வீட்டில் விளக்கேற்றும் சூட்சுமங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வீட்டில் விளக்கேற்றும் சூட்சுமங்கள் பற்றிய பதிவுகள் :

தினந்தோறும் நம் வீட்டில் விளக்கினை ஏற்றி வழிபட்டு வந்தாலும் அதில் உள்ள சந்தேகங்கள் மட்டும் சிலருக்கு இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அதை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் நம் முன்னோர்கள் நமக்கு கூறிச்சென்ற பழக்கவழக்கங்கள் என்ன என்று நாம் தெரிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும். 

ஏனென்றால் நாம் சாஸ்திரத்தில் கூறப்பட்டதை விட நம் பாரம்பரியத்தில் கூறப்பட்டிருக்கும் பழக்கத்தைப் பின்பற்றி வருவது நன்மையான ஒன்று. அந்த பழக்கவழக்கத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் ஆன்மீக புத்தகங்களை படித்து அல்லது மற்ற பெரியவர்களிடம் அதனை கேட்டு பின்பற்ற வேண்டும். 

யஜுர்வேதத்தின் படி விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம். மேற்கும் தெற்கும் விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல. இறந்தவர்களுக்கு கர்மா செய்யும் போது குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும் தான் தெற்கு திசையை நோக்கி விளக்கினை ஏற்ற வேண்டும். மற்றபடி யார் கூறினாலும் தெற்கு திசையை நோக்கி நம் வீட்டில் விளக்கு ஏற்றுக் கூடாது.

பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றலாம். தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு.

திரியானது இரண்டு, மூன்று என்ற கணக்கில் ஏற்ற வேண்டும். தீபம் அணையாமல் எரியும் அளவிற்கு திரியினை போடவேண்டும். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் ஒற்றை திரி இட்டு விளக்கேற்றக் கூடாது. இது இறந்தவர்களின் வீட்டில் ஏற்றும் முறையாகும். மாறாக ஒரு திரியை இரண்டாக பிரித்து தீபம் எரியும் இடத்தில் இரண்டும் சந்திப்பது போல் ஏற்றலாம்.

சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இவைகளை கொண்டு நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம். இதனால் நமக்கு கிடைக்கும் பலன் நன்மையாக தான் இருக்கும். ஆனால் நெய்யையும் நல்லெண்ணையையும் கலந்து விளக்கினை ஏற்றக்கூடாது.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெய் கலந்து தீபம் ஏற்றுவது சாஸ்திரப்படி சரியானது அல்ல. கூட்டு எண்ணெய், கடலை எண்ணெய், வேப்பெண்ணெய், இவற்றில் கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

நம் வீட்டில் சாந்தமான தெய்வங்களை மட்டும் வைத்து வழிபடுகின்றோம். ஆனால் ஆலயங்களில் சாந்தமான தெய்வம், உக்கிரமான தெய்வம் இரண்டையும் சேர்த்து வழிபடுவோம். ஆகையால் விளக்கு ஏற்றுவதில் சிறு வேறுபாடு உள்ளது. ஆலயங்களில் நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணை இவைகளில் விளக்கு ஏற்றலாம்.

இலுப்பை எண்ணெய் கசப்புத் தன்மை உடையது. இந்த எண்ணெயில் கோவில்களில் விளக்கு ஏற்றும் போது நம்மீது மற்றவர்களுக்கு உள்ள கசப்புகளும், வெறுப்புகளும் நீங்கி, அன்பும் பரிவும் ஏற்படும். 

மேற்கு நோக்கி உள்ள சிவாலயங்களில் மாலை நேரத்தில் பிரதோஷ தினத்தன்று இலுப்பெண்ணெய்யில் விளக்கேற்றி வந்தால், கணவன் மனைவியாக இருந்தாலும், அண்ணன் தம்பியாக இருந்தாலும், தந்தை பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையேயான மனக்கசப்புகள் விலகும். 

தினம்தோறும் நம் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் போதுமானது. ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள், பூஜை அறையின் வலது புறம் பசு நெய் தீபமும் இடது புறம் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

வாசலை தெளித்து கோலமிட்டு விட்டு பின்புதான் பூஜை அறையில் விளக்கு ஏற்றவேண்டும்.

பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்ற வேண்டும்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top