மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி, தசமி வரையிலான 10 நாட்களும், அம்பாளை தரிசிப்பதற்கு உகந்த நவராத்திரி நாட்களாகவே கருதப்படும். ஆனால் அம்பாளுக்கு விருப்பமான நவராத்திரியாக 4 நவராத்திரிகள் சொல்லப்படுகின்றன. அவை, ஆடி மாதத்தில் வரும் ‘ஆஷாட நவராத்திரி’, புரட்டாசி மாதத்தில் வரும் ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் வரும் ‘சியாமளா நவராத்திரி’, வசந்த காலமாக கருதப்படும் பங்குனி மாதத்தில் வரும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.
இதில் அதிக அளவில் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரியாக, புரட்டாசி நவராத்திரி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் வசந்த நவராத்திரி இருக்கிறது. இந்த நவராத்திரியை வீடுகளில் பொதுமக்கள் கடைப்பிடிப்பது இல்லை என்றாலும், ஆலயங்களில் இந்த நவராத்திரி விழாவின் போது உற்சவங்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மற்ற இரண்டு நவராத்திரிகளும் பெரிய அளவில் கொண்டாடப்படுவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பங்குனியும், புரட்டாசியும் எமதர்மனின் கோரைப்பற்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க்கிருமிகள் பரவும் காலம் என்றும், தெய்வங்களின் அருள் மனிதர்களுக்கு கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அம்பாளை முறையாக வழிபாடு செய்து, 10 நாட்களும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் நன்மைகளைப் பெறலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.
http://blog.omnamasivaya.co.in
புரட்டாசி மாத நவராத்திரியின் போது அம்பாளை, முப்பெரும் தேவியர்களாக கருதி வழிபடுகிறோம். சரஸ்வதி தேவிக்கு மூன்று நாட்களும், மகாலட்சுமிக்கு மூன்று நாட்களும், துர்க்கைக்கு மூன்று நாட்களுமாக 9 நாட்கள் இந்த நவராத்திரி கொண்டாடப்படும். ஆடி மாத நவராத்திரியில் வராகி அம்மனை வழிபடுவார்கள். மாசி மாத நவராத்திரியில் ராஜ மாதங்கி என்னும் சியாமளா தேவியை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். அந்த வரிசையில் வசந்த நவராத்திரியில், உலகை ஆளும் பராசக்தியை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.
வசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகை களைக் கொண்டு செய்யக்கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை கொண்டாடுவதற்கான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.
அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு மனோரமா, லீலாவதி என்று இரண்டு மனைவிகள். துருவசிந்து, வேட்டைக்கு சென்ற இடத்தில் சிங்கம் தாக்கி இறந்ததை அடுத்து, அடுத்த மன்னன் யார் என்ற பிரச்சினை எழுந்தது. முறைப்படி முதல் மனைவியான மனோரமாவின் மகன் சுதர்சனுக்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் லீலாவதியின் தந்தை சத்ருஜித், தன்னுடைய பேரனும், லீலாவதியின் மகனுமான யுதஜித்துக்கு முடிசூட்ட நினைத்தான்.
இதையறிந்த மனோரமாவின் தந்தை வீரசேனன், சத்ருஜித்தை எதிர்த்தான். இவருக்குமான போரில் வீரசேனன் கொல்லப்பட்டான். மனோரமாவும், சுதர்சனும் உயிருக்கு பயந்து காட்டிற்குள் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினர். அயோத்தியின் அரச பொறுப்பு யுதஜித் வசம் வந்தது. அவன் தன் படையை அனுப்பி, சுதர்சனை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். சுதர்சனும், அவனது தாயாரும் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து, அவர்களை கைது செய்ய யுதஜித் முன்வந்தான். ஆனால் அதற்கு பரத்வாஜ முனிவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரையும் கைது செய்ய நினைத்தான், யுதஜித். அப்போது அவனோடு இருந்த அமைச்சர்கள், “முனிவர்களை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல” என்று கூறியதை அடுத்து, தன் நடவடிக்கையை கைவிட்டு, மீண்டும் நாட்டிக்குச் சென்றான்.
ஆசிரமத்தில் இருந்த சுதர்சனுக்கு ‘க்லீம்’ என்ற அம்பாளின் பீஜ மந்திரத்தை, பரத்வாஜ முனிவர் உபதேசித்தார். அதை இடைவிடாது சொல்லி வந்த சுதர்சன், ஒரு கட்டத்தில் தவ நிலைக்குச் சென்றான். அந்த தவத்தால், அவன் முன்பாக தோன்றிய அம்பாள், பல சக்தி வாய்ந்ததும், அழிவில்லாததுமான ஆயுதங்களை அவனுக்கு வழங்கினாள்.
ஒரு முறை பனாரஸ் என்ற நாட்டின் ஒற்றர்கள், பரத்வாஜ முனிவர் ஆசிரமம் வழியாகச் சென்றபோது, சுதர்சன் பலவிதமான ஆயுதங்களை லாவகமாக கையாள்வதைக் கண்டனர். அது பற்றி பனாரஸ் அரசனிடம் சொல்லி, இளவரசியை சுதர்சனுக்கு மணம் முடிக்கலாம் என்று கூறினர். பனாரஸ் மன்னனும், சுதர்சனை முறைப்படி அழைத்துபேசி திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
இதையறிந்த யுதஜித், பனாரஸ் நாட்டின் மீது படையெடுத்தான். அப்போது சுதர்சன் தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு, யுதஜித்தை வெற்றிகொண்டான். போருக்குப்பின் சுதர்சன்- சசிகலா திரு மணம் நடைபெற்றது. அனைவரும் தேவியின் மந்திரத்தை உச்சரித்து அவளை வணங்கினர். இதனால் மகிழ்ந்த பராசக்தி, அவர்கள் முன்பாக தோன்றி, “என்னை வருடந்தோறும் வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள். உங்கள் துன்பங்கள் அனைத்தும் மறைந்து, நன்மைகள் நடைபெறும்” என்று கூறி மறைந்தாள்.
திருமணத்திற்குப்பின், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி அயோத்தியின் அரசனாக சுதர்சன் முடிசூட்டிக்கொண்டு, தன் மக்களுடன் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் வசந்த நவராத்திரியை கடைப்பிடித்து வந்தான். இப்படி தோன்றியதுதான் வசந்த நவராத்திரி என்று சொல்லப்படுகிறது.