திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயிலின் அற்புதங்கள் பகுதி 1

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயிலின் அற்புதங்கள் பற்றிய பதிவுகள் 

1) திருவாரூர் ஆலயத்தின் இராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கன் என்ற சோழ மன்னவர் பாண்டிய நாட்டை வெற்றிகண்டதன் நினைவாக எழுப்ப பெற்றதாகும், இவ்வரசரை "இறைவரே தம் தோழர்"என்று குறிப்பது போல கல்வெட்டு வாசகங்கள் கிடைக்கின்றன.

2) தேர்திருவிழாவிற்கு முன்பும் பின்பும் இறைவர் எழுந்தருளும் "தேவாசிரியன் மண்டபம்" திருக்காவணம், வன்மிகாதிபதி சபை, சபாபதி மண்டபம் என்றும் வழங்கப்படும்.

3) தேவாசிரியன் மண்டபத்தின் முன்புள்ள கூரையில்லாத தூண்கள், விழாக்காலங்களில் பந்தல் அமைப்பதற்காக நிறுவப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வர் கருதுகின்றனர்.

4) "தேவாசிரியன்" என்ற திருப்பெயர் இலக்கியங்களில் பெரியபுராணத்தில் "தேனுறக் கற்பக வாசமாலைத் தேவாசிரியன்" என்று தடுத்தாட்கொண்ட பகுதியிலும், முதலாம் குலோத்துங்க சோழரின் 44ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றிலும் முதன்முதலாக பதிவாகி உள்ளது.

5) ஆரூர் பூங்கோயிலின் தற்போதய கொடிமரம் தஞ்சை மராட்டிய மன்னர்களால் நிறுவப் பெற்றுள்ளதாம், இக்கொடி மரத்தில் இறைவருக்கு நேரெதிரே சுந்தர மூர்த்தி சுவாமிகள், மராட்டிய கால கலையம்சத்துடன் காட்சி தருகிறார்.

6) இக்கொடிமரத்தை தாண்டி இறைவரின் சன்னிதானத்திற்குள் நுழையும் திருவாயிலுக்கு "அணுக்கன் திருவாயில்" என்று பெயர், இவ்வாயிலின் மேலே உள்ள கோபுரமே ஆரூர் ஆலய கோபுரங்கள் யாவற்றிலும் பழமையானது ஆகும்.

7) பூங்கோயிலின் உட்பிரகாரத்தில் காட்சிகொடுத்தார் சன்னதிக்கு அருகில், "சிறுத்தொண்ட நாயனாரால் வாதாபியில் இருந்து கொண்டு வரப்பெற்ற சாளுக்கிய பாணி விநாயகர் காட்சி தருகிறார்".

8) பூங்கோயிலுக்கு பக்கவாட்டில் அமைந்துள்ள தியாகராச சுவாமியின் கருவறை முன்மண்டத்திலேயே தியாகராசர் எழுந்தருளியுள்ளர், இவ்வாலயத்தின் கருவறை கல்திரையிட்டு மறைக்கப் பட்டுள்ளது.

9) தியாகரசப் பெருமானின் திருமேனி மராட்டிய மன்னவர்களின் காலம் தொட்டே தற்போது போல முழுவதும் மறைத்து அலங்கரிக்கப் படுகின்றது, அதற்கு முற்காலமெல்லாம் தியாகராசரின் முழுத்திருமேனியும் தரிசனம் ஆகும்படி இருந்துள்ளது என்தற்கு ஆலயத்தில் உள்ள பழமையான சிற்பங்களும் ஓவியங்களும் சான்று கூறுகின்றன.

10) இறைவருக்கு "தியாகராசர்" என்ற பெயர் ஏற்பட்டதும் மராட்டியர் காலத்தினை ஒட்டியே என்றும் கருதப்படுகிறது, அதற்கு முன்புள்ள எந்த ஒரு இலக்கிய கல்வெட்டு தரவுகளிலும் "தியாகராசர்" என்ற பெயர் காணப்படவில்லை, "உடையார் வீதிவிடங்கத்தேவர்" என்பது பொதுவாக காணப்படும் இறைவர் திருநாமம் ஆகும், அதே சமயம் சோழர் கால கல்வெட்டுகள் சில "தியாகவினோதன்" என்று இறைவரை குறிக்கின்றன, இதையொட்டி தியாகாரசன் என்ற திருநாமம் ஏற்பட்டிருக்கலாம் என்பர்

 11) தேவாசிரியன் மண்டபத்தின் உட்புற விதானத்திலும், பூங்கோயில் பிரகாரத்தில் உள்ள சந்திரசேகர மண்டபத்திலும் காணப்படும் சிற்ப தொகுதிகளில் "தியாகராஜ பெருமான் தற்போது போல் முழுதும் மறைக்கப் பட்ட அலங்காரத்தில் இல்லாமல் காட்சி தருவதனை கண்டு மகிழலாம்".

