விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் சதுர்த்தி பற்றிய சிறப்பு பதிவுகள் :

உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் "ஓம்' என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அந்த பிரணவ மந்திரத்தின் சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மஹாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு.

ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் "காணாபத்தியம்' எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது. விநாயகர் தோன்றிய வரலாற்றினையும், நரமுக கணபதியான அவர் கஜமுக கணபதியான வரலாற்றினையும் புராணங்கள் பல்வேறுவிதமாக விவரிக்கின்றன. 

சுருங்கக்கூறின், அற்புதங்கள் பல நிறைந்தது அவரது அவதாரம். ஆதியிலும் அந்தத்திலும் விளங்கியதால் ஆதியந்தமற்ற பரபிரம்ஹ ஸ்வரூபமாக இவரை, "ஜ்யேஷ்டராஜன்' (மூத்தவர்) என்று வேதங்கள் அழைக்கின்றன. கணங்களுக்கெல்லாம் தலைவரானதால் கணபதி எனவும் மேலானதலைவர் என்பதால் விநாயகர் எனவும், தடைகளை நீக்குவதால் விக்னேஸ்வரர் எனவும் பல பெயர்கள் உடையவரானார். சிவபெருமானுடைய பிள்ளையானதால் மரியாதையாகப் பிள்ளையார் என்று கூறுகின்றோம்.

விநாயகரின் திரு உருவத்தில் பல தெய்வங்கள் உறைகின்றனர். அவரது நாபி பிரம்ம சொரூபத்தையும், முகம் விஷ்ணு சொரூபத்தையும், இடப்பாகம் சக்தி வடிவையும், வலப்பாகம் சூரியனையும், முக்கண்கள் சிவசொரூபத்தையும் குறிக்கின்றன. ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார்.

ஒளவைப்பிராட்டியார் தனது விநாயகர் அகவலில் "தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே!' என அருளிச்செய்ததை இத்தருணத்தில் நினைவிற் கொள்வது சாலச்சிறந்தது. கணபதியை சகலதேவதைகளும் ஆராதித்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் என இதிகாச புராணங்கள் கூறுகின்றன.

முப்புரங்களைப் பொசுக்கப்புறப்பட்ட பரமேஸ்வரனுடைய தேரின் அச்சு முறிந்தபோது விநாயகர் துஷ்டி, புஷ்டி என்ற தேவதைகளை வைத்து தேர் சீர் குலைந்து போகாமல் செப்பனிட்டுக் கொடுத்தார். "அச்சது பொடிசெய்த அதிதீரா' என்பார் அருணகிரியார். பண்டாசுரனுடைய கோட்டையைத் தகர்த்து எரித்து அவன் வதத்திற்கு ஸ்ரீலலிதாம்பிகைக்கு உதவி புரிந்தவர் விக்னேஸ்வரர். திருமால் கண்ணனாக அவதரித்த தருணத்தில், கிடைப்பதற்கரிய சியமந்தக மணியை சத்ராஜித் என்ற மன்னனைக் கொன்று அபகரித்தார் என்ற அவப்பெயர் அவருக்கு ஏற்பட்டது. நாரதர் அறிவுறுத்தியபடி கிருஷ்ணரும் விரதமிருந்து விநாயகப்பெருமானை சதுர்த்தி திதியில் பூஜித்து தனக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கப்பெற்றார்.

முருகனுக்கு வள்ளியைத் திருமணம் புரிவதில் உறுதுணையாக இருந்ததும் விநாயகப் பெருமானே. சந்திரன் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை விநாயகர் அருளால் நீங்கப்பெற்றான். அகத்தியப்பெருமானின் கமண்டலத்தில் அடங்கியிருந்த காவிரியை காகத்தின் வடிவில் தென்னாட்டிற்கு அளித்தவர் கணநாதர். இதன் மூலம் அகத்தியருக்கும் அருள்புரிந்தார். தனக்கு அளிக்கப்பட்ட இட்சுவாகு குல தனமான ஸ்ரீரங்கநாதரை ரங்கவிமானத்துடன் விபீஷணன் இலங்கைக்கு எடுத்து செல்லுங்கால், தனது திருவிளையாடல் மூலம் ஸ்ரீரங்கத்தில் நிலைப்படுத்தி அருளியதும் விநாயகரே.

பக்தி நெறியில் பிள்ளையாரின் அருளைப்பெற்ற மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. "அற்புதம் நின்ற கற்பகக் களிறே' என்று பாடிய ஒளவையைத் தன் துதிக்கையால் கைலாயத்தில் சேர்த்தார். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, விநாயகரின் அருளால் தேவாரங்களை மீட்டெடுத்தார். வேதங்களை வகைப்படுத்தி அருளிய வியாஸர் மஹாபாரதத்தை தான் சொல்லச் சொல்ல அதனை தனது தந்தத்தை உடைத்து எழுதியதும் விநாயகப்பெருமானே. சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமானோடு திருவையாறு அருகில் வரும்போது காவிரி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஈசனை நினைந்து அவர் வேண்ட, ""சுந்தரனே வா!'' என ஓலமிட்டு அழைத்து காவிரியின் நடுவில் பாதை அமைத்து அவருக்கு உதவியவர் விநாயகரே. இவ்வாறு விண்ணோருக்கும் மண்ணோருக்கும் விநாயகர் அருளிச்செய்த செயல்கள், அற்புதங்கள் பட்டியல் நீளூம்.

சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று "விநாயக சதுர்த்தி' பூஜை கொண்டாடப்படுகிறது. (இவ்வாண்டு செப்-10 வெள்ளிக்கிழமை).

பூஜை வழிபாடுகளில் மிக எளிமையானது விநாயகர் வழிபாடாகும். பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிப்பதென்றாலும் அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம். விநாயக சதுர்த்தியன்று களி மண்ணினால் செய்த விநாயகர் திருவுருவத்தை (பிம்பத்தை) வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.

இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது. உலக சிருஷ்டியின் ஆதியில் தோன்றிய வஸ்துக்களில் பிருதிவி எனப்படும் மண்ணும், கடலும் முக்கியமானவை. விநாயகரே ஆதிதேவராக இருப்பதால் இவரை பிருதிவியால் (களிமண்ணால்) உருவாக்கி விநாயக சதுர்த்தியன்று பூஜிக்கின்றோம். புனர்பூஜை கழித்து திரும்பவும் அந்த பிம்பத்தை கடல்நீரில் கரைத்து விடுகின்றோம்.

விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை:

அணிவிப்பதற்கு: எருக்கம் பூக்களால் ஆன மாலை,

அர்ச்சிப்பதற்கு: அருகம் புற்கள்,

நிவேதனத்திற்கு: மோதகம் என்று சொல்லப்படும் அரிசிமாவினால் ஆன கொழுக்கட்டை,

வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை: நெற்றிப்பொட்டில் கைகளால் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுதலும் நன்று.

வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுளான விநாயகப் பெருமானை எந்நாளிலும் வழிபடுவோம். நம்பிக்கையுடன் அந்த தும்பிக்கையானை வழிபட்டால் கற்பகத் தருவாக இருந்து வாழ்வில் நாம் நலம் பெற வேண்டியவைகள் அனைத்தையும் அருளுவார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top