தன்வந்திரி பகவான்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தன்வந்திரி பகவான் பற்றிய பதிவுகள் :

நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் தன்வந்திரி. இவர் மகா விஷ்ணுவின் அவதாரம்; ஆனால் தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த மகாவிஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி பகவான் தனியான சந்நிதியில் காணப்படுகிறார். வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியைத் "தேவர்களின் மருத்துவர்" என்றும் "ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள்" என்றும் கூறுகிறது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, வெளிவந்தவரே தன்வந்திரி பகவான். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் என்றும் இளமை மாறாத ஆயுளோடு வாழும் பேற்றை பெற்றனர். 

தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்பர். பிரமதேவன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தாராம். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற சொல்லுக்கு வான்வெளி என்று பொருள். "தன்வன்" என்றால் "வான்வெளியில் உலவுபவன்" என்று பொருள் கொள்ளலாம். எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் மகாவிஷ்ணுவே, சூரியபகவானாகவும் வருவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையேக் குறிப்பிடுகிறது. தன்வந்திரி பகவான் ஆயுர்வேதத்தைப் படைத்தார் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரி பகவானை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது. தீராத நோய்களும் தீர தன்வந்திரி பகவானைத் துதித்து, வழிபடுவது அவசியம். 

தன்வந்திரி துதி.

"அமுதத்தை ஏந்தி நிற்கும் அருள் கரத்தோய் சரணம்
  குமுதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
  சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
  தாய் போல தரணி காக்கும் தன்வந்திரியே சரணம்". 

தரணி = பூமி
தீராத நோய்கள். தீர தன்வந்திரி பகவானைத் துதித்து வழிபடுவது நன்மை பயக்கும்.

தன்வந்திரி பகவான் ஸ்லோகம் 

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே 
அம்ருத கலசஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய 
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:  

அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே! எல்லா நோய்களுக்கும் மருந்தாகவும், நோய்களைத் தீர்ப்பவனாகவும், இருப்பவனே! மூவுலகங்களுக்கும் அதிபதியே! மகாவிஷ்ணுவே! உம்மை வணங்குகிறோம்.


Post a Comment

1 Comments
Post a Comment
To Top