12) திருஞானசம்பந்தப் பெருமான், அப்பர் பெருமான், சுந்தர மூர்த்தி சுவாமிகள், திருநீலகண்டத்து யாழ்பாண நாயனார், விறன்மிண்ட நாயனார், தண்டியடிகள் நாயனார், செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார், நமிநந்தியடிகள் நாயனார், சோமாசிமாற நாயனார், சேரமான்பெருமாள் நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார், சடையனார் நாயனார், இசைஞானி நாய்ச்சியார் ஆகிய அருட்தலைவர்கள் ஆரூர் வரலாற்றுடன் தொடர்பு உடையவர்கள் ஆவார்கள்

13) பண்டை காலங்களில் ஆரூர் விழாக்களில், "முதலிய மூவர் திருவிழா" என்று ஒரு உற்சவம் நிகழ்ந்துள்ளது, இறைவர் திருமுன்னர் "சம்பந்தப் பெருமான், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள்" உற்சவம் நடத்தப்படும், இதனை ஆரூர் கல்வெட்டுகள் ஓவியங்கள் மெய்ப்பிக்கின்றன, 

14) அனபாய சோழரது கல்வெட்டு ஒன்றில் "ஸ்ரீமத் பிரஹ்ம புரீச, வாகதிபதி, ஸ்வஸ்வாமி மித்ர" என்று முறையே மூவர் முதலிகள் குறிக்கப் பட்டுள்ளனர்.

15) ஆரூரில் "காமிகாகமம்" பின்பற்ற பட்டு நித்திய நைமித்திக வழிபாடுகள் நிகழ்கின்றன, இதனை "துர்வாச மகரிஷி மரபில் வந்த நயினார்கள் என்னும் சிவாச்சார்யார்கள் செய்கின்றனர்".

16) தியாகராசரையும் புற்றிடங் கொண்டாரையும் இவர்கள் ஆராதிக்கும் தருணம், மார்பின் குறுக்கே "யோகபரிவட்டம்" என்னும் வேட்டியை தரிப்பர், இந்த சிறப்பு திருவாரூர் நயினார்களுக்கு மட்டும் உரியதாகும்

17) நயினார்களுக்கு பூசையின் பொழுது உதவி புரிவோர் "பிரமராயர்" என்று அழைக்கப் படும் அந்தணர்கள் ஆவார்கள்.

18) பிரமராயர்களும் சிவாச்சார்யர்களேயாவர், ஆயினும் இவர்களுக்கு மூலட்டானம் மற்றும் தியாகர் சன்னதியில் பூசிக்கும் உரிமை இல்லை என்றாலும் ஆலயத்தின் பரிவார மூர்த்திகளை இவர்களே பூசிப்பர்

 19) விழுப்பெருமர் என்னும் பிரிவினரே தியாகருக்கு புள்ளத்தண்டு இட்டு சுமக்கும் உரிமை உடையவர்கள் ஆவார்கள், இவர்கள் புள்ளத்தண்டுடன் மணித்தண்டு என்னும் சிறிய தண்டினை பிணைத்து பிரத்யோக முடிச்சிகள் மூலம் யாரும் அறியா வண்ணம் தியாகரை அஜபா நடனத்திற்கு தயார் செய்வர், இம்முறைக்கு "புள்ளத்தண்டு இரகசியம்" என்று பெயர் 

20) தமிழகத்து கோயில்களிலேயே "இண்டைமாலை" சிறப்பு தியாகருக்கு மட்டுமே உரிய சிறப்பாகும், "மல்லிகை, செவ்வந்தி, போன்ற சுகந்த மலர்களால் கட்டப்பெறும் ஒருசோடி மாலைகள் இண்டை மாலை எனப்படும்", இதனை சாயரட்சையின் போது அணிவிப்பர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top