வறுமை நீங்கி செல்வம் செழிக்க அருளும் திருவஹீந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர்

0

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வறுமை நீங்கி செல்வம் செழிக்க அருளும் திருவஹீந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர் பற்றிய பதிவுகள் :

பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம், பரஹன் நாரதீய புராணம் முதலான புராணங்களில் குறிப்பிடப்படும் தலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ‘திருவஹீந்திரபுரம்’ என்பதாகும். 

கடலூரில் இருந்து மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் கொடில நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது, இந்த திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. இத்தலத்தில் தேவநாதப் பெருமாள் அருளும் ஆலயம் ஒன்றும், அதன் எதிரே மலை மீது ஹயக்ரீவர் ஆலயம் ஒன்று மாக இரண்டு கோவில்களில் உள்ளது.

தேவநாதப் பெருமாளாய், ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேதராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இத்தல இறைவனை, திருப்பதி ஏழுமலையானாக நினைத்து திருப்பதிக்குச் செலுத்தும் வேண்டுதலை இங்கேயே செலுத்துகின்றனர். 

சிலருக்கு எவ்வளவு முயற்சித்தாலும் திருப்பதி பாலாஜியை தரிசிக்கும் பேறு எளிதில் வாய்க்காது. அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து தேவநாதரை வழிபட்டால், திருப்பதி பெருமாளை வழிபடும் பாக்கியம் உடனடியாக கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் நிர்மாணித்த தலம் இது என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த தலத்தில் உள்ள பெருமாளுக்கு ஆதிசேஷன் பாதாள கங்கையையும், கருடன் விரஜா தீர்த்தத்தையும் கொண்டு வந்து தாகம் தீர்த்ததாக கூறப்படுகிறது. 

இந்த ஆலயத்தில் பாதாள கங்கை சேஷ தீர்த்தம் என்றும், விரஜா தீர்த்தம் கொடில நதி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. சேஷ தீர்த்தம் பெருமாளின் திருமஞ்சனத்திற்கும், கொடில தீர்த்தம் பெருமாளின் நிவேதனம் தயாரிக்க மடப்பள்ளியிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் நாக தோஷம் அகலும்.

நாக தோஷம் தீர, பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு இங்குள்ள கிணற்றில் பால் தெளிக்கலாம். இதுவே ஆதிசேஷனின் சேஷ தீர்த்தமாகும். இது ஆலயத்தின் வெளிச் சுவரின் வடக்கே உள்ளது. இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தின் தென்மேற்கில் ஹேமாம்புஜவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். 

வடமேற்கில் சயனப் பெருமாள் மற்றும் ராமபிரானுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. தேவநாதப் பெருமாள் சன்னிதி திருச்சுற்றில் விநாயகர் அருள்புரிகிறார். வில்வ மரமே தல விருட்சமாக இருக்கிறது. இத்தல மூலவரின் எதிரில் கருடாழ்வார் கைகளைக் கட்டிக் கொண்டும், ராமர் சன்னிதியில் ஆஞ்சநேயர் வாயைப் பொத்தியபடியும் நிற்பது வேறு எங்கும் காணப்படாத அம்சமாக உள்ளது.

மேலும் ராஜகோபாலன் சன்னிதி, ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் சன்னிதியும் இருக்கிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக தேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர், தேவநாதப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கிறார். 

தேவநாதப் பெருமாளை ‘தாழக் கோவிலில்’ வழிபட்டு விட்டு, கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், சிறிய செந்நிற மலை காணப்படும். ‘அவ்ஷதகிரி’ என்று அழைக்கப்படும் இந்த மலை மீது 74 படிகள் உள்ளன. 

இந்த மலை மீதுள்ள அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து தான், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.

ஆயக் கலைகள் 64-ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். நான்கு வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் கைப்பற்றிச் சென்றனர். பெருமாள், ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அந்த அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு, பிரம்மதேவரிடம் ஒப்படைத்தார். 

ஹயக்ரீவர் கல்வி, ஞானம் ஆகிய வற்றிற்கு ஆதாரமாக உள்ளவர். லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியருக்கு அருளிச் செய்தவர். கருடனால் தனக்கு உபதேசிக்கப்பட்ட ஹயக்ரீவ மந்திரத்தை உபாசித்து, ஹயக்ரீவரின் அருள் காட்சியை கண்டார் தேசிகன்.

திருக்காட்சி தந்த ஹயக்ரீவர், தேசிகனுக்கு சகல கலைகளும் கைவரச் செய்தார். ஹயக்ரீவரின் பூரண அருளைப் பெற்ற தேசிகன் தமிழிலும், வடமொழியிலும் பல வேதாந்த நூல்களைப் படைத்துள்ளார். 

திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் நிர்மாணித்த திருமா ளிகையும், அவர் தோண்டி தீர்த்தம் எடுத்த கிணறும் உள்ளது. தேசிகன் தவம் புரிந்து ஹயக்ரீவரின் அருள் பெற்ற மலையில் ஹயக்ரீவர், லட்சுமி ஹயக்ரீவராய் அருள்பாலிக்கிறார். அருகில் வேணுகோபாலன், நரசிம்மர் உள்ளனர். கருடாழ்வாரும் அருள்புரிகிறார்.

ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம். மேலும் ஞானம், வித்தைகளில் மேன்மையும் கிட்டும். இத்தலத்தில் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

நாம் தினந்தோறும் தேசிகன் இயற்றிய ‘ஹயக்ரீவ ஸ்தோத்திரம்’ படித்து வந்தால், கல்வியில் உயர் நிலையையும், ஞானத்தையும், செல்வத்தையும் பெறலாம். இந்த தலத்தில் லட்சுமி நரசிம்மர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

இவரை ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும், சுவாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, பானகம் நைவேத்தியம் செய்தால் வறுமை, கடன் தொல்லை அகலும். செவ்வாய் தோஷமும் விலகும். 

இவ்வாலயத்தில் தேசிகனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. விசேஷ நாட்களில் ரத்ன அங்கி அலங்காரத்தில் தேசிகனைத் தரிசிக்கலாம். இத்தல தாயார் பிருகு மகரிஷிக்காக குழந்தையாக தாமரை மலரின் நடுவில் அவதரித்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவம் இருந்து தேவநாதப் பெருமாளையே கரம்பிடித்தார். 

வெள்ளிக்கிழமைகளில் ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு, மாலை வேளையில் வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையும். வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top