தீப வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீப வழிபாடு பற்றிய பதிவுகள் :

சிவசக்தி தீபம்

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு

கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர் "தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் பாடுகிறார். 

இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.

ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். 

1. புஷ்ப தீபம் - பிரம்மன்
2. புருஷாமிருகம் - கலைமகள்
3. நாகதீபம் -நாகராஜர்
4. கஜ தீபம் - விநாயகர்
5. வியாக்ர தீபம் - பராசக்தி
6. ஹம்ச தீபம் - பிரம்மா
7. வாஜ்ய தீபம் - சூரியன்
8. சிம்ம தீபம் - துர்கை
9. சூல தீபம் - மும்மூர்த்திகள்
10. துவஜ தீபம் - வாயு
11. வ்ருஷப தீபம் - ரிஷபதேவர்
12. பிரமா தீபம் - துர்காதேவி
13. குக்குட தீபம் - கந்தப்பெருமான்
14. கூர்ம தீபம் - மகாவிஷ்ணு
15. ஸ்ருக் தீபம் - அக்னி
16. சக்தி தீபம் - பராசக்தி.

ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top