இன்னலை நீக்கும் எலுமிச்சை தீபம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இன்னலை நீக்கும் எலுமிச்சை தீபம் பற்றிய பதிவுகள் :

எலுமிச்சையானது கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சைப் பழத்துக்கு தீய சக்திகளை விரட்டுகிற சக்தி உண்டு என்பது ஐதீகம். கண் திருஷ்டி முதலானவை நீங்குவதற்கும் எலுமிச்சையின் சக்தி அளப்பரியது. அதனால்தான் சில வீடுகளில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சைப் பழம் கொண்டு, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்.

எலுமிச்சை தீப வழிபாடு!

எலுமிச்சை தீப வழிபாடு என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அம்மனுக்கு செவ்வாய், வெள்ளியில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்தான். குறிப்பாக, எலுமிச்சையில் தீபமேற்று வழிபடுவது இன்னும் விசேஷம்.

வீட்டில் சிலருக்கு அடிக்கடி நோய் வந்து அல்லல்பட்டாலும் வயிறு முதலான உபாதைகளில் தவித்து மருகினாலும் எலுமிச்சையே முதல் முழு நிவாரணமாகத் திகழ்கிறது. இதன் ஒரு துளியே அமிர்தம் என்று போற்றுகிறார்கள் சான்றோர்கள்.

ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.

விளக்கேற்றுவதன் சரியான முறைகள் :

ராகுகால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.

ஸ்ரீதுர்கை வழிபாட்டில், மிக முக்கியமானது எலுமிச்சை தீப வழிபாடுதான் என்பது அறிந்ததுதான். ஞாயிற்றுக் கிழமை ராகு கால வேளையான 4.30 முதல் 6 மணிக்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலவேளையான மதியம் 3 முதல் மாலை 4.30க்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், குடும்பப் பிரச்சினை நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகும்.

வெள்ளிக்கிழமை ராகுகால வேளையான காலை 10.30 முதல் 12க்குள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், சிக்கல்கள் யாவும் தீரும். ஐஸ்வரியம் பெருகும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்.

திருக்கார்த்திகை தீபநாளில், எலுமிச்சை தீபத்தை எப்போதும் ஏற்றலாம். வழிபடலாம். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீட்டில் சுபிட்சம் நிலவும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்தச் சொல்லுக்கு ‘முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க’ என்று பொருள்.

துர்க்கை வழிபாடு:

அன்னை துர்க்கா தேவியை எந்நாளும் வழிபடலாம். இருந்த போதும் ராகு கால வேளையில் வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் ராகு காலத்தில் அன்னை துர்க்கா தேவியின் ஆட்சியே பலம் பெறுகிறது. கிரகங்களில் ராகு கேது தோஷங்களினால் பாதிக்கப்பட்டிருந்தால், ராகு கால வேளையில் அன்னை துர்க்கையை சரணடைந்து விளக்கேற்றி வழிபட்டால் சகல தோஷங்களிலிருந்தும் காப்பாற்றுவாள்.

துர்க்கை வழிபாட்டில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முக்கியமாக கருதப்படுகிறது. குடும்பத்தில் தீராத பிரச்னைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம், செய்வினை பிரச்சினைகள், திருமண பாக்கியம், குழந்தைப் பாக்கியம் என எந்த பிரச்சி னையாக இருந்தாலும் அன்னை துர்க்கையின் சன்னதியில் எலுமிச்சை விளக்கேற்றி மனமுருக வேண்டினால் துர்க்கை அம்மன் நம்மை காத்து ரட்சிக்கிறாள்.

ஆன்மீகத்தில் எலுமிச்சைக் கனி:

சக்தி ஆலயங்களில் தேவியின் முன்பாக உள்ள சூலங்களிலும், காவல் தெய்வங்கள் அருகில் இருக்கும் சூலங்களிலும் எலுமிச்சை சொருகியிருப்பதை பார்த்திருப்போம். நமது மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு பதிலாக ஏன் எலுமிச்சைக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஆன்மீகத்தில் எலுமிச்சையை தேவ கனி என்று அழைப்பார்கள். மற்ற கனிகளைக் காட்டிலும் மனித எண்ணங்களை ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு என்பதால் சூலத்தில் குத்தப்பட்டிருக்கும். 

நீண்ட கால பிரச்னைகள் தீர்வதற்கு அம்மனுக்கு கனி மாலை சாத்தி வழிபாட்டால் கைகூடும் என்பது நம்பிக்கை. அதற்கு எலுமிச்சை கனி மாலையைத் தான் அம்மனுக்கு சாத்துவார்கள். எலுமிச்சம்பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆகவே இவ்வளவு சிறப்பம்சங்கள் எலுமிச்சை கனிக்கு இருப்பதால் தான் ஆன்மீகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top