மஹாசிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹாசிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

மகத்தான பலன்கள் அருளும் மகா லிங்கோத்பவ காலம்!

சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் - லிங்கோற்பவ காலம். இவ்வேளையில் சிவலிங்க திருவடிவின் மகிமைகளைப் படிப்பதும் சிந்திப்பதும் சிறப்பு!

உருவம் - அருவம் - அருஉருவம்!

ஸ்காந்த புராணத்தில் பார்வதி திருக் கல்யாணத்தை விவரிக்கும் பகுதியில் லிங்கத்தைப் பற்றிய உண்மையான தகவல் இருக்கிறது. தமிழில் திருமந்திரம் சிவலிங்க தத்துவத்தை விளக்கும்.

வழிபாட்டில் மூன்று வகை உண்டு. உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு, அருவ வழிபாடு. 

இவற்றில் நாம் பெரும்பாலும் செய்து வருவது உருவ வழிபாடு. அருவ வழிபாடு என்பது, உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கும். இதையே வேறு விதமாக பார்த்தால், ‘பார்க்கும் அனைத்தையும் பரம்பொருளாகவே பார்ப்பது’ என்பதே பொருள். ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறாரே, அந்த நிலை. மகான்கள் பலர் சொல்வதும் வேதங்கள் சொல்வதும் இந்த வழிபாட்டைத்தான்.

உருவ வழிபாட்டுக்கும், அருவ வழிபாட்டுக் கும் நடுவில் இருப்பது ‘அருஉருவ வழிபாடு’. லிங்க வழிபாடு இவ்வகையானது.

திசைகளே வஸ்திரம்!

சிவலிங்கத்தைத் தாங்கும் பீடத்துக்கு ‘ஆவுடை’ என்று பெயர். இது சக்தியின் வடிவான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் ஆகாயத்தைக் குறிக்கும்.

அசையும் பொருள்- அசையாப் பொருள் என அனைத்துமே, ஆகாயம் என்னும் அந்த ஒரே கூரையின் கீழேதான் இருக்கின்றன. அந்த ஆகாயத்தை ‘அண்ட லிங்கம்’ என்று மகான்கள் சொல்வார்கள்.

சிவம் அபிஷேகப் பிரியராயிச்சே! எனில், `இதுவே எல்லை' என்று அளவிடமுடியாத ஆகாய லிங்கத்தை அபிஷேகிக்க, தீர்த்தம் அதிகம் வேண்டுமே, அணிவிக்க பூமாலை யாது, வஸ்திரத்துக்கு எங்கே போவது?

ஆகாய லிங்கத்துக்கு கடல் நீரே தீர்த்தம், நட்சத்திரத் தொகுப்புகளே பூமாலை, திசை களே வஸ்திரங்களாம். இந்தக் கருத்தைச் சொல்லும்படி, அருமையான ஒரு பாடலை திருமூலரின் திருமந்திரத்தில் காணலாம்.

தரை உற்ற சக்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே

ஆக, புண்ணிய சிவராத்திரி தினத்தில் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழலில் - இடத்தில் உள்ளோமே என்ற சங்கடம் தேவை இல்லை. இருக்கும் இடத்தில் இருந்தபடி விண்ணையும் மண்ணையுமே சிவசக்தியாய் பாவித்து வணங்கலாம்; வரம் பெறலாம்!

மூன்றாம் கால பூஜை!

புண்ணிய மகா சிவராத்திரியின் மூன்றாம் காலமே லிங்கோத்பவ காலம் ஆகும். இந்தப் பூஜை வேளையில் சிவ லிங்க மூர்த்தியையும், கருவறைக்குப் பின்னால் கோஷ்டத்தில் உள்ள லிங்கோற்பவ மூர்த்தியையும் நெய் பூசி வென்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து மலர்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

லிங்கோற்பவ மூர்த்தியை ருத்ர மந்திரம், சமகம் பாடியபடி அபிஷேகிப்பது விசேஷம்.

நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானைப் பிரம்மனும் திருமாலும் ஆயிரமாயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். இதனை நினைவுகூரும் வகையில் ருத்திரருக்கு வணக்கங்களைக்கூறும் ருத்ரத்தை ஓதுவது சிறப்பு.

பக்தர்கள் `இருநீலனாய் தீயாகி' எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகைப் பாடல்களையும் ஓதி வழிபடலாம்.

வீட்டிலேயே பூஜிக்க எளிய வழி!

மூவேழு உலகங்களும் மகேஸ்வரனைப் போற்றித் துதிக்கும் ராத்திரி சிவராத்திரி. இந்த இரவில் ஈசனைத் துதிப்பவர்களைக் கண்டு காலனும் அஞ்சுவான். ஏழ்மையும் இன்மையும் விலகி ஓடும். பகை விலகும். இருவினை நீங்கும். இறைவன் அருள் சேரும்.

இத்தனை சிறப்புகளையும் கொண்டதால்தான் அந்த ராத்திரி மகா சிவராத்திரி. இந்த நாளில் ஆலயங்களில் நான்கு கால பூஜை விமர்சியாக நடைபெறும். அதைக் கண்டு தரிசித்து வழிபட்டால் இணையில்லாப் புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் கோயில்களுக்குச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து அற்புத பலன்களைப் பெறலாம்.

நான்கு காலத்துக்கும் தனித்தனியே சிறிய நான்கு ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள் களைக் கொண்டு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு, அற்புத பலன்களை வீட்டிலிருந்தே வழிபட்டுப் பெறலாம். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top