நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

நவராத்திரி அன்று கொலு எப்படி வைக்க வேண்டும் என்பதைப்பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.

கொலு பொம்மை தத்துவம் 

மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு. 

முதல் படியில் 

புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது. 

இரண்டாம் படியில் 

சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள். 

மூன்றாம் படியில் 

எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும். 

நான்காம் படியில் 

நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.

ஐந்தாம் படியில் 

மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள். 

ஆறாம் படியில் 

மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம். 

ஏழாம் படியில் 

முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள். 

எட்டாம் படியில் 

தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது. 

ஒன்பதாம் படியில் 

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். 

உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது. 

நம் வீட்டு குழந்தைகளிடம் கொலு பொம்மைகளை காட்டி மகிழ்ச்சிப்படுத்துவதுடன், அவர்களின் வயதுக்கேற்ற முறையில், இந்த தத்துவார்த்தங்களையும் எளிதில் புரியுமளவு கற்றுத்தர வேண்டும்.

கொலுமேடைக்கு பூஜை செய்யும் முறை: 

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். 

சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு பலகை இட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலையிலும், மாலையிலும் பூஜை செய்ய வேண்டும்.

நவராத்திரி ஸ்லோகம்

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரி தநயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

பொருள்

இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! 
வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! 
மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top