சிறப்புவாய்ந்த சிவ வடிவங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்புவாய்ந்த சிவ வடிவங்கள் பற்றிய பதிவுகள் :

மரகதலிங்கம்

திருநாள்ளாறு திருத்தலத்தில் தியாகராசப் பெருமாள் சன்னதியில் சாதிபச்சை இரத்தினத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிடேக ஆராதனை நடைபெறகிறது.

நடராசர் அபிடேகங்கள்

சித்திரை திருவோணம் உச்சிக்காலம் முற்பகல் 10 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள், ஆனி உத்திரம் பிரதோசக் காலம் மாலை 4,30 இரவு 7க்குள், ஆவணி வளர்பிறை மாலைச்சந்தி மாலை 6 முதல் இரவு 8க்குள் சதுர்த்தசி புரட்டாசி வளர்பிறை அர்த்தயாமம் இரவு 9.30 முதல் 11 க்குள் சதுர்த்தசிமார்கழி திருவாதிரை உசத்காலம் அதிகாலை 3,00 க்கு மேல் 6,00க்குள். மாசி வளர்பிறை காலை சந்தி காலை 6,00 முதல் 9,00க்குள் சதுர்த்தசி பகல் அபிடேகங்களுக்கு மாலையும், இரவு அபிடேகங்களுக்கு மறுநாள் உதயமும் தரிசன காலமாகும். தில்லையில் நடராசரே மூலவரும் உற்சவருமாவார்.

மரகத நடராச வடிவம்

திருஉத்தரகோச மங்கை நடராசர் மரகதத்தாலாய திருமேனி, எனவே எப்போதும் சந்தனக்காப்புக்குள் மறைந்திருப்பார் திருவாதிரை ஒருநாளில் மட்டும் சந்தனக்காப்பு மாற்றிப் புதுச் சந்தனக்காப்பு சாத்தப் பெறும்.

ஆண்பெண்ணாக உலா

திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகார திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும் இறைவி ஆண்வேடத்திலும் திருவீதி உலா வருகிறார்கள்.

தமிழகத்தில் முதல் நடராசர் சிற்பம்
தமிழகத்தில் பல்லவர்காலத்தில் சீயமங்கலத்தில் உள்ள குகைக் கோயில் தூணில் உள்ள சிற்பம் ஆடல் தாண்டவச் சிற்பத்தின் முன்னோடி என்பர். காஞ்சிகைலாச நாதர் கோயிலில் ஊர்த்துவ தாண்டவர் சிற்பம் உள்ளது. சங்கர தாண்டவர் சிற்பம் ஒன்றும் கருவறைக்கு வெளியே உள்ளது.

தட்சிணாமூர்த்தி

எல்லாச் சிவன் கோவில்களிலும் மூலவருடைய கருவறைக்கு வெளியே தென்பக்கத்தில் தட்சிணா மூர்த்தியைக் காணலாம். ஆனால் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி இல்லை காஞ்சிக்குப் பத்துக் கல் தொலைவில் சிறிய ஊரில் இக்கோயிலுக்குரிய தட்சிணாமூர்த்தி தனிக்கோவில் கொண்டுள்ளார்.

சிவன் மானுட வடிவங்கள்

அடியவர்கட்கு அருள்புரிந்து ஆட்கொள்ளச் சிவன் வேண்டி மானுடச் சட்டை தாங்கி மேற்கொண்ட மானுட வடிவங்களைச் சேக்கிழாரும் பரஞ்சோதியாரும் சித்தரித்துக் காட்டியுள்ளனர்.

பெரிய புராணம் காட்டும் வடிவங்கள் -- 15
பெரிய புராணத்துள் சிவபெருமான் சுந்தரருக்காக மேற்கொண்ட மானுட வடிவங்கள் ஆறாகும். அவையாவன

1. தடுத்தாட் கொள்ள வந்த முதிய அந்தணர் வடிவம்
2. திருவதிகையில் திருவடி சூட்ட மேற்கொண்ட முதிய அந்தணர் வடிவம்.
3. திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர் கோலம்.
4. திருக்குருகாவூரில் தண்ணீரும் பொதிசோறும் அளிக்க வந்த மறைவேதியர் கோலம்.
5. திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுக்க அந்தணர் கோலம் 6. பரவையார் ஊடலைத் தவிர்க்க மேற்கொண்ட ஆதிசைவர் வடிவம்‘

அதுபோலத் திருநாவுக்கரசருக்காகச் சிவன் மேற்கொண்ட மானுட வடிவங்கள் இரண்டு.

1. திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளிக்க மேற்கொண்ட அந்தணர் வடிவம்.
2. பனிபடர்ந்து இமயமலையின்கண் அப்பருக்கருள மேற்கொண்ட மாமுனி வடிவம்.

இவற்றைத் தவிர ஏனைய ஏழு மானுட வடிவங்கள் ஏழு நாயன் மார்கட்காக மேற்கொள்ளப் பெற்றவையாகும்.

1. திருநீலகண்ட நாயனாருக்கருள மேற்கொண்ட சிவ யோகியார் வடிவம்.
2. இயற்பகை நாயனாரைச் சோதிக்க மேற்கொண்ட தூர்த்த வேடம்
3. இளையான்குடிமாறநாயனாரை உய்விக்க வந்த அடியார் வேடம்
4. அமர்நீதி நாயனாரை மேற்கொள்ள வந்த பிரமச்சாரி வடிவம்.
5. மானக்கஞ்சாற நாயனாருக்காக மேற்கொண்ட மாவிரதியார் வடிவம்.
6. திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காகக் கொண்ட அருந்தவ வேடம்.
7. சிறுத்தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட பயிரவ வேடம்.

