அண்ணாமலையின் அற்புதங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அண்ணாமலையின் அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :
 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட திருத்தலம்.

கரும்பு தொட்டில்

இத்தலத்து இறைவன் வல்லாள மகாராஜனின் வேண்டுகோள் படி அவருக்கு மகனாகப் பிறந்து அருள் வழங்கியதால் குழந்தைப்பேறு தரும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். இதனால் குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி ஆலயத்தைச் சுற்றி வருவது வழக்கம். இது அரிதான வேண்டுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இடுக்குப் பிள்ளையார்

கிரிவலப் பாதையில் மிகச்சிறிய பழமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாசலில் நுழைந்து, முன் வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இந்தக் கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி, சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

கம்பத்து இளையனார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ராஜகோபுரத்தை அடுத்து இடதுபுறம் இந்தச் சன்னிதி அமைந்துள்ளது. விஜயநகர மன்னனால் கட்டப்பட்டது. பிரபு தேவமகாராஜன் முன்னிலையில், அரசவைக் கவிஞர் சம்பந்தாண்டன் அருணகிரியிடம் ஆணவ சவால் விடுத்தான். எவரது கவிக்கு சக்தி இருக்கிறதோ, அவர்களுக்கு இறைவன் காட்சி கொடுப்பான் என்பது அவர்களுக்கிடையேயான போட்டி. அருணகிரி நாதர் தன் கவிப்பாடலில் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கிய முருகப்பெருமான், கம்பத்தில் தோன்றி அருணகிரிநாதருக்கும், அடியார்களுக்கும் அருள் புரிந்தார் எனப் புராணம் கூறுகிறது. அத னால் தான் இந்த இறைவன் கம்பத்து இளையனார் என்று அழைக்கப் படுகிறார்.

ஆலய தீர்த்தங்கள்

தீர்த்தங்கள் நிறைந்த தலமாக திருவண்ணாமலை திகழ்கின்றது. மலைப் பிரகாரத்தில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்ம தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம், முலைப்பால் தீர்த்தம் என தீர்த்தங்கள் நிறைந்துள்ளன. இந்த தீர்த்தங்களுக்கு எல்லாம் முதன்மையானவை, ஆலயத்துக்குள் இருக்கும் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமும் ஆகும். துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக விளங்குகின்றது.

கிளியாக மாறிய அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், முருகப்பெருமானின் சிறந்த பக்தர். இவர் பாடிய திருப்புகழ் புகழ்பெற்றது. முருக பக்தராக மாறும் முன்பு, அருணகிரிநாதர், சிற்றின்பத்தில் திளைத்து வாழ்ந்தவர். அதன் மூலம் மனம் உடைத்து தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வல்லாள மகாராஜகோபுரத்தில் இருந்து குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரைத் தாங்கி உயிர்காத்து அருள் செய்தார். ‘முத்தைத்தரு..’ என அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழை பாடவும் வழிவகுத்தார்.

ஒரு முறை வல்லாள மகாராஜனின் கண் நோய் தீர, இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத மலர் தேவைப்பட்டது. அதனைக் கொண்டு வரச் சென்றார் அருணகிரிநாதர். மனித உடலோடு செல்ல முடியாது என்பதால், கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தியைக் கையாண்டு, இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைச் செலுத்தினார்.

அருணகிரிநாதரின் உடல் ஓரிடத்தில் மறைவாக இருந்தது. இந்த நிலையில் அருணகிரிநாதரின் மீது பொறாமை கொண்டிருந்த, சம்பந்தாண்டன் அவரது உடலை எரித்து விட்டான். திரும்பி வந்த அருணகிரிநாதர் தன் உடலைக் காணாது கவலையுற்றார். பின்னர் கிளி உடலில் இருந்தபடியே கந்தரனுபூதி பாடினார். அதன் நினைவாகவே கிளி கோபுரமும், கிளியின் உருவமும் இன்றும் கோபுரத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top