மஹாசிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹாசிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவ ராத்திரி விரதம். `எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும் நூல் தெரிவிக்கிறது.

எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி... சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

அம்பாள் பூஜித்த புண்ணிய இரவு!

பிரம்மாவும் மகாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி என்கிறது ஸ்காந்த மஹாபுராணம்

மற்றோர் அற்புதமான கதையும் உண்டு. பிரளய காலம் முடிந்த அன்றைய இரவில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜை செய்தாள் உமாதேவி.

பொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவு சிவராத்திரி என வழங்கப்படவேண்டும். இந்தத் தினத்தில் சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரையிலும் தங்களை பூஜிப்பவர்களுக்குச் சர்வ மங்கலங் களுடன் நிறைவில் முக்திப் பேறையும் அருள வேண்டும்!’’ என வேண்டினாள். பரமசிவனும், ‘‘அப்படியே ஆகுக!’’ என்று அருள்புரிந்தார். அம்பிகை பூஜித்த அந்த நாளே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.

ஐந்து வகை சிவராத்திரிகள்!

புண்ணிய சிவராத்திரி ஐந்து வகையாகத் திகழ்கிறது.

மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும்.

யோக சிவராத்திரி: திங்கள் கிழமை யோடு இணைந்து வரும் சிவராத்திரி தினத்தை யோக சிவராத்திரி என்பர்.

நித்திய சிவராத்திரி: வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளில் சதுர்த்தசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி: தை - தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, 13 நாள்கள் தினமும் ஒரு பொழுது உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப் பது, பட்ச சிவராத்திரி எனப்படும்.

மாத சிவராத்திரி: பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும்.

மாசி - தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி - வளர்பிறை திருதியை, சித்திரை - தேய்பிறை அஷ்டமி, வைகாசி - வளர்பிறை அஷ்டமி, ஆனி- வளர்பிறை சதுர்த்தசி, ஆடி- தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி - வளர் பிறை அஷ்டமி, புரட்டாசி- வளர் பிறை திரயோதசி, ஐப்பசி - வளர்பிறை துவாதசி, கார்த்திகை- வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார்கழி - வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை-வளர்பிறை திருதியை ஆகிய 14 நாள்களும் மாத சிவராத்திரி எனப்படும்.

மூன்றுகோடி தினங்கள் விரதம் இருந்த புண்ணியம்!

ஐந்து வகை சிவராத்திரியில் ஒன்று யோக சிவராத்திரி. இதுவும் நான்குவிதமாக விளக்கப் படுகிறது.

1. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த அறுபது நாழிகை(24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.

2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த் தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.

3. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியில் இருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந் தாலும் அன்று யோக சிவராத்திரி.

4. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.

இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரி களில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி யன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

சிவராத்திரி விரத நியதிகள்!

மார்கழி மாத வளர்பிறை சதுர்த் தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்த சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம்!

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களைச் (பூஜைகள் போன்றவற்றை) செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.

ஆலய தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

பின்னர் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

சிவராத்திரி பூஜை மாலை 6 மணிக்குத் தொடங்கி மறு நாள் காலை 6 மணி வரையிலும் நான்கு காலமாகச் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் அதற்குரிய அபிஷேக, அர்ச்சனைப் பொருள்கள், நைவேத்தியத்தைச் சமர்ப்பித்து, ஸ்தோத்திரம் பதிகப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும் (நான்கு காலங்களுக்கும் உரிய அர்ச்சனைப்பூக்கள், அபிஷேக திரவியங்கள், நைவேத்தியம், பதிகம் முதலான விவரங்களை தொடர்ந்து வரும் பக்கங்களில் காணலாம்).

இங்ஙனம் இரவு முழுக்க விழித்திருந்து வழிபட்டு, மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங் களுடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்கவேண்டும்.

அதன் பின் நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top