கஜமுகாசூரன் வதமும் மூஞ்சூறு வாகனமும் -
பிள்ளையார் அவதரித்த கதை
விநாயகர் சதுர்த்தி ஏன் வந்தது என்பது பற்றியும் அவரது படைப்பு பற்றியும் புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ததால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும் பிள்ளையார்பட்டியில் நடைபெறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அங்கு கஜமுகாசூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டியில் கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.
6ஆம் திருவிழாவன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். மற்றொரு சப்பரத்தில் கஜமுகசூரன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கஜமுகாசூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து கற்பகவிநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அசுரனின் தவம்
முன்னொரு காலத்தில், மாகதர் என்ற முனிவருக்கும், விபுதை என்ற அரக்கிக்கும் மகனாகப் பிறந்தவன் கஜமுகன் என்ற அசுரன். இவன் யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடையவன். அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே பல ஆண்டுகள் காலம் கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன்முன் தோன்றி, என்ன வரம் என்று கேட்டார். அதற்கு அவன், தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்லமுடியாத அளவிற்கு வரம் வேண்டும் என்று கேட்டுப்பெற்றார். வஞ்சக எதிரிகளின் சூழ்ச்சியால் ஒருவேளை எனக்கு மரணம் நேரிட்டாலும், எனக்கு இன்னொரு பிறவி கிடைக்கக் கூடாது என்றும் வேண்டினார். அவனது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கேட்ட வரத்தை கொடுத்தார்.
துன்புறுத்திய அசுரன்
சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். தேவ மைந்தன் அவதாரம் செய்வதற்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த சிவபெருமான் அதற்கான வேலைகளை தொடங்கினார்.
பார்வதி மைந்தன்
தனக்கு காவலாக இருந்த நந்தி சிவனுக்கு விசுவாசமாக இருந்ததால் தனக்காக ஒரு பிள்ளையை மஞ்சளை பிடித்து வைத்து உருவாக்கி உயிர் கொடுத்தார் பார்வதி. அந்த பிள்ளை சிவபெருமானையே வீட்டிற்கு வர விடாமல் தடுக்கவே, கோபம் கொண்ட சிவன் அந்த பிள்ளையின் தலையை தனது சூலாயுதத்தால் கொய்தார்.
தும்பிக்கை விநாயகர்
மகனின் தலை வெட்டப்பட்டது கண்டு கலங்கிய பார்வதி தனது கணவர் சிவன் மீது கோபம் கொண்டார். பிள்ளையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டார். சிவபெருமான் ஆணைப்படி தேவர்கள் வடக்குப் பக்கம் சென்றனர். அங்கே முதலில் தென்பட்டது யானைதான். அதன் தலையை வெட்டி எடுத்து வந்து தலையில்லாமல் இருந்த குழந்தையின் தலையோடு ஒட்டவைத்தனர். ஆவணி மாத சதுர்த்தி நாளில் இந்த சம்பவம் நடைபெற்றது.
தந்தத்தை உடைத்த விநாயகர்
யானை முகத்தோடும், மனித உடலோடும் இருந்த விநாயகரை அசுரன் கஜமுகாசுரனை வதம் செய்ய அனுப்பி வைத்தார் சிவபெருமான். விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. விநாயகர் தமது அம்புகளால் கஜமுகனின் படைகளையும், தேர், மற்றும் ஆயுதங்களையும் நொடியில் அழித்தார். ஆனால், அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை. அப்போது சிவபெருமான், கஜமுகாசுரனை ஆயுதங்களினால் கொல்ல முடியாது என்று கூறவே, விநாயகர் சற்றும் தாமதிக்காமல் தனது வலது தந்தத்தை முறித்தெடுத்தார். கஜமுகன் மீது வேகத்துடன் வீசினார். பல்லாயிரம் சூரியர்களின் ஆற்றலுடன் அந்தத் தந்தம் கஜமுகனைத் தாக்கியது.
கஜமுகாசூரன் சம்ஹாரம்
நிலைகுலைந்து வீழ்ந்த அரக்கன் ஒரு மூஞ்சூராக மாறிப் பிள்ளையாரைக் கொல்ல ஓடி வந்தான். பிள்ளையார் தமது ஞானக்கண்ணால் அவனை நோக்கினார். உண்மையறிவு பெற்ற அந்த மூஞ்சூறு, பிள்ளையாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியது. பிள்ளையார், அன்புடன் அதையே தமது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.
யுகங்கள் தோறும் விநாயகர்
விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையாரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும். விநாயகர் கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சூறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இதன்காரணமாகவே தினம் தினம் ஒரு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் விநாயகர்.
முருகனும் விநாயகரும்
அக்னியில் உதித்த ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார் . சேவல் முருகனின் கொடியிலும் மயில் முருகனின் வாகனமாகவும் மாறியது. அதுபோல விநாயகர் கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து மூஞ்சூறு வாகனமாக தன்னுடன் வைத்துக்கொண்டார்.