மகத்துவமிக்க மாசிமகம் உருவான வரலாறு!

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாசி மகம் பற்றிய பதிவுகள் :

மகத்துவமிக்க மாசிமகம் உருவான வரலாறு!

மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்தகாரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். எல்லா மாதங்களிலும் ‘மகம்’ நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் சொல்கின்றன.

மாசிமகம் உருவான வரலாறு!

மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் புண்டரீக மகரிஷி, மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார்.

இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.

பெண்களுக்குரிய விரத தினம்!

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மாசிமகம்!

உலகத்தைப் படைப்பதற்காக, உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர். அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி, அதாவது முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே ‘கும்பகோணம்’ என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது.

மாசிமக தினத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்திற்கு வருவார்கள். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top