லிங்க வடிவில் காட்சி தரும் சனீஸ்வரர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லிங்க வடிவில் காட்சி தரும் சனீஸ்வரர் பற்றிய பதிவுகள் :

நவக்கிரகங்கங்கள் தான் ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிக்கிறது. நவக்கிரகங்கங்களின் அமைப்பால் தான் ஒவ்வொருவருக்கும் நன்மை, தீமைகள் ஏற்படுகின்றன.

மேலும், மனித உடலும் நவக்கிரகங்களால் தான் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு கிரகமும் உடலின் ஒவ்வொரு பகுதியில் தங்களது சேவையைச் செய்கின்றன. நமது வாழ்க்கைப்பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லவும் நவக்கிரக நாயகர்கள் உதவுகின்றனர்.

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுகிற சனி, நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் திகழ்கிறார். 

சனி வழிபாட்டின் முக்கியத்துவம்

சனி பகவானின் பார்வையை, சக்தியை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்கு உதாரணமாக சிவபெருமான் கூட சனிக்கு பயந்து ஏழரை நாழிகை ஒளிந்து இருந்ததாக புராணங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

அதனால் சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. சன்னதிகளின் இரண்டு பக்கங்களில் நின்று தான் வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வை நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது.

நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சனி, சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று பிறந்தார்.

இவர் மந்தகதி உடையவர். சனீஸ்வரர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 12 ராசிகளையும் சுற்றி வர அவருக்கு முப்பது ஆண்டுகள் ஆகின்றது.

அதையடுத்து, ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அர்த்த சனி, அஷ்டமத்து சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனி பகவானை 27 தடவை சுற்றி வந்து எள் விளக்கு ஏற்றி வந்தால் சனீஷ்வரனின் தாக்கம் குறைந்து, ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம்.

காகத்தை வாகனமாகக் கொண்ட சனீஸ்வரர், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியிலிருந்து சந்த வாசல் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக் குப்பம் என்ற ஊருக்கு அருகில் 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் இந்த கோயில் அமைந்துள்ளது.

காரிகைக் குப்பத்தில் வேறெங்கும் காண முடியாத வகையில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கோயில் கருவறையில் லிங்க வடிவில் இருக்கும் சனீஸ்வரன் காட்சியளிப்பது அந்த கோயிலின் தனிச் சிறப்பு.

மூலவரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சித் தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகிறார்கள்.

ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர். சனீஸ்வரரின் மார்புப் பகுதியில் அறுகோண யந்திரம் உள்ளது. சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் அரூப வடிவில் கொண்டு, அனைத்து அம்சங்களும் கொண்டவராக யந்திர சனீஸ்வரர் விளங்குகிறார்.

சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. சம்புவராய மன்னரின் படைத்தளபதி ஒருவர் இந்த வழியாக சென்றபோது விபத்தில் பலத்த காயமடைந்ததால், சனிதோஷம் இருப்பதால் இந்த விபத்து ஏற்பட்டது.

அப்பொழுது சனிதோஷம் இருப்பதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அதன் பாதிப்பில் இருந்து விலகிட இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலையை மூல மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டும்படி படை தளபதிக்கு அசரீரி கூறியது. அதையடுத்து, மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில் மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையை படை தளபதி பிரதிஷ்டை செய்தார்.

சிறப்பு

வேறு எந்த சனீஸ்வரர் கோயிலிலும் இல்லாத வகையில் யந்திர சனீஸ்வரர் மேற்கு கோபுரம் இல்லாமல் திறந்தவெளியில் நின்று காட்சியளிக்கிறார்.

பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கி இருக்கின்ற நிலையில், இங்கு மட்டும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.

இந்த சனி பகவானின் சிறப்பு குறித்து நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கூறுகையில், சனிக்கிரத்தின் வடதுருவமும், யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பலன்கள்

அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். இந்த சனி பகவானை வணங்குவதால், குடும்பச் சிக்கல்களைப் போக்கவும், வியாபார அபிவிருத்தி, கல்வியில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு கிடைத்திடவும், திருமண தடை நீங்கவும் அருள்புரிகிறார்.

கடன் பிரச்சனை, பிள்ளைப்பேறு, பில்லி, ஏவல், சூன்யம் போக்குதல், விவசாய முன்னேற்றம் என அனைத்திற்கும் யந்திர சனீஸ்வரரை வணங்கினால் நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.

புதிய தொழில் தொடங்குபவர்கள், வழக்கினால் அவதிப்படுபவர்கள், புதிய கணக்குத் தொடங்குபவர்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோர் இந்த கோயிலுக்கு வந்து அதன் ஆவணங்களை யந்திர சனீஸ்வரர் மடியில் வைத்து வணங்குவது சிறப்பாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top