திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயிலின் அற்புதங்கள் பகுதி 2

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயிலின் அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :

21) செவ்வந்தி தோடு, நீலோத்பல மலர், இண்டைமாலை ஆகியவை தியாகரசருக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்புகள் ஆகும். இதனை "இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்" என்று அப்பரடிகள் பாடிப்பரவுகின்றனர்.

22) எல்லா ஆலயங்களிலும் மலர்களை சரமாகவோ மாலையாகவோ கட்டித்தான் இறைவனுக்கு சாத்துவர், ஆனால் "தியாகராசருக்கு மல்லிகை, முல்லை, செவ்வந்தி, பவளமல்லி முதலிய மலர்களை உதிரியாகவே மேல்மரப்பியும் கொட்டியும் அலங்கரிப்பர்" இம்முறைக்கு "திருப்பணி சாத்துதல்" என்று பெயர், சாயரட்சையில் திருப்பணி சாத்தப் பெறுவதனையும் அதன்பின்னரான தீபாராதனையும் கண்டு கண்டு நம் கருவேரறுக்கலாம்.

23) "திருப்பணி சாத்துதலுக்கு என்று தனி விழாவே நடத்தப் பெறும்" , புரட்டாசி மாதம் பூரட்டாதி நாளன்று செங்கழுநீர் ஓடையில் இருந்து மலர்கள் கொய்து பல்லக்கில் வைத்து கொண்டு வரப்பெற்று விசேச பூசைகளுடன் இறைவனுக்கு சாத்தப்பெறும், இதற்கு "நிறைபணி சாத்துதல் விழா" என்ற பெயர், அன்று கோயிலின் ஆஸ்தான திருமாலைகட்டிக்கு பரிவட்ம் கட்டி மரியாதை செய்வர்.

24) சந்திர சேகரர் ஈசானத்திசையில் வலம்வரும் பொழுது, ஆரூர் கோயில் முட்டுக்காரர் "சுத்த மத்தளத்தை தலையில் வைத்து கொண்டு வாசிப்பார் இதற்கு பூத நிருத்தம் என்று பெயர்", இதன் பொழுது மத்தளக்காரரை ஒரு வேட்டியால் மறைப்பர் அந்த மறைப்பிற்குள் பூதகணங்கள் வந்து ஆடிப்பாடி மகிழும் என்பது ஐதீகம், இது பழமையான ஒன்று என்பதனை தேவாசிரியனில் காணப்பெறும் ஓவியங்களால் எண்ணலாம்.

25) தியாகருக்கு இசைக்கப் பெறும் பதினெட்டு வகை வாத்யங்களில் குறிக்கதக்கவை "பஞ்சமுக வாத்யம், சுத்தமத்தளம், பாரிநாயனம், சங்கு, கொடுகொட்டி" ஆகும், விசேச பூசைகளின் பொழுது திரைக்கு பின்புறம் நின்று சுத்த மத்தளக்காரரும் பாரி நாயனக்காரரும் வாசிக்கும் இலயம் இறைவருக்கு மிக மகிழ்வானதாம்.

26) ஆரூர் கோயிலில் பூசைக்கு பிறகு வழங்கப்பெறும் திருநீற்றினை "திருமந்திரம்" என்ற பெயரில் வழங்குவர், இது "மந்திரமாவது நீறு" என்ற ஆச்சார்ய வாக்குடன் வைத்து எண்ணத்தக்கதாம்.

27) தேவாரம் திருவாசகம் திருமுறைகள் அல்லாமல் 36 தமிழ்நூல்கள் ஏராளமான தனிப்பாடல்கள் அருட்புலவர்களால் தமிழில் திருவாரூர் இறைவர் மீது பாடப்பெற்றுள்ளது இவை தவிர 28 வடமொழி நூல்கள் தியாகேசர் புகழ் பாடுகின்றன, இவை தவிர "சங்கர பல்லக்கி சேவ பிரபந்தம், தியாகராஜ விநோத சித்ர பிரபஞ்சமு, தியாகேச பதமுலு, பஞ்சரத்ன பிரபந்தம்" உள்ளிட்ட தெலுங்கு நூல்களும் "தியாகேஸ்வர ஆகமோத்த தியான, தியாகேச மாக்தமிய, தியாராஜ விலாச, கமலாலய மாத்மிய" என்னும் மாராட்டிய மொழி நூல்களும் புற்றிடங்கொண்ட புண்ணியத்தை பாடப்பரவுகின்றன.

 28) ஆருர் ஆழித்தேர் விழா மிகத்தொன்மையான ஒன்றாகும், தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள மராட்டியர் ஆவணம் ஒன்றில் கிபி 1843ஆம் ஆண்டு மாசி 8ஆந்தேதி முதல் சித்திரை 2ஆம் நாள் வரை ஐம்பத்தைந்து நாள் ஆழித்தேர் விழா நடைபெற்றதாக அறிவிக்கிறது.

29) திருவாரூர் ஆழித்தேர் விழா அல்லது பங்குனித் திருவிழா என்பதனை அப்பர்சுவாமிகள் முன்னின்று நடத்துவதாக ஐதீகம் ஆதலால் "இவ்விழா அப்பர் விழா" என்றே அழைக்கப் பெறுகின்றது.

