ஏழுகடல் சங்கமிக்கும் கோவில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவஸ்தலம் பற்றிய பதிவுகள் :

ஏழுகடல் சங்கமிக்கும் கோவில்.

சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழு தீர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.

இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண, உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் வருந்த, நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன் என்றார் சிவன். அதன்படி அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார்.

இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை இக்கோவில் மூல லிங்கத்தின் பின்புறம் காணலாம்.

கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால்
குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச் சொல்லுக்கு அஞ்சி அந்தக்குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். 

அவர் மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொல்ல, அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்தி தேவி, வழி காட்டியருளுமாறு இறைவனிடம் இறைஞ்சினாள்.

அப்போது திருநல்லூர் கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக என்று அசரீரி ஒலித்ததாகவும், குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடுபட்டதாகவும் வரலாறு.
அவள் நீராடிய அந்த தீர்த்தம் - சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள ஊர் பாபநாசம். பாபநாசத்தை அடுத்து வரும் வாழைப்பழக் கடை என்ற ஊரில் இருந்து பிரியும் சாலையில் 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. பாபாநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக கோவிந்தக்குடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top