நான்காம் நாள் தரிசனம் :
ஆதிசங்கரரும், மூகாம்பிகை தாயும்:
ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.
கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.
அவர் மைசூர் சாமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார்.
மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள்.
தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.
தேவியோ, ''நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ.
ஆனால் ஒரு நிபந்தனை.
நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது.
அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்'' என்றாள்.
ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார்.
எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்று விட்டாள்.
கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்று விட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.
அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்று விடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.
எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள்.
அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும்.
அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.
ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது.
அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறிய முடியவில்லை.
மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது.
இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.
கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள
ஒரு மேடை ஆகும்.
ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெக ஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.
ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார்.
அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார்.
அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள்.
ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது.
உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒரு வருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.
தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை
தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள்.
இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில்
கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக்_
கொடுக்கிறார்கள்.
தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய் சிலிர்த்தது!
பத்மாசன தோற்றம் நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன.
சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார்.
சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளி விட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார்.
அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீசக்கரத்தை
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம்
அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார்.
ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்.