்டும்.

நன்றி

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top