தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த பலத்தைத் தரும். எதிர்ப்புகள் தவிடுபொடி யாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். இன்றய தினம் ஜூன் 13ம் தேதி சனிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி. பைரவரை மனதார வழிபடுங்கள். பைரவரை மனதார நினைத்துக் கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்போம். இது மிகப்பெரிய புண்ணியத்தை யும் வளத்தையும் நலத்தையும் தந்தருளும்.
பைரவரை, தேய்பிறை அஷ்டமி நாளில், வணங்கி னால், அஷ்டமத்து சனி உள்ளவர்களும் கிரக தோஷம் நீங்கப் பெறுவார்கள். அதேபோல், ஏழரைச் சனியால் பீடித்திருப்பவர்களும் கிரக தோஷம் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள். தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தந்தருளும் மகாசக்தி கொண்டவர் பைரவர்.
அதேபோல், அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும் போற்றப்படுகிறார் பைரவர். சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். சுக்கிர தோஷம் விலகும்.
சனிக்கிழமையும் அஷ்டமியும் இணைந்து வருவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. எனவே, இன்றய தினம் வீட்டிலிருந்தபடியே பைரவரை வணங்குங்கள். மனதார உங்கள் கோரிக்கைகளை, கஷ்டங்களை, குறைகளை அவரிடம் முறையிட்டு வேண்டிக் கொள்ளுங்கள்.
சிவ அம்சமான பைரவருக்கு, வில்வம் மிகவும் உகந்தது. வில்வம் சார்த்தி வழிபடுங்கள். செந்நிற மலர்களும் மகத்துவம் வாய்ந்தவை. தாமரையும் தும்பைப்பூவும் கிடைத்தால், இன்னும் விசேஷம். எனவே, இந்த மலர்களில் ஏதேனும் ஒன்றை பைரவருக்கு சூட்டி மகிழுங்கள்.
வீட்டில் வேண்டிக்கொண்டு, தயிர்சாதம் அல்லது மிளகு சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வடைமாலை சார்த்துவது அனுமனைப்போலவே பைரவருக்கும் சிறப்புக்கு உரியதுதான். எனவே பைரவருக்கு வடைமாலை சார்த்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
முடிந்தால், தெருநாய்களுக்கு தயிர்சாதம் வழங்குங்கள். பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி, உங்களால் முடிந்த அளவுக்கு தெருநாய்களுக்கு வழங்குங்கள். உங்களைப் பீடித்திருந்த தோஷங்கள் அனைத்தும் விலகும். உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பில்லி முதலான சூனியங்கள் அனைத்தும் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டின் வாஸ்து குறைபாடுகளும் நீங்கப் பெற்று, நிம்மதியும் முன்னேற்றத்துடனும் வாழ்வீர்கள்.