பொதுவாக, ஆலயங்களில் இறைவனின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போதும், வேத மந்திரங்களை ஓதுவதற்கு முன்பாகவும் வேதங்கள் போற்றும் பிரணவ மந்திரமான ஓம் என்ற புனித ஒலியுடனே துவங்கப்படுவதை நாம் கேட்டிருக்கலாம்.
இறைவனே ஓம் என்ற பிரணவத்தின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். விநாயகப் பெருமானின் திருமேனி ஓம் என்ற பிரணவ எழுத்தின் ரூபமாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் பிரணவத்தின் பொருளை தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
சிவபெருமான் இந்தப் பிரணவ சொரூபமாக எழுந்தருளியிருக்கின்ற திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மேல ஓமநல்லூரில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் இறைவி செண்பகவல்லி சமேதராக, பிரணவ அம்சமாக பிரணவேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
இந்தப் பெயரில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் ஒரே தலமாக இந்த ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பிரணவேஸ்வரர், ஓமீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒரு சிறந்த ஆகமக் கோயிலுக்குரிய அனைத்து பரிவார சந்நதிகள் மற்றும் அரிய சிற்பங்களோடு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையும் புராணச் சிறப்பும் வாய்ந்த ஸ்ரீபிரணவேஸ்வரர் ஆலயம் நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் அமைந்ததன் பின்னணியில் புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது.
இயற்கை எழில் மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மகேந்திரகிரி மலையில் இரணியவான் என்ற முனிவர் தன் மனைவி கிரியாவதியோடு பர்ணசாலை அமைத்து சிவபெருமானை நோக்கித் தவமியற்றிக் கொண்டிருந்தார்.
களக்காட்டில் எழுந்தருளியிருக்கும் சத்யவாகீசரின் அருளால் குமுதா, ரோகிணி, பத்ரா மற்றும் ஆருத்ரா என்ற நான்கு புதல்விகள் பிறந்தனர். அவர்களில் பத்ராவை அத்ரி சுக்ருத் என்ற அந்தணர் மணந்து கொண்டதோடு, கடைசிப் புதல்வியான ஆருத்ராவை தன் புதல்வியாகவும் ஏற்றுக் கொண்டு இல்லறம் நடத்தி வந்தார்.
சிறந்த சிவ பக்தையாகத் திகழ்ந்த ஆருத்ரா ஒருநாள் தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்தபோது, விளையாடுமிடத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பக்தியோடு மலர்களை அர்ச்சித்து வழிபட்டாள். ஆருத்ராவின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் அவள் முன்பாகத் தோன்றி அவளை அழைத்துக் கொண்டு மறைந்து விட்டார்.
தன் மகளைக் காணாது வருந்திய அத்ரி சுக்ருத் முன்பாக சிவபெருமான் தோன்றி ஆருத்ரா பார்வதி தேவியே என்று தெரிவிக்க, அந்தணரும், முனிவரும் சிவபெருமானிடம் அங்கேயே கோயில் கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு தொடர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சிவபெருமானும் பிரணவ ரூபமாக பார்வதி தேவியோடு இத்தலத்தில் கோயில் கொண்டாராம்.
மேலும், ஆருத்ரா ஒரு புனித நதியாக மாறி களக்காடு மலையிலிருந்து கங்கையைப்போல பெருகி ஓமநல்லூரை அடைந்தவுடன் தாமிரபரணி நதியில் சங்கமிப்பாள் என்றும், இந்த நதி பெருகி வரும் ஐந்து தலங்களில் தான் பஞ்ச லிங்கங்களாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கப் போவதாகவும் அருள்பாலித்தார்.
சிவபெருமான் முனிவர்களுக்கு அருள்புரிந்தவாறே, களக்காட்டில் சத்யவாகீஸ்வரர், பத்தையில் குலசேகரநாதர், பத்மனேரியில் நெல்லையப்பர், தேவநல்லூரில் சோமநாதர் மற்றும் சிங்கிகுளத்தில் கைலாசநாதர் என்ற பெயர்களில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஐந்து ஆலயங்களும் பஞ்சலிங்கத் தலங்களாக பக்தர்களால் வழிபடப்படுகின்றன. களக்காடு மலையிலிருந்து இரண்யவதி, ருத்ராணி என்ற பெயர்களில் பாய்ந்து வரும் ஆருத்ரா சுற்றிலும் பச்சைப் பசேல் என்று பசுமை சூழ்ந்த பகுதியில் ஆறாக ஓடி, பச்சையாறு என்ற பெயரில் ஓமநல்லூரில் தாமிரபரணி ஆற்றோடு சங்கமிக்கிறது.
இப்பகுதி வரலாற்றுக் காலத்தில் ஆநிரை நாடு, மந்திரேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. இத்தலத்தில் ஒரு காலத்தில் அகத்தியர், ரோமபாதர் போன்ற முனிவர்களும் பல வேத விற்பன்னர்களும் ஆற்றின் கரையில் அன்றாடம் வேத மந்திரங்களை ஓதி, பல யாக யக்ஞங்களை செய்து வந்துள்ளனர்.
எனவே இந்த ஊர், மந்திரேஸ்வரம், ஹோமநல்லூர் என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டதாம். ஹோமநல்லூர் என்ற பெயரே ஓமநல்லூர் என்று திரிந்ததாகவும் கூறப்படுவதுண்டு.
இந்திரஜித்தை வதைத்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு லட்சுமணர் இங்கு வந்து ஈசன் கங்காதேவியை அழைத்து உருவாக்கிக் கொடுத்த சூர்ய தீர்த்தத்தில் நீராடி பிரணவேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக ஐதீகம்.
ஆலயத்திற்கு முன்பாக உள்ள புஷ்கரணியே சூர்ய தீர்த்தமாகும். ஆலயத்திற்குள் சந்திர தீர்த்தம் உள்ளது. மிகவும் சிதிலமடைந்து, பராமரிப்பின்றி பொலிவிழந்திருந்த இந்தப் பழமையான ஆலயம் செப்பனிடப்பட்டு, 2013ம் ஆண்டு குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ளது.
அதிகார நந்தி, சூரியன், சந்திரன், கன்னிமூலை விநாயகர், தட்சிணாமூர்த்தி, சொக்கநாதர், மீனாட்சி, சங்கரர் (சிவலிங்கம்), வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டேசர், துர்க்கை, பைரவர் ஆகிய பரிவார சந்நதிகளோடு உள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக பிரணவேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். இறைவி செண்பகவல்லி தனிச் சந்நதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.
சுயம்புலிங்கமாக கருவறையில் எழுந்தருளியிருக்கும் பிரணவேஸ்வரரை இங்குள்ள மலைப்பகுதிகளில் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களும், சித்தர்களும் அன்றாடம் வலம் வந்து வழிபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் வளர்பிறையில் மூன்று நாட்கள் சூரியன் தன் கிரணங்களால் பிரணவேஸ்வரரை வழிபடுகிறார். பிரணவ சொரூபமாக அருள்பாலிக்கும் இந்த பிரணவேஸ்வரரை மனதார வழிபட வாழ்க்கையில் தீராத பிரச்னைகள் தீரும். ஞானம் அனைத்தும் கிடைக்கும்.
திருநெல்வேலியிலிருந்து பத்தமடை வழியாக பாபநாசம் செல்கின்ற சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள பிராஞ்சேரி என்ற ஊரிலிருந்து,
2கி.மீ. தொலைவில் ஓமநல்லூர் ஆலயம் அமைந்துள்ளது.