திருவிளையாடற் புராண மானுட வடிவங்கள் -- 24

திருவிளையாடற் புராணத்துள் சிவன் மேற்கொண்ட இருபத்து நான்கு மானிட வடிவங்களைப் பரஞ்சோதியார் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றுள்
வேட வடிவம் நான்கு
புலவர் வடிவம் நான்கு
சித்தர் வேடம் மூன்று
குரு வேடம் மூன்று
வாணியச்செட்டி வேடம் மூன்று
குதிரைச் சேவகன் வேடம் இரண்டு
ஏனையவை ஒன்று ஒன்று ஆகும்.

புலவர் வேடம் நான்கு

1. புலவர் வடிவாகி இசைவாதில் தீர்ப்பு கூறுதல் 
2. புலவராகிப் புலவர்களை அழைத்துச் செல்லுதல்
3. புலவராகி உருத்திர சன்மன் பிறப்பு பற்றிக் கூறுதல் 
4. புலவராகி புலவர் தருமிக்குப் பாடல் அருளுதல்

வேடுவ வேடம் நான்கு

1. வேட்டுவ வடிவில் வீரனாக யானையை எய்தமை 
2. வேடன் வேட்டுவச்சியாக மாபாதகம் தீர்த்தமை 
3. வேட வடிவு கொண்டு வேலாயித்த்துடன் சோழனை வென்றமை 
4. வேட வடிவொடு சுந்தரப் பேரம்பெய்திமை

சித்தர் வேடம் மூன்று

1. எல்லாம் வல்ல சித்த வடிவம் கொண்டமை 
2. சித்தர் வேடம் கொண்டு வைகையை வற்றச் செய்தமை 
3. சித்தர் வேடத்துடன் பொன்னனையாள் இல்லம் சென்றமை

குரு/ ஆச்சார்ய வேடம் மூன்று

1. பதினாறு வயது அந்தணராகக் கண்ணுவர் அரதத்தருக்கு வேதப் பொருளை அருளியமை 
2. ஆச்சார்ய வேடம் கொண்ட இயக்கிமாருக்கு அருளல்
3. ஞானாசிரியர் வடிவு கொண்டு மணிவாசகருக்கு அருளல்

வாணிக வடிவம் மூன்று

1. வைசியர் வேடம் கொண்டு மாணிக்கம் விற்றமை 
2. வளையல் விற்கும் வணிகராக வளையல் விற்றமை 
3. தளபதி செட்டியராக மாமனாகி வழக்குரத்தமை

குதிரைச் சேவக வடிவம் இரண்டு

1. குதிரைச் சேவகனாகி மெய்க்காட்டிட்டமை 
2. மணிவாசகருக்காகச் குதிரைச் சேவகனாகி நரி பரியாக்கியமை

ஏனைய வடிவங்கள்

1. வாள் ஆசிரியராக அங்கம் வெட்டியமை 
2. தவசியாகத் தண்ணீர்ப் பந்தல் வைத்தமை 
3. விறகு வெட்டியாக விறக விற்றமை 
4. வலைஞராகி மீன்வலை வீசியமை 
5. மண் சுமக்கும் கூலியாளாய் மண் சுமந்தமை

பன்றி வடிவம்

இம்மானுட வடிவங்களைத் தவிர பன்றிக் குட்டிகளின் துயர் நீக்க இறைவன் தாய்ப்பன்றி வடிவேற்றுப் பாலளித்த வடிவமும் பரஞ்சோதியாரால் குறிப்பிடப் பெற்றுள்ளது.

சிவன் விடங்க வடிவம்

உளியால் செதுக்கப் பெறாமல் தானே உண்டாகும் சுயம்பு வடிவம் விடங்க வடிவம் எனப்பெறும். சிவபெருமான் விடங்க வடிவங்கள் காணப்பெறும் தேவாரத் திருத்தலங்களான திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு, திருநள்ளாறு ஆகியவற்றைச் சப்தவிடங்கத் தலங்கள் என்று கூறுவர். இவற்றுள் திருவாரூர் நாகை இரண்டை மட்டும் விடங்கத் தலங்களாகக் குறிப்பிட்டுள்ள தேவார ஆசிரியர்கள் கூடுதலான விடங்கத் தலங்களாகத் திருப்பைஞ்ஞீலி, திருவெண்காடு, திருக்கயிலை, திருக்கலயநல்லூர் ஆகிய தலங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

சிவன் விகிர்த வடிவம்

ஒன்றுக் கொன்று எதிர்மறையாய் முரண்பட்டு வேறாயும் உடனாயும் நிற்கும் சிவ வடிவம் விகிர்த வடிவம் எனப்பெறும். வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்பார் ஞானசம்பந்தர். காலத்தால் அழியாத காலத்தைக் கடந்த அனைத்துமான சிவன் பேரியல்புகளை விளக்குவன இவ்விகிர்த வடிவங்களாகும்.

ஒருவன் பலவுருவன் 1--13--2,
ஆனொடு பெண் அலியல்லர் ஆனார் 6--73--3,
உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி 6--6--6
அந்தமும் ஆதியும் 1--39--1
இல்லான் உள்ளான் 6--11--3
நுண்ணியர் மிகப் பெரியர் 1--61--6
அகத்தினர் புறத்தினர் 3--83--8
என்பன போன்ற தேவாரத் தொடர்கள் சிவன் விகிர்த வடிவினை விளக்குவனவாகும்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top