தை மாதம் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ‘தைப்பூசம்’ தான். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும்.
மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான் தை மாதமாகும். அந்த மாதத்தில் வரும் பூசத்தைத் தான் மாதப் பெயரோடு இணைத்து, ‘தைப்பூசம்’ என்று அழைக்கிறோம்.
அந்தத் திருநாளில் முருகப்பெருமானை வழிபட நினைப்பவர்கள், மார்கழி மாதத்தில் மாலைபோட்டுக் கொண்டு காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபடுவார்கள்.
ஐப்பசி மாதம் வரும் சஷ்டி திதியில்தான் முருகன் போராடி வெற்றிபெற்றார். அவருக்கு தாய், ஞான வேலை வழங்கிய நல்ல நட்சத்திரம் தான் பூச நட்சத்திரமாகும்.
போராட்டமான வாழ்வைப் பூந்தோட்டமாக மாற்றும் நட்சத்திரம் இதுவாகும். அந்த நட்சத்திரத் திருநாள் 18.1.2022 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் இல்லத்தில் இனிய சம்பவங்கள் ஏராளம் நடைபெறும்.
பொதுவாகவே எல்லோரும் ஒரு விருப்பம் நிறைவேற வேண்டுமென்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடுதான்.
தைப்பூசத்தன்று ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்குச் சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனிவரும் முருகப்பெருமானைக் கண்டு கோடிக்கணக்கான மக்கள் தரிசித்து வழிபடுவர்.
குன்றக்குடி, பழநி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை போன்ற ஆலயங்களில், அருகில் இருக்கும் கந்தப்பெருமானை பாத யாத்திரையாகச் சென்று வழிபட்டு வந்தால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.
இல்லத்தில் வழிபடுவோர் பஞ்சமுக விளக்கேற்றி, 5 வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை பரிமளப் பொருட்கள் வைத்து, 5 வகை பூக்களால் மாலை சூட்டி, 5 வகை நைவேத்தியம் படைத்து, 5 வகை பழங்கள் வைத்து, கந்தனின் துதிப்பாடல்கள் மற்றும் கவச பாராயணங்களை படித்தால், அவர் வேண்டும் வரம் அருள்வார்.