நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆவணி கிருத்திகை பற்றிய பதிவுகள் :
12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடங்களில் ஐந்தாவதாக வருகின்ற மாதம் ஆவணி மாதம். இந்த ஆவணி மாதத்தை மாதங்களின் அரசன் என கூறுகின்றனர். காரணம் சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் இந்த ஆவணி மாதத்தில் பல சுபகாரியங்கள் விரும்பி செய்யப்படுகின்றன. பல தெய்வங்களுக்கான திருவிழாக்களும் இந்த மாதத்தில்தான் தொடங்குகின்றன. இப்படிப் பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட ஆவணி மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான தினம் தான் ஆவணி கிருத்திகை தினம். ஆவணி கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் மிகச் சிறப்பான பலன்களை பெறமுடியும்.
முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான ஒரு தினமாக ஆவணி கிருத்திகை தினம் இருக்கிறது. இந்த ஆவணி கிருத்திகை பெரும்பாலும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வருகின்றது. எனினும் இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும்.
கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ஆவணி மாதம் என்பது சூரிய பகவான் அவரின் சொந்த ராசியான சிம்ம ராசியில் வருகின்ற மாதமாகும். மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கப் பெறுகிறது.
முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
முருகனை ஆவணி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு உங்கள் வீட்டின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக வழங்கி நீங்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள், காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.