ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. ஆஷாட நவராத்திரி காலத்தில் வாராஹி அம்மனை வணங்கினால் வளங்கள் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வர் கோயிலில் ஆஷாட நவராத்திரி நேற்று தொடங்கி 11 நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது.
வழக்குகளிலிருந்து விடுபட வாராஹியின் அருள் கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் கட்டாயம் தேவை. எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால் வாதமும், பித்தமும் ஏற்படும்.
பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்கன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது.
வாராஹி தேவி
லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் விஷூக்ரப் ப்ரான ஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' எனும் நாமங்கள் இந்த அன்னையைக் குறிக்கின்றன. லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவியாவாள். ‘ஜகத் கல்யாண காரிண்ய' எனும் படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் ஸப்தமாதர்ளில் தலையானவள். மகாகாளி தாருகாசுரனோடு போர் புரியும்போது அவளுக்குத் துணை நின்றவள் அன்னை வாராஹி.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவிலில் வாராஹி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியுள்ளது.
பத்து நாட்கள் வழிபாடு
ஆஷாட நவராத்திரி நாளில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். இந்த விழா 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 11ஆம் தேதி குங்கும அலங்காரமும், 12ஆம் தேதி சந்தன அலங்காரமும், 13ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 15ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 16ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும் நடைபெறுகிறது.17ஆம் தேதி பூ அலங்காரமும், 18ஆம் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது. 19ஆம் தேதி நிறைவு நாள் அன்று அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், அதைத்தொடர்ந்து இரவு அம்மன் கோவிலுக்குள் புறப்பாடும் நடைபெறுகிறது.
வராஹ ரூபம்
ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை போன்றவற்றை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தி அவரின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி இவள். சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள்.
பயம் போக்கும் வாராஹி தேவி
இந்த தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது தன்பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற மனைவியாய் இருப்பதுபோல் உள்ளது. அனந்த கல்யாண குணங்களை உடையவள். வலக்கரம் அபய முத்திரையுடன் இருப்பது அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குவதாகவும் உள்ளது.
பெரிய கோவில் வராஹி
பூமியை மறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார். அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார். காசியில் வாராஹி, காஞ்சி காமாட்சிஅம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சைப் பெரிய கோயில் வாராஹி என விசேஷமான வாராஹிசந்நதிகள் பக்தர்களுக்கு அருள்மணம் பரப்பி வருகின்றன.
அன்னைக்கு நிவேதனம்
இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும், வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மயில்தோகை விசிறியால் விசிறி, ப்ரார்த்தனை செய்து முறுக்கும், வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, நெய்விளக்கேற்ற, கேட்ட வரங்களை தருவாள் அன்னை.
வாராஹி தேவிக்கு யாகம்
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சமே. வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பஞ்சமுக வாராஹி அன்னை அருள்பாலிக்கிறார். ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நேற்று முதல் 19ஆம் தேதி வரைக்கும் பத்து நாட்கள் பஞ்சமுக வாராஹி ஹோமம், அபிஷேகம், சகஸ்ர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
காயத்ரி மந்திரம்
இந்த அன்னையைத் துதிக்க வாராஹி மாலை, நிக்ரகாஷ்டகம், அனுக்கொஷ்டகம், அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமாவளி போன்ற பல்வேறு துதிகள் உள்ளன.
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
என்ற வராஹி தேவி காயத்திரியை சொல்லி வணங்குவோம். வளங்களையும் வெற்றிகளையும் பெறுவோம்.