சிவதலங்களில் பெரும்பாலும் சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களே அதிகம்.
சிவதலங்களில் பெரும்பாலும் சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களே அதிகம். ஆனால் சிவன் மேற்கு நோக்கியும், அன்னை கிழக்கு நோக்கியும் வீற்றிருக்கும் தலம் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அசல தீபேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் வள்ளி–தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலிக்கிறார். எனவே இந்தத் தலம் சோமாஸ்கந்தர் திருத்தலமாகவும் விளங்குகிறது.
தல வரலாறு
ஒரு சமயம் தேவர்கள் சிவபெருமானை தரிசிக்கும் ஆவலுடன் கயிலாய மலைக்குச் சென்றனர். அங்கு சிவபெருமான், கங்காதேவியை விட்டு விட்டு தனித்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். கங்காதேவியை வழிபட நினைத்த தேவர்கள், தேவியை தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் காணவில்லை. அப்போது தேவர்களின் முன்பு முருகப்பெருமான் தோன்றினார்.
தேவர்கள், அவரிடம் கங்காதேவி குறித்து கேட்டனர். அதற்கு முருகப்பெருமான், கங்கயை கண்டுபிடித்து அழைத்து வருவதாக கூறி புறப்பட்டார். பல இடங்களிலும் தேடியபடி மதுரையை அடைந்தார். மதுரையில் இருக்கும் மீனாட்சி, காவிரிக்கரையில் வில்வ மரங்கள் சூழ்ந்த பகுதியில் கங்கா தேவி இருப்பதாக முருகனுக்கு தெரிவித்தார். முருகப்பெருமான் அங்கும் சென்று கங்கையை தேடினார். ஆனால் கங்கை காட்சியளிக்கவில்லை. இதனால் வருத்தமடைந்த முருகப்பெருமான், கங்காதேவியை நினைத்து கடும் தவம் புரிந்தார். இதையடுத்து முருகனின் முன்பாக கங்கை தோன்றினாள்.
மகனைக் கண்ட தாயின் உள்ளம் மகிழ்ந்தது. ‘முருகா! நீ என்னை நினைத்து தவம் புரிந்த இந்த வில்வ மரங்கள் அடர்ந்த தவச்சாலை, புண்ணியத் தலமாக மாறும்’ என்று அருளினார்.
அப்போது சிவனும், சக்தியும் அங்கு தோன்றினர். சிவன், பார்வதி, கங்கை மூவரும் முருகப்பெருமானுக்கு காட்சியளித்த இடமே, வில்வகிரி சேத்திரம் எனப்படும் மோகனூர்.
திருவிளையாடல் புராணத்தில் இன்னொரு செய்தியும் உண்டு. உலகை சுற்றி வலம் வந்த முருகன், தனக்கு ஞானக் கனி கிடைக்காத காரணத்தால் சக்தியுடனும், சிவனுடனும் கோபித்து கொண்டு பழனி சென்றார். வழியில் மோகனூரில் தங்கினார். கோபித்துச் சென்ற முருகனை தேடினார் சக்தி. அவர் தன் மகனை முதன் முதலாக இந்த தலத்தில் கண்டதால், இவ்வூர் ‘மகனூர்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி ‘மோகனூர்’ என்று மாறியதாகவும் கூறப்படுகிறது.
கங்கா தேவி முருகனை கண்டதும், தாயன்பு வெளிப்பட்டதால், பால் சுரந்து காவிரியில் கலந்தது. எனவே அந்த தீர்த்தத்திற்கு ‘குமரி தீர்த்தம்’ என்றே பெயர் வந்தது. பழைய தமிழ் நூல்களில் காணப்படும் கொங்குகுமரி என்னும் இடமும் இதுவே.
இந்தக் கோவில் சிவன் சன்னிதியில் சிறப்பு கருவறை முன்பு உள்ள அசல தீபம் எப்போதும் ஆடாது, அசையாது இருக்கும். எனவே அசையாத தீபம் கொண்ட சிவன், ‘அசல தீபேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகச்சிறப்பாகும். திருவண்ணாமலை பரணி தீபத்திற்கு வித்திட்ட திருத்தலம் என்றும் கருதப்படுகிறது.
