சந்திரன் ஒரு இராசியை கடக்க இரண்டே கால் நாட்கள் வீதம், 12 இராசிகளையும் சுற்றி வர 28 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார்.
இந்நிலையில் ஒரு இராசிக்கு 8 - ஆம் இடத்திற்கு சந்திரன் வரும் தினமே சந்திராஷ்டம தினம் ஆகும்.
உதாரணமாக, கும்ப இராசியில் பிறந்தவருக்கு கன்னியில் சந்திரன் வரும் தினம் சந்திராஷ்டம தினம் ஆகும்.
சந்திராஷ்டம தினங்கள் இருவகைப்படும்.
1. தேய்பிறை சந்திராஷ்டமம்
2. வளர்பிறை சந்திராஷ்டமம்.
இதில் வளர்பிறையில் வரும் சந்திராஷ்டமம் தான் விபத்து போன்ற அதிக கெடுதல்களை செய்யக்கூடியது. தேய்பிறையில் வரும் சந்திராஷ்டமம் சில மன உளைச்சல்களை மட்டுமே கொடுக்கும்.
சந்திராஷ்டம தினத்தில் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது :
சந்திராஷ்டம தினத்தில் மனம் பெரும் குழப்பத்தில் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை அன்றைய தினத்தில் எடுக்கவே கூடாது.
பிரயாணங்களை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. அன்று பேச்சில் அதிக நிதானம் தேவை.
காரணம் இல்லாமல் மனம் கோபம் அடையும். அதிக எதிர்மறை எண்ணங்கள் அன்றைய தினத்தில் மனதில் எழும்.
சந்திராஷ்டம தினத்தின் தீவிரத்தை குறைக்க விரும்பினால் அன்றைய தினத்தில் வேறு நபருக்கு இனிப்பு பலகாரம் வாங்கிக் கொடுங்கள். இது ஒரு சிறந்த பரிகாரம். இதன் மூலம் சந்திராஷ்டமத்தின் கடுமை ஓரளவு குறையும்.