மஹாசிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹாசிவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

பாரதத்தில் உள்ள பனிரெண்டு தலங்களை ஜோதிர்லிங்க தலங்கள் என்று சொல்வார்கள். அந்தத் தலங்களை தரிசிப்பது என்பது மிகவும் புண்ணியம் தரக்கூடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் சிவராத்திரியோடு தொடர்புள்ள தலங்கள் சில உள்ளன. இயன்றவர்கள் அருகிலுள்ள சிவத்தலத்துக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது.

திருவண்ணாமலை 

பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி தேட நெருப்பாய் சிவபெருமான் நின்ற இடம் திருவண்ணாமலை. நெருப்பு உருவமாய் இருந்த சிவபெருமான் கல் மலையாய் மாறி காட்சிக் கொடுத்தார். அவரே அண்ணாமலையார் ஆனார். அவர் ஜோதி வடிவில் காட்சிக் கொடுத்ததைத்தான் ‘கார்த்திகை தீபம்’ என்ற குறியீட்டால் விளக்குகிறார். மகா சிவராத்திரி நாளில், லிங்கோத்பவ காலம் என்று சொல்லப்படும் காலத்தில் சிவன் ஜோதி உருவாக காட்சிக் கொடுத்தார் என்பார்கள். இந்த வகையில் திருவண்ணாமலை சிவராத்திரி விசேஷ தலமாகும். 

திருக்கடையூர் 

எமனுக்கும் சிவராத்திரிக்கும் தொடர்புண்டு. சிவராத்திரி வேளையில்தான் பெருமானை பூஜிக்கும் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த எமன் உதைப்பட்டான். 

திருவைகாவூர் புராணத்தில் சருக்கம் என்ற பகுதியில் வேடன் ஒருவன் சிவலோகம் செல்ல அதைத் தடுத்தான் எமன். அதனால் ஈசனால் உதைப்பட்டான். அதன் பின்னர் வேடன் செய்த சிவபூஜையின் மகிமையும் சிவராத்திரி மகிமையும் அவனுக்கு சொல்லப்பட்டது என்ற செய்தி விவரிக்கப்பட்டிருக்கிறது.சிவராத்திரி நாளில் செய்யும் பூஜை ஆன்மாக்களின் வினையை நீக்கும்; எமவாதனை அகற்றும். சிவனுடன் ஐக்கியமாக்கும். ஆகையால்தான் பெரியவர்கள் சிவராத்திரி நான்காம் காலத்தில் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவார்கள். திருக்கடையூர் எமன் சிவபூஜை செய்த தலம், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்திலிருந்து சிவன் வெளிப்பட்ட தலம். எமனை சிவன் காலசம் ஹாரராக வந்து வதம் செய்தார். இந்த வகையில் திருக்கடையூரில் சிவராத்திரி விசேஷம்.

மகாசிவராத்திரி வழிபாடு உருவானது இங்கேதான்

திருவைகாவூர் 

திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி முதலான மகாசிவராத்திரி தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, திருவைகாவூர். வேடனொருவன் மரத்தினின்று சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அப்படி அந்த புராணக் கதை நிகழ்ந்த தலமே திருவை காவூர்தான் என்றறியும் போது, ஆச்சரியம் விழி விரிய வைக்கிறது. 

வேடன் ஒருவன் மானை பார்த்தான். அவன் அருகில் நகர்ந்து வருவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த வில்வாரண்யத்திற்குள் புகுந்தது. சற்று தூரத்திலிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் துரத்தியபடி உள்ளே நுழைந்தான். தவநிதி முனிவர், ‘‘மானைக் கொல்லாதே. 

வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘எனக்கு இந்த மான்தான் வேண்டும்’’ என்று பிடிவாதமாக நின்றான். பிறகு, முனிவரைப் பார்த்து பேசினான்: ‘‘இதோ பாருங்கள், என் வேலை வேட்டையாடுவது. எனக்கு உங்கள் பேச்செல்லாம் புரியவில்லை. ஒழுங்காக மானை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டுக் கூட மானை பிடித்துச் செல்வேன்.’’ 

தவநிதி முனிவர் மெல்ல சிரித்துக் கொண்டார். ஈசன் ஏதோ ஒரு திருவிளையாடலை அன்றைய தினம் நிகழ்த்தப்போகிறான் என்று தவத்தால் கனிந்திருந்த அவர் மனசுக்குத் தெரிந்தது. ஆகவே வேடன் மிரட்டலுக்குத் தான் பயப்படாததுபோல அமைதி காத்தார். அதாவது ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், உன்னிடம் அந்த மானை ஒப்படைக்கமாட்டேன்’ என்றது அந்த மௌனம். 

அது வேடனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டியது. அவரைத் தாக்க கை ஓங்கினான். அப்போது அருகில் ஓர் உறுமல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிய வேடன் தன்னருகே ஒரு புலி நின்றிருந்ததைக் கண்டான். அதன் செந்தணல் விழிகள் கோபத்தை உமிழ்வதைக் கண்டான். அவ்வளவுதான் அங்கிருந்து மருண்டு ஓடினான். புலியும் அவனைத் துரத்தியது. ‘நன்றி மகாதேவா, இந்த அப்பாவி வேடனுக்கு நற்கதி அருளுங்கள்’ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார் முனிவர். 

ஓடிய வேடன் சற்றுத் தொலைவிலிருந்த வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். தன் விழிகளில் செம்மை நீக்கி கருணை ஒளிர, இவன் தானறியாமல் செய்யப்போகும் நல்வினைக்கு இவனுக்கு நற்கதி அருள தீர்மானித்தது புலியாய் வந்த சிவம். இரவு வந்தது. பசியும் பயமும் வேடனைப் பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல் வில்வத் தளிர்களை உருவி புலியின் மீது போட்டான். புலிச் சிவம் பரவசமாக அதனை ஏற்றுக்கொண்டது. அன்று இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்திலிருந்து இலைகளைப் பறித்து போட்டபடியே இருந்தான் வேடன். 

பொழுது விடிந்தது. மரத்துக்குக் கீழே தான் போட்ட வில்வ இலைகள் ஒரு பெரும் குவியலாக இருக்கக் கண்டான். புலியைக் காணோம். பயம் நீங்கியவனாக மரத்திலிருந்து இறங்கிய அவன் அந்த வில்வக் குவியலைத் தன் கைகளால் விலக்கிப் பார்க்க உள்ளே சிவ லிங்கம் ஒன்று கம்பீரமாகக் காட்சியளித்தது. பளிச்சென்று தோன்றிய பேரொளியில் ஈசன் அவனுக்கு தரிசனமளித்து, ஆட்கொண்டார். 
பிரம்மனும் விஷ்ணுவும் அந்த அதிசயத்தைக் காண அத்தலத்தில் தோன்றினர். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் வேடனை நெருங்கினார். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி விரட்டினார். சற்று தொலைவே இருந்த நந்திதேவரை ஈசன் பார்க்க, நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனை சற்று தூரத்தில் நிறுத்தினார். எமன் அங்கேயே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி, ஈசனைத் தொழ, அவரும் எமனை விடுவித்தார்.

இந்த புராணக் கதையை பல்வேறு விதங்களாக சொன்னாலும் இத்தலத்தில்தான் இதைப் பற்றி முழுமையாக அறிய முடிகிறது. ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை 
யாராலும் தடுக்க முடியாது. 

இத்தலத்தை எமதர்மனால் மிதிக்க முடியாது என்பதால் எமபயம் நீக்கும் தலமாகும். மகாசிவராத்திரியின் மகத்துவத்தை விளக்கும் தலமும் இதுதான்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top