காசியில் சிவராத்திரி:
சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும்.
காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜோதிமயமாக இருக்கும்.
ராமேஸ்வரத்தில் சிவராத்திரி:
இங்கு சிவராத்திரியன்று காலையில் திறக்கும் சந்நிதியை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். அபிஷேகமும் வழிபாடுகளும் சிறப்பாக நடக்கும்.
தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ரம் ஆகியவை இரவு- பகலாக ஒலிக்கும். இரவின் நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரங்கள் செய்வார்கள். ஒவ்வொரு ஜாமத்திலும் ஸ்வாமி மூன்று பிராகாரங்களிலும் உலா வந்து அருள் புரிவார். ஸ்வாமிக்கு ஆயிரம் குடங்களின் நீராலும் (சஹஸ்ர கலச), ஆயிரம் சங்குகளின் நீரைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். மாலையில் வெள்ளி ரத உலாவும் காலையில் பெரிய ரத உலாவும் நடைபெறும்.
நேபாளத்தில் சிவராத்திரி:
இங்கு பெரும் விழாவாகவே சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இங்குள்ள பசுபதி நாதர் கோயிலில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், நேபாளத்தின் பல பகுதிகளில் இருந்தும் துறவிகளும் பக்தர்களும் தரிசனம் செய்வதற்குக் குவிவார்கள்.
அன்று அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படும். இதை நேபாள மன்னர், தனது சொந்தச் செலவில் செய்வார். கோயிலில் லட்ச தீபம் ஏற்றுவார்கள். எல்லோருமே புத்தாடை அணிவார்கள். பசுக்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன ஸ்வாமி கோயில் :
மண்டபத்தை, விஜயநகர மன்னர் ஒருவர் சிவராத்திரியன்று வழங்கியதாகக் குறிப்பு உள்ளது.
திருச்சி கோயில் சிலா சாஸனம் ஒன்று, சிவராத்திரி விழாச் செலவுக்காகச் சோழ மன்னர், தனது செல்வத்தை தானம் செய்ததாகச் சொல்கிறது.
ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரி விரதம் இருந்து பலனடைந்தவர்கள் :
மாசி - பிரம்மா, பங்குனி - மஹா விஷ்ணு, சித்திரை - உமாதேவி, வைகாசி - சூரியன், ஆனி - ஈசான்யர், ஆடி - குகன், ஆவணி - சந்திரன், புரட்டாசி - ஆதிசேஷன், ஐப்பசி - இந்திரன், கார்த்திகை - சரஸ்வதி, மார்கழி - மனோன்மணி, தை - நந்திதேவர்.
"தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம். ஆனால் சிறப்பாக, மலர்கள், நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்."
என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.
நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக
"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"
- திருமந்திரம்
இத்தகைய மகிமை பொருந்திய சிவராத்திரி விரதமிருந்து நாமும் முக்திப் பேற்றினை அடைவோமாக
Om sivaya namaga
ReplyDeletevery good🙏🙏🙏
ReplyDelete