ஸ்ரீநடராஜர் அபிஷேகம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆறு மகா அபிஷேகங்கள் நடைபெறும். சித்திரை மாதத் திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாதத் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாள்களிலும், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் மகா அபிஷேகங்கள் நடைபெறும். இன்று சித்திரைத் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெறவிருக்கிறது.
மானிடர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இதனால், ஆறுகால பூஜையை அவர்கள் நாள்தோறும் செய்துவருகிறார்கள். அதன்படி, சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் இன்று செய்யப்படும் அபிஷேகம், உச்சி கால அபிஷேகம் எனப்படும்.
ஆனந்த மயமாக அனவரதமும் ஆடிக்கொண்டிருப்பவர் ஸ்ரீநடராஜர். பிரபஞ்சத்தை இயக்கும் அந்த நாட்டியத்தால்தான் சகல ஜீவன்களும் தோன்றியது. நடராஜரின் ஆனந்த தாண்டவத்தால்தான் இந்தப் பிரபஞ்சம் மற்றும் சகல ஜீவன்களும் தோன்றின என்கின்றன புராணங்கள். ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கும் நடராஜப் பெருமானைக் குளிர்விக்க தேவாதி தேவர்கள் ஆறுகால பொழுதுகளில் அபிஷேகம் செய்வார்கள்.
மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆறுகால பூஜையைத் தேவர்கள் நாள்தோறும் செய்துவருகிறார்கள் என்பது ஐதிகம். அதன்படி சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் உச்சிக்கால அபிஷேகம் என்று பெயர். நடராஜப் பெருமானின் தோற்றத்தலமான சிதம்பரத்தில் நடைபெறும் சித்திரை மாத திருவோண நட்சத்திர நடராஜர் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அப்போது பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் ஆகிய 16 வகையான பரிமள திரவியங்கள் கொண்டு குளிரக் குளிர நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து அலங்காரம், சோடச உபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராணம் பாராயணம், மகாதீபாராதனை ஆகியனவும் நடைபெறும். இந்த உச்சிக்கால பூஜையைக் காணத் தேவாதி தேவர்களும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கை.
நடராஜரின், இந்த உச்சிக்கால அபிஷேகத்தைக் கண்டால் பிறப்பில்லாப் பெருநிலையை எட்டலாம் என்பது ஐதிகம். மேலும், அனைத்துத் தோஷங்களும் விலகி இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும்..!