30) ஆலயத்தின் "தைப்பூச உற்சவத்தினை திருஞானசம்பந்தப் பெருமானார் முன்னின்று நடத்துவதால் இது சம்பந்தர் விழா" எனப்பெறும், அப்பரடிகள் பங்குனி விழாவிற்கு இத்தலத்தில் பந்தகால் முகூர்த்தம் செய்துவிட்டு தலயாத்திரை தொடங்காயதாக வழிவழிச் செய்தி கூறுகிறது.

31) கொடியேற்றத்திற்கு முதல்நாள் அப்பர்பெருமான் திருவீதி உலாவந்து தியாகேசப் பெருமானை தரிசனம் செய்வார் அப்பொழுது இறைவர் அப்பரடிகளுக்கு திருவோடு வழங்கி வரவேற்பார், இது விழாவிற்கு அப்பர் பெருமான் வருகை தந்ததை குறிக்கிறது, பின்னரே மறுநாள் கொடியேற்றம் நிகழும், இதே போல தைப்பூச விழாவில் பிள்ளை பெருமானார் திருமேனி எழுந்தருளச் செய்யப் பெற்று அவர்தம் முன்னிலையிலேயே பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பெறும்.

32) கொடியெற்றத்திற்கு முன்பு "ஸ்ரீமுகம் வாசித்தல்" என்ற ஒரு ஐதீகம் உள்ளது, இதன்படி உற்சவத் தொடக்கம் செய்வதனை நயினாரும் கோயில் அதிகாரியும் இறைவருக்கு கடிதமாக படித்து தெரிவிப்பர், தொடர்ந்து "ஆலயத்தின் சொத்துரிமை பெற்றவரும் முதல் மரியாதைக்கு உரியவருமான சண்டேச நாயனாரிடத்து ஸ்ரீமுகம் வாசிக்கப்பெறும்".

33) சண்டேச நாயனார் உலகத்தின் அனைத்து தேவாலய விஷ்ணுவாலய பிரம்மாலய தேவியாலய முருகாலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களுக்கும் அடியார்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தன்னிடத்து வாசிக்கப் பெற்ற திருமுகத்தை அனுப்பி அனைவரையும் "ஆழித்தேர் காண அழைப்பதாக ஐதீகம்".

34) இதன்படி ஆரூர் தேர் காணவரும் ஒவ்வொரு உயிரும் சண்டேச நாயனாரின் நேரடி அழைப்பின் பெயரில் வந்ததாக கருதப்படும், ஆரூர் தேர்காண வரும் யாவரும் நாயனாரின் விருந்தாளிகள் ஆவார்கள் அவர்களை நிந்தித்தல் சாடுதல் கடுஞ் சிவாபராதமாகும்.

35) "சுபமஸ்து, ஸ்ரீ தியாகராஜ சிவாக்ஞையாலே பரிபாலனம், ஆதி சண்டிகேஸ்வரன் அரன் அருளால் இப்பூதலத்தில் தேவாலயங்களில் தேவர்கள் வரவும் தாமும் வரவும். ஸ்ரீவிபவ நாம சம்வத்சரம் மாசிமாதம் 12ஆம் தியதி பெருமாள் தியாகராஜருக்கு மகத்துவஜாரோகணம் பண்ணி பங்குனி மாதம் ஐந்தாம் தேதி அடிய முடிய நெடிய திருவீதியில் திருவாழித்தேரில் திருவுலாச் செய்து அருளுகிறபடியால் ஸ்தான மகேஸ்வர பரிச்சன்னங்களைக் கூட்டிக்கொண்டு வரவும் தாமும் வரவும்" என்பது முன்னொரு வருடத்தில் வாசிக்கப்பெற்ற திருமுகம் ஆகும்.

36) இதன்படி கொடியேற்றத்தன்று இறைவர் மற்றும் சண்டேசர் அழைப்பால் வரும் மாகேசுரர்களுக்கு புதிய கோவணமும் திருவோடும் வழங்கி இராஜநாராயண மண்டபத்தில் உபசரிக்கப் பெறுவர்.

37) ஆழித்தேரின் மரபீடம் தொடங்கி மேலேகட்டப் பெறும் கூரை தொம்பை சட்டங்கள் பொம்மைகள் முதலியவற்றுடன் கூடிய மொத்த எடை 300 டன் என்று தோராயமாக மதிப்பிடலாம்.

38) தேர் செலுத்த ஏதுவாக 1.5 அடி நீளம், 2.5 அடி உயரம், 1 அடி அகலமுள்ள 450க்கும் மேற்பட்ட முட்டு கட்டைகள் தயாரித்து தேருக்கு பின்னால் சிறிய வண்டிகளில் வந்து கொண்டிருக்கும், ஒரு முட்டுகட்டையை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்துவது அரிதான ஒன்று.

39) 450 சதுர அடி அகலம் கொண்டது ஒரு தேர் திரரைச்சீலை ஆகும், இது போல 17க்கும் அதிகமான திரசை்சீலைகள் தேருக்கு பயன்படுத்தப் படுகின்றன.

40) 20அடி நீளமுள்ள நான்கு வாசல் மாலைகள் நான்கு பக்கத்தையும் அலங்கரிக்க, 18 அடி உயரமுள்ள 20 தொம்பைகள் தேரில் தொங்கியாடுகின்றது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top