மஹா சங்கடஹர சதுர்த்தி நாளின் விரதமும் அதனால் கிடைக்கும் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சங்கடஹர சதுர்த்தி நாளின் விரதமும் அதனால் கிடைக்கும் பலன்களும் பற்றிய பதிவுகள் :

சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லை, கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ‘ஹர' என்றால் நீக்குவது என்று பொருள். வாழ்வில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் யாவற்றையும் நீங்கி வாழ மக்கள் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்கின்றனர். 

ஒவ்வொரு பவுர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய நான்காவது நாளை சங்கடஹர சதுர்த்தியாகும். இன்றைய நாளில் விநாயகருக்காக முழுநாள் விரதமிருந்து மாலை கோயிலுக்குச் சென்று வணங்கிய பின் விரதத்தை முடித்துக் கொள்வார்கள். 

இந்த நாளில் வைக்கும் வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் நிறைவேறும் என நம்பப்படுகிறது. இன்றைய நாளில் விநாயகருக்கு கொழுக்கட்டை பிரசாதமாக படைப்பது வழக்கம்.

பெண்கள் இன்றைய நாள் விரதமிருந்து கணவரின் ஆயுட்காலம் அதிகரித்து நித்திய சுமங்கலி வரம் கிடைக்க மாலை கோயிலுக்குச் சென்று வேண்டி வணங்கு வார்கள். 

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார். விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக்கிரகம் செய்தார். 

செவ்வாய்(அங்காரகன்), சங்கடஹர கணபதியை வணங்கியதில் மங்களங்கள் பெற்று மங்கல் என்று பெயர் பெற்றார். சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் உள்ளது. 

சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் வரும். விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மகா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.

ஆண்டின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்தாலே கிடைக்கும் என்பது ஐதீகம். 

தண்டகா வனத்தில் வசித்து வந்த விப்ரதன் என்ற வேடன், கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாத தீய குணங்கள் கொண்டவனாக இருந்தான். நல்வழிப்படுத்த எண்ணிய முனிவர் முத்கலர், அவனுக்குச் சங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். 

முனிவர் கூறிய வழிமுறைகளின் படி, விநாயகரை இடைவிடாது வணங்கியதால் அவனின் நெற்றி நடுவில் இருந்து துதிக்கை தோன்ற ஆரம்பித்து, விநாயகரைப் போன்ற வடிவம் அடைந்தார். நாம் எதை எண்ணுகிறோமோ அதை நிறைவேற்றுபவர் விநாயகர்.

'புருகண்டி முனிவர்' என்றழைக்கப்பட்ட அவருக்கு விநாயகரின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார். 

அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சிறந்தது. 

இதன் மூலம் சித்த சுத்தி ஏற்படுகிறது. ‘நான் பூஜை செய்கிறேன்‘ என்ற அகங்காரம் அகன்று, ‘அவனருளால் அவன் தாள் பணிகிறோம்‘ என்ற எண்ணம் தோன்றுகிறது.

நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. 

புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர் தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக் கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர் கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும். 

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவதால், வாழ்க்கையில் தடங்கல்கள் நீங்கும். செவ்வாய் தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். மங்கல வாழ்வு அமையும். சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

வழிபடுவது எப்படி?

அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்ரகத்தின் முன் நெய் விளக்கேற்றி, விரதம் துவங்கச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சந்திரோதய நேரத்தில் மீண்டும் நீராடி, விநாயகரை மனதாரப் பூஜித்து, சந்திர பகவானையும் பூஜிக்க வேண்டும். அருகம்புல்லால் ஆனை முகனை அர்ச்சிப்பது நலம். 

நான்காம் பிறையை அறியாமல் பார்க்க நேர்ந்தால், சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க அந்த தோஷம் நீங்கும். 

விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு. விநாயகருக்கு, 21 மோதகங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. நாள் முழுவதும் உபவாசம் இருக்க இயலாவிடில், பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம். 

கோயிலுக்கு சென்று விநாயகரை தரிசித்தல் சிறப்பு. பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம் படிப்பது அளவில்லாத நன்மை தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top