உண்ணாவிரதமும் மவுன விரதமும் ஆன்மிக முன்னேற்றத்திற்காக அனுசரிக்கப்படும் இரு முக்கியமான விரதங்கள்.
சஷ்டி, ஏகாதசி போன்ற தினங்களில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் பலர் உண்டு. ஆனால் மவுன விரதம் இருப்பவர்கள் குறைவு. உண்ணாவிரதமே கடினமானதுதான். ஆனால் மவுன விரதம் என்பது அதையும் விடக் கடினமானது.
உண்ணாவிரதம் உடலைப் பட்டினி போட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. மவுன விரதம் மனதைப் பட்டினி போட்டு அதன் ஆற்றலை மேம்படுத்துவது. மனதின் தீய எண்ணங்கள் மவுன விரதம் இருப்பதால் பெரிதும் குறையும்.
தென்திசைக் கடவுள் எனப் போற்றப்படும் தட்சிணாமூர்த்தி சிவ பெருமானின் ஒரு வடிவம் ஆவார். அவர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மவுனத் தாலேயே உபதேசம் நிகழ்த்துகிறார். பல கோயில்களில் இடம் பெற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக் கடவுள் சிலை, மவுனத்தின் சிறப்பை மவுனமாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
ரமண மகரிஷி பல நேரங்களில் மவுனமாகவே இருப்பார். அவரைத் தேடிவரும் அடியவர்கள் தங்களின் ஆன்மிக சந்தேகங்களை மனத்தில் நினைத்துக் கொண்டு அவரின் எதிரில் அமர்ந்து தியானம் செய்வார்கள். அப்போது மவுனத்தின் மூலமாகவே அவர்களுக்கு அவர் பதிலளித்துவிடுவார். பல வெளிதேசத்து அடியவர்கள் அவ்விதம் ஸ்ரீரமணர் சன்னிதியில் அமர்ந்து ஆன்மிக ஐயப்பாடுகளுக்குத் தெளிவு பெற்றிருக்கிறார்கள். ரமண மகரிஷியின் மவுனம் எத்தனை சிறப்பானது என்பது பற்றி அவரைச் சந்தித்து ஆன்மிக விளக்கங்கள் பெற்ற வெளி தேசத்தவரான பால்பிரண்டன் தான் எழுதிய நூலில் விவரித்திருக்கிறார்.
ஸ்ரீஅரவிந்தர் ஒருநாள் இரண்டு நாள் அல்ல, பல மாதங்கள் மவுனமாய் இருந்ததுண்டு. தியானத்திலேயே ஆழ்ந்து அவர் மவுனமாய் இருக்கும்போது அடியவர்கள் தங்களின் ஆன்மிக சந்தேகங்களை அவருக்குக் காகிதத்தில் எழுதி அனுப்புவார்கள். ஸ்ரீஅரவிந்தர் தம் விளக்கங்களை எழுத்து மூலம் எழுதி அனுப்புவார்.
இந்து சமயம், பவுத்த சமயம், சமண சமயம் உள்ளிட்ட பல சமயங்கள் மவுன விரதத்தின் அவசியத்தையும் பெருமைகளையும் பற்றிப் பேசுகின்றன.
முருக பக்தர்கள் கந்த சஷ்டி காலத்தில் மவுன விரதம் இருப்பதுண்டு. ஒருவார காலம் மவுன விரதம் அனுசரித்து கந்த சஷ்டியன்று அவர்கள் மவுன விரதத்தைத் துறப்பார்கள்.
பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்திரம் என்ற நூலில் மவுனத் தவம் இருப்பதால் பல்வேறு சித்திகளை அடைய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.`மவுனம் சர்வார்த்த சாதகம்` என்பார்கள். அதாவது எல்லாவற்றையும் நமக்கு சாதகமாக ஆக்கித்தரும் ஆற்றல் நாம் கடைப்பிடிக்கும் மவுனத்திற்கு உண்டு.
`மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி` என்றும் சொல்வதுண்டு. நாம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு ஒருவர் வாய்திறந்து எதுவும் பதிலாகத் தெரிவிக்காமல் மவுனமாய் இருப்பார் என்றால், அது நம் கேள்விக்கான உடன்பாட்டுப் பதிலை அவர் சொல்கிறார் என்பதற்கான அடையாளம்.
மவுன விரதம் இருப்பதன் முக்கியமான பயன்களில் ஒன்று பொய் பேசுவதை நாம் தவிர்த்துவிட முடியும் என்பது. பாவங்களில் மிகப் பெரிய பாவம் பொய்.
இன்றைய காலகட்டத்தில் பொய் பேசுவதைத் தவிர்க்க இயலாது என்ற சமாதானத்துடன் பலரும் சின்னதாகவும் பெரிதாகவும் பொய் களைப் பேசுவதை வழக்கமாய்க் கொண்டு விட்டார்கள். அதுபற்றிய குற்ற உணர்வு கூடக் குறைந்து விட்டது.
மவுன விரதம் இருந்தால் அந்த நேரத்தில் நாம் பொய் பேசமாட்டோம் என்பது மட்டுமல்ல, மெல்ல மெல்ல உண்மையை மட்டுமே பேசத் தொடங்குவோம்.
கோள் சொல்வது, புறம்பேசுவது, தேவையற்ற வெட்டி அரட்டைகளில் ஈடுபட்டுக் காலத்தைக் கொல்வது போன்றவையெல்லாம் கூட மவுன விரதம் அனுசரிப்பதால் நீங்கும். அவை நீங்குவதால் மனதின் ஆற்றல் மேலோங்கும்.
இதுவரை நாம் அனுபவித்தவை எல்லாம் புலன் இன்பங்கள் மட்டுமே என்பதையும் அமைதியான மனமும் எதிர்பார்ப்புகள் அற்ற வாழ்வுமே நிம்மதியைத் தரும் என்பதையும் மவுன விரதம் நமக்குப் புலப்படுத்தும். நாம் வாழ்வில் மேற்கொண்ட லட்சியங்களில் இருந்து விலகி வேறு திசைகளில் பயணம் மேற்கொள்வதை மவுன விரதம் நமக்குச் சுட்டிக் காட்டும். நம் வாழ்வைச் சரியான திசையில் செலுத்த மவுன விரதமே கைகொடுக்கும்.
இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும் இருக்கும் மனநிலையை மவுன விரதம் நம்மிடம் ஏற்படுத்தும். மனம் வலிமை பெறுவதால் நாம் நினைத்த செயல்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிட்டுவதை நாமே உணர முடியும்.
மவுன விரதம் நம் மனதைப் பற்றி நாம் ஆராயவும் நம் எண் ணங்களை நாம் கண்காணிக்கவும் பெரிதும் உதவுகிறது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று வள்ளுவர் சொல்லும் உயர் நிலையை எட்ட மவுன விரதம் பெரிதும் உதவுகிறது. நாள்தோறும் ஓரிடத்தில் அமர்ந்து சிறிது நேரமாவது எதுவும் பேசாமல் மவுன விரதம் பழகுவது உள்ளத்திற்கு மிகவும் நல்லது. அலைபாயும் மனத்தை அடக்குவதற்கு மவுன விரதம் ஒரு கருவியாகப் பயன்படும்.