நலம் தரும் நவராத்திரி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நலம் தரும் நவராத்திரி பற்றிய சிறப்பு :

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக்களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து,உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். "ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்...' என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

சரஸ்வதி வழிபாட்டின் பலன்!

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், "சுவாகா' என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும். 

நங்கையருக்கு நலம் தரும் நவராத்திரி!

சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது, "வசந்த நவராத்திரி!' புரட்டாசி மாதத்தில் வழிபடுவது, "பாத்ரபத நவராத்திரி' அல்லது "சாரதா நவராத்திரி. சாரதா நவராத்திரியை கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.

நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர்.

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், "தசரா' என்று அழைக்கின்றனர்.

நவதுர்க்கை:

வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, ஆகரி துர்க்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

அஷ்டலட்சுமி:

ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி. இவை லட்சுமியின் அம்சம்.

அஷ்ட சரஸ்வதி:

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top