இத்தலத்தில் மேற்கு பார்த்தபடி சிவன் சன்னிதி அமைந்திருப்பது மிகச்சிறப்பாகும். சிவபெருமான் சன்னிதிக்கு நேர் வடக்கு, தெற்காக ஓடும் காவிரி நதியின் கரையில் உள்ள சிவாலயத்தில், காவிரி நதியின் நேர்முகமாக உள்ள சிவனையும், நந்தியையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
கிரி, தீர்த்தம், தலம் என்ற அமைப்பில் இங்கு சிவன், தீர்த்தம், தலம் அமையப்பெற்றிருக்கிறது. பக்தர்கள் நினைத்ததை வழங்கி வெற்றியைத் தருபவர் இத்தல இறைவன். இந்தக் கோவிலில் உள்ள சனி பகவானை, சூரிய பகவான் வழிபட்டு பேறு பெற்றுள்ளார். எனவே இங்கு நவக்கிரக சன்னிதி தவிர்த்து, சனி பகவானுக்கு தனி சன்னிதியும் உள்ளது.
இந்த தலத்தில் சிவபெருமானுக்கு வலது பக்கம், மதுகர வேணி அம்பாள் சன்னிதியும், அம்பாள் சன்னிதிக்கு வலது பக்கம் சிவபெருமான் சன்னிதியும் அமைந்துள்ளது. இந்த இருவர் சன்னிதிக்கும் இடையில் முருகப்பெருமான் வள்ளி–தெய்வானை சமேதராக சோமாஸ்கந்தர் ரூபத்தில் வீற்றிருக்கிறார்.
இங்குள்ள காலபைரவர் சன்னிதியில் எலுமிச்சம் பழ மாலை, நீர்ப்பூசணிக்காய் தீபம், மிளகு தீபம் போன்ற வழிபாட்டு பிரார்த்தனை செய்வது விசேஷம். மேலும் ஹோமம், அபிஷேகம் செய்வது நன்மை பயக்கும். இந்த கோவிலின் தல விருட்சம் வில்வ மரமாகும்.
அமைவிடம்
நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும், பரமத்திவேலூரில் இருந்து கிழக்கில் 17 கிலோமீட்டர் தொலைவிலும், காட்டுப்புத்தூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், கரூர் மாவட்டம், வாங்கலில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூரில் இந்த தலம் அமைந்துள்ளது.
துன்பங்கள் அகற்றும் சரபேஸ்வரர்
அசல தீபேஸ்வரர் கோவிலில், சரபேஸ்வரர் சன்னிதி வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும். வியாபார விருத்தி, உயர்பதவி, தொழில் மேன்மை, கல்வி அறிவு, வீடு யோகம், காரிய வெற்றி, குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு காலத்தில் எலுமிச்சம் பழ மாலை, செவ்வரளி பூ, வடை மாலை சாத்துதல், அன்னதானம் செய்தல், பால், தயிர், இளநீர் போன்ற பூஜைகள் மற்றும் ஹோமம் செய்வது சிறப்பானது.
நரசிம்ம அவதாரத்தில், விஷ்ணு ஆக்ரோஷமாக இருந்த போது அவரை அமைதிப்படுத்த வீரபத்திரரை பரமேஸ்வரன் அனுப்பினார். ஆனால் அவரால் சமாதானப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து சிவபெருமான் சரபராக தோன்றினார். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் சரபர் 30–வது மூர்த்தம் ஆகும். இவரது பாதி சரீரம் விலங்கினங்களிலேயே பயங்கர சக்தி படைத்த யாளியாகவும், பாதி சரீரம் பறவைகளிலேயே மிக சக்தி படைத்த சரபட்சியாகவும் அமைந்திருக்கும்.
இவருக்கு அதிரசம் படைத்து தானம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்ல நட்பு, நல்ல குணங்கள் வளர்வதுடன், இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கும். ஞாயிறு சந்திர ஓரை பூஜையில் 4.30 மணி முதல் 6 மணி வரை பசும்பால் அபிஷேகம் செய்து வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சிக்கலாம். உடையாத அரிசி மணிகளை சந்தன காப்பில் பதித்து வழிபடலாம். வெண் பட்டு சாத்தி, தேங்காய் சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். இவ்வாறு செய்தால் மனதில் நிம்மதி உண்டாகும். வெண் குஷ்டம் குணமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஞாயிறு ராகு காலத்தில் சனி ஓரை சேருகின்ற போது, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சந்தன காப்பு அலங்காரத்தில், சந்தனத்தில் புணுகு, பன்னீர் கலந்த அபிஷேகம் செய்து வழிபட்டால், நம் மீதான வீண் பழிகள், இடையூறுகள் அகலும். மேலும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, துர்க்கா தேவி, நரசிம்மர் ஆகிய 4 பேரும் ஒருசேர சரபேஸ்வரர் உருவத்தில் அருள்பாலிப்பதால் இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜை பிரசித்தி பெற்றதாகும்.