சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.
திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.
திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவரும் வேதநாராயணன் என்று பெயர்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019ம் ஆண்டு கிடைத்தது.
திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.
கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.
திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாக்கு சன்னதி இல்லை.
பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனகட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்து கொண்டு தரையில் சாய்வாக கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும் , திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.