சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் ஓவியங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் ஓவியங்கள் பற்றிய பதிவுகள் :

சிவபெருமான் நடமாடும் பஞ்ச சபைகளில் ஒன்றாகத் திருக்குற்றாலம் சித்திரசபை குறிப்பிடப்படுகின்றது.
தில்லைத் திருமூலநாதர் கோயில் ஓவியங்கள்
சிவபெருமானுடைய இருபத்தைந்து மகேஸ்வர வடிவ ஓவியங்கள் தில்லைப் பெருங்கோயிலில் திருமூலட்டானர் சன்னதியின் வெளிச்சுற்றுச் சுவரில் அழகிய வண்ண ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

திருப்புடைமருதூர்க் கோயில் ஓவியங்கள்
ஐந்து நிலைக் கோபுரத்தினை உடையது இக்கோயில். முதலாவது அடுக்கில் திருஞானசம்பந்தர் புரிந்த திருவிளையாடல்களும், இரண்டாவது அடுக்கில் நடராசர் வடிவமும், மூன்றாவது அடுக்கில் மீனாட்சி சுந்தரேசர் திருமணக் காட்சியும், நான்காவது அடுக்கில் கந்தபுராணக் காட்சிகளும், ஐந்தவாது அடுக்கில் காளியின் நடனமும் அர்த்த நாரீஸ்வரக் கோலமும் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

மதுரைத் திருகோயில் ஓவியங்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் வடக்குப் புறச்சுவரில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் குறிக்கும் ஓவியங்கள் காணப்பெறுகின்றன.

காஞ்சி கைலாச நாதர் ஓவியங்கள்
இராச்சிம்மப் பல்லவன் காலத்தியதாகக் கருதப்பெறும் காஞ்சி கைலாச நாதர் கோயில் ஓவியங்கள் சிதைவு பெற்றிருப்பினும், இங்கு காணப்பெறும் சோமஸ்கந்தர் வரை கோட்டு ஓவியம் குறிப்பிடத்தக்கதாகும்.

பனைமலை சிவன் கோயில் ஓவியங்கள்
தென்னாற்காடு மாவட்டம் பனைமலை சிவன் கோயிலின் உட்புறச் சுவரில் நடராசர் வடிவமும சிவகாமியம்மையின் வடிவமும் சிறந்த ஓவியங்களாகக் காணப்பெறுகின்றன.

சீர்காழிக் கோயில் சிவன் ஓவியங்கள் :

திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த சீர்காழிக்குப் பன்னிரு பெயர்கள் உண்டு. அப்பன்னிரு பெயர்களுக்குரிய புராண நிகழ்ச்சிகள் இக்கோயிலில் உள்ள சம்பந்தர் கோயில் உட்சுவரின் வலப்பக்கத்தில் ஓவியங்களாகச் சித்தரிக்கப் பெற்றுள்ளன. 

அவ்வோவியங்களாவன.

1. பிரமபுரம் -- படைப்புக் கடவுளான பிரமதேவன் வழிபட்டமை

2. வேணுபுரம் -- அறைவன் மூங்கில் வடிவில் தோன்றி அருளியமை.

3. புகலி -- அசுர்ர்களால் அல்லலுற்ற தேவர்கட்குப் புகலிடமானவை.

4. வெங்குரு -- தேவகுருவான வியாழன் வழிபட்டமை.

5. தோணிபுரம் -- பிரளய காலத்தில் ஈசன் தோணியின் மீதமர்ந்து தோணியப்பராய்க் காட்சி தந்தமை.

6. பூந்தராய் -- பூமியைப் பிளந்த இரண்யாக்கதனை வதைத்த திருமாலின் வராகவதார வடிவம் சிவனைப் பூசித்தமை.

7. சிரபுரம் -- நவக்கிரகங்களில் ஒன்றான இராகுக் கிரகம் சிவனைப் பூசித்தமை.

8. புறவம் -- புறாவடிவில் வந்த அக்னி தேவனால் சிபிச்சக்கரவர்த்தி இத்தலத்தில் முத்தி பெற்றமை.

9. சண்பை -- சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தன் குலத்தினரால் தனக்கு நேர்ந்த பழியானது பற்றாமல் இருக்க்க் கண்ணன் வழிபட்டமை.

10. காழி -- காளி வழிபட்டமை.

11. கொச்சைவயம் -- மச்சகந்தியை விரும்பிய பழிச்சொல் நீங்கப் பராசரர் வழிபட்டமை.

12. கழுமலம் -- மும்மலங்கள் விலகும் வண்ணம் உரோமச முனிவர் வழிபட்டமை.

தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள் :

தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் மேற்புற உட்சுவர்களில் தாருகாவனக் காட்சியும், எட்டுக்கைகளையுடைய பைரவர் கோலமும், நாய் வாகனமும் வரையப் பெற்றுள்ளன. தட்சணாமூர்த்தி ஓவியம். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாளுடன் கயிலைக்குச் செல்லும் காட்சி, முப்புரம் எரித்த கடவுள் வடிவம், இராவணன் கயிலையை எடுக்கும் காட்சி ஆகியன சிறப்பான ஓவியங்களாக இங்கு இடம் பெற்றுள்ளன.

திருவண்ணாமலை எழுத்து மண்டப ஓவியங்கள் :

திருவண்ணாமலை மலைப்பாதையில் காணப்பெறும் கிருஷ்ண தேவராயன் மண்டவத்தில் காணப்பெறும் நான்கு புராண ஓவியங்களில் சிவன் உமை திருமணக் காட்சி ஒவியம் இடம் பெற்றுள்ளது. மற்றொன்றில் முருகன் வள்ளி திருமணக் காட்சி இடம் பெற்றுள்ளது.

திருவாரூர் ஓவியங்கள் :

திருவாரூர்க் கோயில் தேவாசிரிய மண்டபத்தில் முசுகுந்த மன்னன்
தியாகராசர் திருவுருவைப் பெற்றுக் கொள்ளும் ஓவியம் காணப்பெறுகின்றது.

இவை தவிரத் தற்காலக் கோயில் திருப்பணியாளர்கள் தற்காலத்தைய புதிய வண்ணங்களைக் கொண்டு பல அழகிய ஓவியங்களைத் தற்போது வரைந்துள்ளமை கண்டு மகிழத் தக்கதாகும்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top