சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ்மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில் "சங்கராந்தி" என்பர்.
தை மாதப் பிறப்பு மகர சங்கராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாத சங்கராந்தியும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்பட்டு, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
தான்ய சங்கராந்தி:
சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை மாதத்தின் முதல் நாள், தான்ய சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரியபகவானை பூஜித்து தானிய வகைகளை தானம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன்கள் கிட்டும்.
தாம்பூல சங்கராந்தி:
வைகாசி, ரிஷபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாதப் பிறப்பு, தாம்பூல சங்கராந்தி எனப்படுகிறது. அன்று சூரியனுக்கு அர்ச்சனை செய்து ஒரு மண் பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், இயன்ற தட்சணை வைத்து வாசனைப் பொருட்களுடன் வயதான தம்பதியருக்கு தானம் அளித்தால் நற்பலன்கள் பெருகும்.
மனோரத சங்கராந்தி:
மிதுனராசிக்கு சூரிய பகவான் இடம் பெயரும் ஆனி மாதப் பிறப்பு, மனோரத சங்கராந்தி என வழங்கப்படுகிறது. அன்று ஒரு குடத்தில் வெல்லத்தை நிரப்பி, வேதம் கற்ற பெரியோருக்கு அறுசுவை உணவளித்து, பின் அந்த வெல்லக்குடத்தை தானம் செய்ய வேண்டும். இதனால், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
அசோக சங்கராந்தி:
ஆடி மாத ஆரம்பம், சூரிய பகவான் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம். அன்றைய தினம், சூரியபகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவோ கேட்கவோ வேண்டும். முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டும். இது அசோக சங்கராந்தி எனப்படுகிறது. அன்று ஆதித்யனை வணங்குவதால், சோகங்கள் நாசமாகும்.
ரூப சங்கராந்தி:
ஆவணி மாதப் பிறப்பு, சிம்மராசியில் சூரியன் நுழையும் நேரம். இது ரூப சங்கராந்தி எனப்படு கிறது. ஒரு பாத்திரத்தில் நெய்யை நிரப்பி சூரியனை வழிபட்டபின் அதனை தானமளிப்பது நல்லது. இதனால் நோய்கள் நீங்கும்.
தேஜ சங்கராந்தி:
கன்னிராசியில் சூரியன் பிரவேசிக்கும் புரட்டாசி மாதப்பிறப்பு அன்று தேஜசங்கராந்தி. அன்று நெல், அரிசி போன்றவற்றின் மீது கலசம் வைத்து அதில் சூரியனை எழுந்தருளச் செய்து மோதகம் நிவேதிக்க வேண்டும். இதனால் காரியத்தடைகள் அகலும்.
ஆயுர் சங்கராந்தி:
ஐப்பசி மாத முதல் நாள், பகலவன் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். இந்த நாள், ஆயுர் சங்கராந்தி எனப் போற்றப்படுகிறது. அன்று கும்பத்தில் பசுவின் பாலோடு வெண்ணெய் சேர்த்து நிரப்பி, சூரியனை வழிபட்டபின், வேதியர்க்கு அக் கும்பத்தை தானமாக அளிக்க வேண்டும். இதனைச் செய்வதால் ஆயுள்பலம் கூடும்.
சௌபாக்கிய சங்கராந்தி:
கார்த்திகை மாத முதல் நாள் சூரியன் விருச்சிக ராசியில் நுழைகிறார். இந்நாள் சௌ பாக்கிய சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. அன்று சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து சிவப்பு நிற துணி சாத்தி, இயன்ற மங்களப் பொருள்கள் அல்லது ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் தடைகள் விலகி எ ண்ணியது ஈடேறும்..
தனுர் சங்கராந்தி:
சூரியன் தனுசு ராசியில் வாசம் செய்யத் தொடங்கும் மார்கழி மாதப் பிறப்பினை தனுர் சங்கராந்தி என அழைப்பர். அன்றைய தினம் ஒரு கலசத்தில் சுத்தமான நீரை நிரப்பி சூரியனின் பிரதிமையை அதில் போட்டு அல்லது சூரியனின் பிம்பம் அதில் விழும்படி வைத்து பூஜித்து, அதனை தானமாக அளிக்க வேண்டும். எளியவர்களுக்கு இயன்ற உணவளிக்க வேண்டும். இதனால் கிரக தோஷங்கள் நீங்கும்.
மகரசங்கராந்தி:
தைமாதம் கதிரவன் மகர ராசியில் சஞ்சரிப்பதால், இது மகரசங்கராந்தி. இதுவே பொங்கல் திருநாளாக பிரசித்தி பெற்றது. இது மற்ற அனைத்து சங்கராந்திகளைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதமே தேவர்களின் விடியற்காலை நேரமாகும். முதல் நாளில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவதோடு, இந்த மாதம் முழுவதும் இஷ்ட தெய்வ ஆராதனை செய்தால் மகத்தான புண்ணியம் கிட்டி, செல்வ வளம் சேரும்.
லவண சங்கராந்தி:
மாசிமாதம், கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாத பிறப்பு லவண சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரிய பூஜை செய்து உப்பினை தானமாக அளித்தால் மோட்சம் கிட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
போக சங்கராந்தி:
பங்குனி மாத முதல் நாள், போக சங்கராந்தி தினம். ஆதவன் மீன ராசியில் பிரவேசிக்கும் நாள் இது. இம்மாதம் முதல் நாளிலும், கடைசி நாளிலும் சூரிய பூஜை செய்ய வேண்டும். அதனால் தனதான்யம் அபிவிருத்தியாகும்.
சங்கராந்தி எனும் ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் பகலவனை வழிபட்டும், இயன்ற தானங்களை செய்தும் சூரிய பகவானின் திருவருளை பெறலாம்.