வாராஹி நவராத்திரி - ஆஷாட நவராத்திரி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாராஹி நவராத்திரி - ஆஷாட நவராத்திரி பற்றிய பதிவுகள் :

அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறை சக்தி வழிபாடு. சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான்.

வாராஹி நவராத்திரி - ஆஷாட நவராத்திரி 

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.

12 மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் :

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி .(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம்.

இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது.

வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது. வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.

வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள். வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். 

இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.

முதலாம் நாள் இந்திரா தேவி (ஐந்த்ரி)
இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)
மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)
நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)
ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)
ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா)
ஏழாம் நாள் சாகம்பரி தேவி
எட்டாம் நாள் வராகி தேவி
ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி

நெய்வேலி நகரம், ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ஆலயம் கொண்டமர்ந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகின்றாள்.

சாக்த சாஸ்திரத்தின் படியும், வேதோக்தமாகவும் வைதீக கிரமமாகவும் பூஜைகள் நடைபெறும் ஆலயம்.
இந்த ஆலயத்தில், அம்பிகைக்கு உண்டான பண்டிகைகளான வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி போன்றவை கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

ஆஷாட நவராத்திரியின், ஒன்பது தினங்களிலும், காலை வேளையில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், மாலை வேளையில் அம்பிகைக்கு உரிய நவாவரண பூஜை, மஹா தீபாராதனையும் நடைபெற இருக்கின்றது.

சிறப்பு நிகழ்வாக தானியங்களை காக்கும் அம்பிகையை வழிபடும் வகையில், தானியங்கள் கொண்டு கோலங்கள் (தானிய ரங்கோலி) இடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
மாலை வேளையில் வாராஹி தேவிக்குரிய ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற இருக்கின்றது.

ஆஷாட நவராத்திரியில் அம்பிகையை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.
 
வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு.

சிவனின் பாகம் சத்தி. சத்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.

அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி இவர்களில் வாராகி என்பவளை இந்த நூல் வராகி என்கிறது. வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம். வழக்குகளில் வெற்றி பெற (பகை அழிக்க) வராகியை பஞ்சமி திதி அன்று தேங்காயில் நெய் ஊற்றி விளக்குப் போட்டு வழிபடுவர். இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன.

பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன.

பகைவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்குக எனக் கேட்டுக்கொள்ளும் 10 பாடல்கள் இதில் பிற்காலத்தில் மேலும் சேர்க்கப்பட்டுள்ளன.
பாடல்கள் சிறந்த நடையில் அமைந்துள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top