மார்கழி மாத பௌர்ணமியின் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாத பௌர்ணமியின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

சனாதன தர்ம மார்க்கத்தில் சிவனை வழிபடும் சைவ சமயமும், பெருமாளை வழிபடும் வைணவ சமயமும் இரு பெரும் பிரிவுகளாகும். வருடத்தில் சிவன் மற்றும் பெருமாளுகென்று தனித்தனியே சில வழிபாட்டு தினங்கள் வருகின்றன. 

ஆனால் மாதம் முழுவதும் இந்த இரு தெய்வங்களுக்குரிய வழிபாட்டு தினமாக வருவது மார்கழி மாதமாகும். அப்படிபட்ட மார்கழி மாதத்தில் வரும் “மார்கழி பௌர்ணமி” தினத்தின் சிறப்புகளும், அன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

புரட்டாசி மாதம் எப்படி பெருமாளின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதமாக இருக்கிறதோ, அதே போன்று மார்கழி மாதமும் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு மூர்த்திகளையும் வழிபடுவதற்குரிய ஓர் சிறந்த மாதமாக இருக்கிறது. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் இந்த இரு தெய்வங்களையும் வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும். 

மேலும் மார்கழி மாதம் குரு பகவானுக்குரிய தனுசு ராசியில் பிறக்கிறது. ஜோதிடத்தில் குரு பகவானின் உச்ச ராசியாக சந்திர பகவானுக்குரிய கடக ராசி இருக்கிறது. எனவே மார்கழி எனும் தனுர் மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் கோயிலுக்கு சென்று வழிபடுபவர்களுக்கு சந்திரன் மற்றும் குரு பகவான்களின் அருளும் கிடக்கிறது.

மார்கழி பௌர்ணமி அன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் விருப்பத்தை பொறுத்து சிவன் கோயிலுக்கோ அல்லது விஷ்ணு கோயிலுக்கோ சென்று வழிபட வேண்டும். இந்த தினத்தில் விரதமிருக்க விரும்புபவர்கள் விரதமிருக்கலாம்.

மாலையிலும் சிவன் அல்லது விஷ்ணு கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பொதுவாக மார்கழி பௌர்ணமி தினத்தில் காலையில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டவர்கள், மாலை பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுவதும், காலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டவர்கள் மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் சாலச் சிறந்ததாகும்.

மார்கழி பௌர்ணமி தினத்தில் இந்த முறையில் வழிபடுபவர்களுக்கு உடல்,மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்கும். மனோதிடம் பெருகும். மனதில் சிறந்த சிந்தனைகளும், எண்ணங்களும் எப்போதும் தோன்றும். பெருமாளின் அருட்கடாட்சம் கிடைத்து வீட்டில் வளங்கள் பெருகும். மனதில் இருக்கின்ற பயங்கள், கவலைகள் போன்றவை நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வழக்கம். நடராஜரை வழிபடும் நாளாகவும், பெண்கள் தங்கள் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டும் என விரதம் இருக்கும் உன்னதமான நாள். திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து நடராஜர், அம்பாளை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top