தனாகர்ஷண லக்ஷ்மீ குபேர பூஜை செய்யும் முறை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபாவளி தின சிறப்பு பதிவுகள் :

தனாகர்ஷண லக்ஷ்மீ குபேர பூஜை செய்யும் முறை :

ஐப்பசி மாதம் வருகிற அமாவாஸ்யை அன்று இப்பூஜை செய்வது உத்தமம். அம்பிகைக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை, அல்லது ஏதாவதொரு சுபநாளில், சுபநக்ஷத்திரத்தில், சுபதிதியில், சுபயோகத்தில், சுபகரணத்தில் செய்ய வேண்டும்.

நல்லதொரு மேடை அமைத்து, அதில் மனையை வைக்க வேண்டும். அதன் மேல் பட்டு விரிப்புப் போட்டு அதன் மேல் வாழையிலை வைக்க வேண்டும். அதன் மீது அக்ஷதை பரப்ப வேண்டும். அதன்மீது கிழக்கு முகமாக தனாகர்ஷண ஸ்ரீலக்ஷ்மீ குபேர யந்த்ரத்தை வைக்க வேண்டும்.

யந்திரத்தில் சந்தனம் இட்டு குங்குமம் இட்டு, புஷ்பமாலை சார்த்தி, அலங்கரித்து மற்ற குறிப்பிட்ட பூஜைத் திரவியங்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கலசத்தில் நீர் நிரப்பி, மாவிலைக்கொத்து வைத்து, மலர் சார்த்தி, சந்தனமிட்டு, அக்ஷதை சேர்த்து, கலசத்தை யந்த்ரத்தின் வலது பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவும்.

நவக்ரஹங்களை ஆவாஹனம் செய்வதற்குரிய தானியக் கிண்ணங்களையும், யந்த்ரத்தின் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவும். பிறகு, நித்யாநுஷ்ட்டானங்களை முடித்துக் கொண்டு, காலையில் இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும்.

முதலில் மஞ்சள் பிள்ளையாருக்கும், பிறகு லக்ஷ்மீ குபரேர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு

இந்த ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ லக்ஷ்மீ குபேர பூஜையைத் தினசரி செய்து வருவது மிகவும் நல்லது.

அப்படிச் செய்கிறவர்கள், லோக பாலகர்கள், நவக்ரஹாதி தேவதைகளை யதாஸ்த்தானம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

பொதுவாக இவர்களை யதாஸ்த்தானத்தில எழுந்தருள பண்ணவேண்டும். அதற்கான “யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி ” என்று வரும் இடங்களில், அதை மட்டும் விட்டு, மற்ற மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.

“குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூஜையைச் செய்கிறவர்கள், இப்பூஜை முறையில் குறிப்பிட்டது போல் ‘யதாஸ்த்தானம் ’ செய்து, த்யான ஆவாஹநாதி பூஜை முறைகளைச் செய்ய வேண்டும். மேலும், ஏதாவதொரு காரணத்தால் பூஜை செய்வதில் தடை ஏற்பட்டுவிட்டால், மானஸீகமாகப் பூஜாதிகளைச் செய்ய வேண்டும். ஆனால், இம்முறையை எப்பொழுதும் பின்பற்றக் கூடாது.

இந்தப் பூஜையைச் செய்யத் தொடங்கும் போது அவ்வப்போது மாறிவரும், வருஷம், மாஸம், அயனம், ருது, வாஸரம், நக்ஷத்திரம், திதி, இவைகளைப் பஞ்சாங்கத்தில் பார்த்துத் தெரிந்து, சொல்லிக் கொள்ளவும்.”

இந்த பூஜைக்கு வேண்டிய விசேஷ பொருட்கள்

1.) ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீலக்ஷ்மீ குபேர யந்த்ரம், 
2.) பட்டு விரிப்பு, 
3.) நவதானியங்கள் (கோதுமை, அரிசி, துவரை, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு முதலியன.) 
4.) இவைகளை தனித் தனியாக வைக்கக் கிண்ணம்.

ஸ்ரீலக்ஷ்மீ குபேர பூஜை

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்,
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு:

ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. நைவேத்ய பொருட்கள்: சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயஸம், வடை, நெய் அப்பம், சுண்டல், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top