தக்ஷிணாயன புண்ய காலத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், புரட்டாசி மாதத்தில் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் சாரதா நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர். நவராத்திரியில் வரும் மூல நக்ஷத்திரத்தில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்வது விஷேஷமாகும்.
நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் கொலு வைத்து பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் கொலு வைத்து சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை, விஜயதசமி நாளில் வித்யாரம்ப பூஜை செய்து வணங்குவார்கள்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும்.
நவராத்திரி கொண்டாட்டம்:
நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்களான மஹா சப்தமி, துர்காஷ்டமி எனப்படும் மஹா அஷ்டமி மற்றும் விஜய தசமி எனப்படும் மஹா நவமி ஆகிய மூன்று நாட்களும் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கூத்தனூர் சரஸ்வதி கோயில், வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூரில் அம்மனின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு வணங்கி அருளைப்பெற ஏதுவாக சரஸ்வதி பூஜையன்று அம்மனின் கால்கள் அர்த்த மண்டபம் வரை நீட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.
சரஸ்வதி ஸ்தாபனம்:
நவராத்திரி தினங்களில் வரும் மூல நட்சத்திரமே சரஸ்வதியின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. வித்யைகளுக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியை பூஜை, ஜபம், பாராயணம் ஆகியவற்றால் ஆராதித்து நன்மையடைய வேண்டிய நாள் சரஸ்வதி பூஜை.
" மூலேன ஆவஹயேத் தேவீம் ச்ரவணேந விஸர்ஜயேத்"
என்பதாக மூலா நக்ஷத்திரத்தன்று பூஜையில் புத்தகங்கள், வாத்தியங்கள், செய்யும் தொழிலுக்கான உபகரணங்கள் சரஸ்வதி பிரதிமை போன்றவற்றை பூஜை செய்யுமிடத்தில் ஓர் பீடம்/பலகையில் வைத்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு மூலா நக்ஷத்திரத்தில் சரஸ்வதி ஆவாஹனம் செய்ய இயலாதவர்கள், நவமியன்று விரிவாக பூஜை செய்து, மறுநாள் தசமியன்று புனர்பூஜை செய்து முடிக்க வேண்டும். சரஸ்வதீக்கான இந்த விசேஷ நவமியை மஹா-நவமி என்று கூறப்படுகிறது.
நவராத்திரியின் ஏழாம் நாளாகிய சரஸ்வதி சப்தமி எனப்படும் மஹா சப்தமியில் சரஸ்வதி தேவிக்குரிய பூஜா மத்திரங்களில் மிக அற்புத சக்திமிக்கதாகவுள்ள வாக்வாஹினிக்குரிய சுலோகங்களை பிலகரி இராகத்தில் பாடி, எலுமிச்சம்பழம் சாதம் பிரசாரமாக படைத்து பழங்களில் பேரீச்சையும் புஷ்பங்களில் தாழம்பூவும் பத்திரங்களில் தும்மை இலைகளாலும் அர்சித்து வணங்க, நல்ல கல்வி ஞானம் வாக்கு சித்தம், தெளிவு என்பன உண்டாகி ஒரு பூரணத்துவம் மிக்க மனிதராக பிரகாசிக்க முடியும்.
பாற்கடலில் வெண் தாமரையோடும் வேதச் சுவடிகளோடும் தோன்றிய கலைமகளை பிரம்மனே முதலில் பூஜித்து தனக்கு இணையாக்கிக்கொண்டார் என புராணங்கள் கூறுகின்றன.
கல்வி, கலைகளின் நாயகியான சரஸ்வதியின் பெருமைகளை பலவாறு கூறுகிறது சரஸ்வதி மகாத்மியம் என்ற நூல். அஞ்ஞான இருளை நீக்கும். இந்த தேவி, எட்டு வடிவங்கள் கொண்டு அன்பர்களை காக்கிறாள் என்று தாரா பூஜை என்ற சாஸ்திரம் தெரிவிக்கிறது. வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா என்ற சியாமளா, கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, கினிசரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கடசரஸ்வதி என எட்டு சரஸ்வதி வடிவங்கள் எட்டுவித குணங்களை அளிப்பதாக தெரிவிக்கிறது