ஆலயத்தில் எலுமிச்சை விளக்கேற்றும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயத்தில் எலுமிச்சை விளக்கேற்றும் முறைகள் பற்றிய பதிவுகள் :

துர்க்கையின் சன்னதியில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாகத் தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு இருக்க வேண்டும்.

இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்கி சார்த்த வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் அன்னை பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். 

விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்றுவது கூடாது.

வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, ஊதுபத்திகள் ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும். வீட்டில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடக் கூடாது.

துர்கா காயத்ரி மந்திரம்:

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்.

எலுமிச்சைக்கு மிக பெரிய சக்தி இருப்பதால் தான் அது திரி சூலத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. தீய சக்திகள் வீட்டில் நுழையாமல் தடுக்க, எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதை வாசற்கதவின் இருபுறமும் வைப்பது வழக்கம். அதேபோல் கண்திருஷ்டி விலக எலுமிச்சை பழத்தை சுற்றிப்போடுவதும் வழக்கம். இப்படி பல அபூர்வ பலன்களை கொண்ட எலுமிச்சையால் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்சனைகள் தீரும்.

ஞாயிறு மாலை 4.30 – 6.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் தீராத நோய்கள் தீரும். செவ்வாய் கிழமை மாலை 3.00 – 4.30 மணி வரை உள்ள ராகுகாலத்தில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். வெள்ளிக்கிழமை காலை 10.30 – 12.00 மணி வரை உள்ள ராகுகாலத்தில் 2 எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை மனமுருகி வேண்டினால் சந்தோசமாக வாழ வழி பிறக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top