திருவிளக்கு வழிபாட்டின் போது பின்பற்ற வேண்டிய முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவிளக்கு வழிபாட்டின் போது பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றிய பதிவுகள் :

1. திருவிளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும்.

2. திருவிளக்கு வழிபாட்டின் போது எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பின்னமடைந்த (உடைந்த, கீறல் விழுந்த) விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. 

3. திருவிளக்கேற்றும் பலன்கள்

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்

4. திருவிளக்கில் பொட்டு வைக்கும் முறை: 

திருவிளக்கு வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் குத்துவிளக்கில் எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது மரபு. 

உச்சியில் ஒரு பொட்டு, அதனை அடுத்து கீழே சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுக்கள், அதனையடுத்து தேவியின் கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள், மற்றும் திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும். இதனால் திருவிளக்கு வழிபாடு நிறைவாய் இருக்கும்.

5. திருவிளக்கேற்றும் திசைகள்

கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

திருவிளக்கை கிழக்கு முகமாக வைக்கவும். வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்கு நோக்கி அமரலாம்.

6. திருவிளக்கிற்கு மலர் சரம் சூட்டலாம். விளக்கு சுடரில் இருந்து ஊதுபத்தி மற்றும் கற்பூரம் கொளுத்துவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

7. குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. 

கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது. திருவிளக்கில் அடிக்கடி எண்ணெய் ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும்.

பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும்.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும். 

தெய்வங்களும் எண்ணெய் வகைகளும் 

கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்

8. திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். 

திரிகளும், பயன்களும் 

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.

வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.

தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.

வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.

புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.

புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.

புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)

9. திருவிளக்கை துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும். தீக்குச்சியால் ஏற்றுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இரு திரிகளையும் கிழக்கு முகமாக ஏற்ற வேண்டும்.

10. திருவிளக்கு வழிபாட்டின் போது விளக்கு ஏற்றிய பின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

11. திருவிளக்கு வழிபாட்டின் போது மந்திரங்கள், பதிகங்கள் மற்றும் பாசுரங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

12. திருவிளக்கு வழிபாட்டின் போது விளக்கு ஏற்றிய பின்பு கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top